கொழும்பு டெஸ்ட்: ரஹானே, புஜாரா சதம் விளாசல்!

இந்தியா - இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது. இந்திய தரப்பில் புஜாரா மற்றும் ரஹானே சதம் விளாசினர்.

புஜாரா

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்புவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அதிக ரன்கள் எடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் தொடக்க வீரர்களான தவான் மற்றும் ராகுல் களமிறங்கினர். இதில் தவான், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்தார். ஆனால், 37 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த போது அவர் பெரேராவின் பந்தில் எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய லோகேஷ் ராகுல், 82 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். 

ரஹானே

பின்னர் இறங்கிய புஜாரா, அவர் ஸ்டைலில் விளையாடி ரன்கள் குவிக்கத் தொடங்கினார். சீரான இடைவெளியில் பவுண்ட்ரிகள் ஸ்கோர் செய்து வந்த புஜாரா, 165 பந்துகளில் சதம் விளாசினார். இந்திய கேப்டன் விராட் கோலி 13 ரன்கள் மட்டுமே எடுக்க, ரஹானே புஜாராவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவரும் சதத்தைக் கடந்து அசத்தினார். ஆட்ட நேர முடிவில் புஜாரா 128 ரன்களும், ரஹானே 103 ரன்களும் எடுத்து தொடர்ந்து களத்தில் உள்ளனர். இந்தியா, ஆட்ட முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது. மூன்று  டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!