Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினம் 16 மணிநேர உழைப்பு... பரிசு, டேபிள் டென்னிஸில் தங்கம்! - யாஷினியின் வெற்றி ரகசியம்

யாஷினியின் அன்றாட வாழ்க்கை, காலை 4 மணிக்குத் தொடங்கும். மைதானத்துக்குள் அரை இருளில் நுழையும் யாஷினி, வியர்வை வழிய வழிய ஃபிட்னஸ் பயிற்சிகளில் ஈடுபடுவார். பளபளவென விடியும்போது மைதானத்தைவிட்டே வெளியேறும் யாஷினி, மீண்டும் வீட்டுக்கு வந்து தாய்க்கு உதவியாக உணவு சமைக்கும் வேலைசெய்வார். பிறகு, சாப்பாடு கட்டிக்கொண்டு அரக்கப்பரக்கப் பள்ளிக்கு ஓட்டம். மதியம் லன்ஞ்சுக்குப் பிறகு அரக்கோணத்தில் ரயில் பிடிக்கும் யாஷினி, மாலை 3 மணியளவில் சென்னை வருவார். சென்ட்ரலிலிருந்து பஸ் பிடித்து சேத்துப்பட்டில் உள்ள டேபிள் டென்னிஸ் பயிற்சி மையத்துக்குச் செல்வார். அங்கு நான்கு மணி நேரம் தீவிரப் பயிற்சி. 

டெபிள் டென்னிஸ் வீராங்கனை யாஷினி

மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் ரயில் பயணம். வீடு போய்ச் சேர, இரவு 11 மணியாகிவிடும். அடித்துப்போட்ட மாதிரி உறக்கம் வரும். சரி, இந்த யாஷினி எப்போதுதான் படிப்பார்? ரயிலில் போகும் நேரம்தான் யாஷினியின் ஸ்டடி ஹவர். ஹோம்வொர்க்கூட ரயிலிலேயே முடித்துவிடுவார். பத்து வயதே நிரம்பிய யாஷினியின் ஒருநாள் ஷெட்யூல் இது. நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உழைத்த யாஷினிக்கு, உழைப்பின் கனி இப்போது கிடைத்திருக்கிறது. ஜோர்டானில் நடந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற யாஷினி, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

ஏழ்மையான குடும்பப் பின்னணியைக்கொண்ட யாஷினியின் தந்தை சிவசங்கர்,  அரக்கோணம் ரயில்நிலையம் அருகே செருப்புக் கடையை நடத்திவருகிறார். ``உங்க மகளை எப்படி டேபிள் டென்னிஸ் விளையாட பழக்குனீங்க?'' என்று அவரிடம் கேட்டால்...

``எனக்கு என்னய்யா தெரியும். என் கடைக்கு வர்ற கஸ்டமர் ஜனார்த்தனன் சார் என்னோட நண்பர். அவர்தான் யாஷினி ரெண்டாம் க்ளாஸ் படிச்சுட்டிருந்தப்பவே டேபிள் டென்னிஸ் விளையாடப் பழக்கினார். அவளோடு சேர்ந்து நானும் காலையிலேயே கண் விழிச்சுடுவேன். அரை இருளில் கிரவுண்டுல ஃபிட்னஸ் பயிற்சி பண்ணிட்டிருப்பா. நான் பாதுகாப்புக்கு இருப்பேன். அப்புறம் பள்ளிக்குக் கொண்டுபோய் விடுவேன். ஆறாம் வகுப்பிலிருந்து தனியாகவே சென்னைக்குப் பயிற்சிக்குப் போக ஆரம்பிச்சுட்டா. நைட் வீட்டுக்கு வர்ற வரைக்கும் நான் உயிரைக் கையில பிடிச்சுட்டுத்தான் இருப்பேன்.  இப்போ என் மக ஜெயிச்சுக்காட்டியிருக்கா. நிற்கக்கூட நேரமில்லாம ஃப்ளைட்லதான் போறா வர்றா'' என வெள்ளந்தியாகக் கூறுகிறார். 

டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ய யாஷினி

அரக்கோணத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்த யாஷினியை, கோச் ஜனார்த்தனன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள டேபிள் டென்னிஸ் பயிற்சி மையத்துக்கு அனுப்பிவைத்தார். அப்படித்தான் யாஷினியின் ரயில் வாழ்க்கையும் தொடங்கியது. சென்னையில் பயிற்சியாளர்கள் ரவி வெங்கடேஷ், வாசு ஆகியோர் யாஷினியைப் பட்டைத்தீட்டினர். ஆறாம் வகுப்பு முதலே தேசிய அளவில் டெபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்த யாஷினி, முதல் போட்டியிலேயே வெண்கலமும் வென்றார் .

ஜோர்டானில் அண்மையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேசப் போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் நான்கு பேர் தேர்வுசெய்யப்பட்டிருந்தனர். தமிழகத்திலிருந்து யாஷினி மட்டுமே குழுவில் இடம்பெற்றிருந்தார். ஜோர்டானில் தங்கம் வென்ற பிறகுகூட, தொடர்ச்சியான போட்டிகள் காரணமாக அவரால் தமிழகம் திரும்பி பெற்றோர், பயிற்சியாளர்கள், நண்பர்களுடன் வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. தற்போதுகூட டெல்லியில் நடந்துவரும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியன் ஆயில் அணிக்காக விளையாடிவருகிறார். 

யாஷினியை போனில் பிடித்தோம்... ``சத்தியமா இந்த வெற்றிக்கு நான் மட்டும் காரணம் இல்லை. எனக்கு உதவி செஞ்சவங்க பட்டியல் அவ்வளவு நீளம். சின்ன வயசுல அரக்கோணம் விவேகானந்தா பள்ளியிலிருந்து சென்னை மகரிஷி பள்ளி வரை எனக்கு அவ்ளோ பேர் உதவியிருக்காங்க. விவேகானந்தா பள்ளியில அஞ்சு பைசா எங்கிட்ட ஃபீஸ் வாங்கலை. அதுமாதிரி கோச்சுகளும் எனக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்காங்க. ஃப்ரெண்ட்ஸ்ங்கதான் எனக்கு நோட்ஸே எழுதிக் கொடுப்பாங்க. அப்படித்தான் நான் படிச்சேன். எங்க அப்பா அவரோட வாழ்க்கையையே எனக்காக அர்ப்பணிச்சுட்டார். எந்தப் போட்டி நடந்தாலும் தொடங்குறதுக்கு முன்னாடி அப்பாகிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டேன்னா எனக்கு பெரிய பூஸ்ட் கிடைச்ச மாதிரி'' எனக் கூறும் யாஷினி, படிப்பிலும் கில்லிதான். ப்ளஸ் டூ-வில் அவர் எடுத்த மதிப்பெண் 1,129.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement