வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (06/08/2017)

கடைசி தொடர்பு:08:38 (07/08/2017)

’பதக்கம் வேண்டாம், எல்லையில் அமைதி நிலவினால் போதும்’: சீன வீரரை வீழ்த்திய விஜேந்தர் உருக்கம்!

தொழில்முறையிலான குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் ‘ஆசிய பசிபிக்’ பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

விஜேந்தர் சிங்

இந்தியக் குத்துச்சண்டை வீரரான விஜேந்திர சிங், கடந்த 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 'மிடில்வெயிட்' பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர். 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டியிலும் இதே பிரிவில் தங்கம் வென்றுள்ளார். தற்போது ஹரியானா போலீஸ் துறையில் டி.எஸ்.பி பதவியில் இருக்கும் அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குத்துச்சண்டை போட்டியில் இருந்து விலகி தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கப் போவதாக அறிவித்தார்.

இதைதொடர்ந்து நடைபெற்ற பல தொழில்முறையிலான போட்டிகளில் விஜேந்தர் சிங் பல பதக்கங்களையும் வெற்றிகளையும் குவித்துள்ளார். மும்பையில் நேற்று நடந்த தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் சீனாவின் ஜூல்பிகர் மைடியாலியாவுடன் மோதினார். கடுமையான பத்து சுற்றுகள் நிறைந்த மோதலுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக ‘ஆசிய பசிபிக் மிடிவெய்ட் சாம்பியன்ஷிப்’ பட்டத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் தொழில்ரீதியான போட்டிகளில் விஜேந்தர் ஒன்பதாவது பட்டம் பெற்றுள்ளார்.

சீன வீரரை வென்றது குறித்து விஜேந்தர் சிங் கூறுகையில், ‘எனக்குப் பதக்கம்கூட வேண்டாம். இந்திய- சீன எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறைந்து அமைதி நிலவினால் போதும்’ என்றார்.