வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (05/08/2017)

கடைசி தொடர்பு:11:43 (05/08/2017)

இலங்கை கேப்டன் சண்டிமாலின் புதிய கோரிக்கை

’டெஸ்ட்  போட்டிகளின்போது காயத்தால் அவதிப்படும் வீரர்களுக்குப் பதிலாக களமிறங்கும் மாற்றுவீரர்களுக்கும் பேட்டிங் மற்றும் பந்துவீச வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்’ என்று இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் வலியுறுத்தியுள்ளார். 

சண்டிமால்

இதுதொடர்பாகப் பேசிய அவர், போட்டி தொடங்கி முதல் 60 நிமிடங்களுக்குள் வீரர்கள் காயமடைந்தால், அவர்களுக்குப் பதிலாக களமிறங்கும் வீரர்களுக்குப் பேட்டிங் மற்றும்  பந்துவீச வாய்ப்புகள் வழங்கும் வகையில் விதிகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்திய அணிக்கு எதிராக காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த இலங்கை வீரர் அசேலா குணரத்னே போட்டி முழுவதும் பங்கேற்கவில்லை என்பதையும் சண்டிமால் சுட்டிக் காட்டினார்.

மாற்று வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கும்படியாக விதிகள் திருத்தப்பட்டால் எங்களது அணி மட்டும் பயனடையும் என்பதல்ல, எதிர்காலத்தில் மற்ற அணிகளும் இந்த விதியால் பயன்பெறும் என்றும் சண்டிமால் தெரிவித்தார். நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் காலே டெஸ்டில் பங்கேற்கவில்லை. காய்ச்சலில் இருந்து குணமடைந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு இன்ஹேலர் பயன்படுத்த ஐசிசி சிறப்பு அனுமதி அளித்திருந்தது. இதற்காக ஐசிசிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.     

- தினேஷ் ராமையா