வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (09/08/2017)

கடைசி தொடர்பு:11:35 (09/08/2017)

ஜடேஜாவுக்குத் தடை... இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல்!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில், ஜடேஜாவுக்குப் பதில் அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். 


ஐ.சி.சி ஒழுங்கு விதிமுறைகளை மீறியதாக ஜடேஜாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இதனால், கண்டியில் வரும் 12-ம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜடேஜாவுக்கு மாற்று வீரராக இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அக்‌ஷர் பட்டேல் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் நடந்த ஏ அணிகளுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடரில், சொந்த மண்ணில் அந்த அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற  இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த அக்‌ஷர் படேல், இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என்று தெரிகிறது. 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் வென்றுவிட்டது. கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில்,  ஆட்ட நாயகன் விருதுவென்ற ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்