துரத்துதே தொடர் தோல்விகள்! - தென்னாப்பிரிக்காவுக்கு என்னதான் ஆச்சு?

தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மூன்று ஒருநாள் போட்டிகள், சாம்பியன்ஸ் டிராபி, மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சென்றிருந்தது. 

ஒருநாள் போட்டித் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. 1-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது. அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பாகிஸ்தான், இந்தியா என இரண்டு அணிகளிடமும் தோற்றது. லீக் சுற்றில் மூன்றில் இரண்டு போட்டிகளில் தோற்றதால் தென்னாப்பிரிக்க அணி அரை இறுதிக்குக் கூடத் தகுதி பெற முடியவில்லை. டிவில்லியர்ஸ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவரைக்  கேப்டன் பதவியைவிட்டு விலகச் சொல்லி அழுத்தங்கள் அதிகரித்தன. இந்நிலையில், இளம் வீரர்களை வைத்துக்கொண்டு டி20 தொடரில் விளையாடினார். டி20  தொடரிலும் தென்னாப்பிரிக்க அணி 1 -2  என்ற கணக்கில் தோற்றது. 

வரிசையாக தொடர் தோல்விகள் துரத்தியதால் கேப்டன் டிவில்லியர்ஸ்  உடனடியாகச் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் போட்டிகள் குறித்தும், கேப்டன்சி குறித்தும் புது பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகத்துடன் கலந்துபேசி முடிவெடுக்கவுள்ளதாக தெரிவித்தார். 

இந்த நிலைமையில்தான் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர் துவங்கியது. முதல் போட்டியில் ஃபாப் டு பிளசிஸ் விளையாடவில்லை. டீன் எல்கர் கேப்டன் பதவியை ஏற்றார். டாப் ஆர்டர் விக்கெட்டுகள் சரிந்தாலும் முதல் இன்னிங்சில் கேப்டன் ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தால் (190 ரன்கள்) இங்கிலாந்து அணி 458 ரன்களைக் குவித்தது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த மேட்சில் தனது இரண்டாவது இன்னிங்சில் எல்கர் தலைமையிலான அணி வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

தென் ஆப்ரிக்கா VS இங்கிலாந்து

தொடர் தோல்விகளால் தென்னாப்பிரிக்க அணி மீது கடும் விமர்சனம் எழுந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. டு பிளசிஸ் அணிக்குத் திரும்பினார். கேப்டன் பதவியையும் ஏற்றார். மேட்சில் முதலில் பேட்டிங் செய்தது டு பிளசிஸ் அணி. அந்த டெஸ்ட் போட்டியில் 340 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி. தொடர் தோல்விகளுக்குப் பிறகு மீண்டு வந்து அபாரமான வெற்றியைப் பெற்றதால் தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு மீண்டும் நம்பிக்கைத்  துளிர்த்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் பிடித்த இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்சின் அபாரமான  சதத்தால் 353  ரன்களைக் குவித்தது. தென்னாப்பிரிக்கா  பேட்டிங் பிடித்தபோது 175 ரன்களில் முடங்கியது. அந்த டெஸ்ட் போட்டியில் 492 ரன்கள் என்ற மிரட்டலான இலக்கைத் தென்னாப்பிரிக்காவுக்கு வைத்தது ரூட் அணி. எல்கர் தனது கேரியரில் மிகச்சிறந்த சதம் ஒன்றை விளாசினார். எனினும் அந்த அணியால் 252 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.  மூன்றாவது டெஸ்டில் 239 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றதால் தொடரிலும் 2-1 என முன்னிலைப் பெற்றது  இங்கிலாந்து அணி. 

நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. ஒன்று டிரா செய்ய வேண்டும் அல்லது மேட்சை வெல்ல வேண்டும் என்ற நோக்குடன் ரூட் அணியும் களம் கண்டது. மான்செஸ்டரில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் பிடித்தது இங்கிலாந்து அணி. பேர்ஸ்டாவின் 99 ரன்கள்  உதவியுடன் 362 ரன்கள் குவித்து. 

முந்தைய மூன்று  போட்டிகளைப் போன்றே இந்த மேட்சும் நடந்து முடிந்தது. டாஸ் வென்று 350 ரன்களுக்கு மேல் இலக்கு வைப்பது. எதிரணிக்கு 400 ரன்களை சேஸிங் செய்யச் சொல்லி ஆணையிடுவது, பிறகு எளிதில் சுருட்டி மெகா வெற்றி பெறுவது என அதே  கதை தான் இங்கேயும்! 

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 226 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி மொயின் அலியின் அதிரடி ஆட்டத்தால் 243 ரன்கள் சேர்த்தது. 380 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் மிகக் கடினமான இலக்கை நோக்கி ஆடிய டு பிளசிஸ் அணியை 202 ரன்களில் அடக்கினார் மொயின் அலி. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளையும் மொயின் அலி ஜெயித்தார். 

இருபது ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா இப்படியொரு மோசமானச் சுற்றுப்பயணத்தைச் சந்திக்கவில்லை. தொடர்ந்து இரண்டரை மாதங்கள் அடி மேல் அடி வாங்கியிருக்கிறது. டிவில்லியர்ஸ் என்ன முடிவை எடுக்கவுள்ளார் எனத் தெரியவில்லை. இந்த சிக்கலானச் சூழ்நிலைகளில் இருந்து தென்னாப்பிரிக்கா விரைவில் மீண்டு வருமா ? தென்னாப்பிரிக்காவின் தொடர் தோல்விகளுக்கு நீங்கள் எதை காரணமாகச் சொல்வீர்கள் என்பதை கமென்ட்டுகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!