வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (09/08/2017)

கடைசி தொடர்பு:16:19 (09/08/2017)

விவேக வியூகங்கள்... தொடர் டெஸ்ட் வெற்றிகள்... மெர்சல் காட்டும் கோலி #ViratKohli

இன்றோடு 942 தினங்கள் முடிந்துவிட்டன. கடைசியாக 2015 ஜனவரி பத்தாம் தேதி வெள்ளை ஜெர்சி கிரிக்கெட்டில் எதிரணியிடம் கோப்பையைப் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக நின்றது இந்திய அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடர் முடிந்த போது இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருந்தது. மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட் வேண்டாம் என ஒதுங்கினார். 

தோனி

விராட் கோலி அப்போதுதான் கொஞ்சம் நல்ல பேட்ஸ்மேனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் உருவெடுத்துக்கொண்டிருந்தார். இஷாந்த் ஷர்மாவைத் தவிர ஐம்பது டெஸ்ட் போட்டிகள் ஆடிய வீரர் எவருமே அணியில் இல்லை. இளம் வீரர்கள் நிரம்பிய இந்திய அணி 26 வயது இளம் வீரரான விராட் கோலியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

நாள்கள் உருண்டோடின. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வங்கதேசம் என அத்தனை அணிகளுடனும் இந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி முடித்திருக்கிறது இந்திய அணி. இந்த இரண்டு ஆண்டுகளில் இருபத்தி ஏழு  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்திருக்கிறது கோலியின் படை. இதில் இரண்டு தோல்விகள். பத்தொன்பதில் வெற்றி. தொடர்ந்து எட்டு டெஸ்ட் தொடரில் மாபெரும் வெற்றி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடம் என அத்தனையையும் சாதித்திருக்கிறது கோலி தலைமையிலான இந்தியா. இது மகத்தான சாதனை. நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய சாதனை. எப்படி நடந்தது இந்த மாற்றம்? என்ன நடந்தது இந்த இரண்டு ஆண்டுகளில்? 

கடந்த 2013 ஆண்டு பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட தென் ஆப்பிரிக்காவுக்குப்  பயணபட்டது தோனி தலைமையிலான இந்தியா. அங்கிருந்து தொடர் தோல்விகள் தொடங்கின. நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என நல்ல அணிகளிடம் வகை தொகை இல்லாமல் உதை வாங்கியது. அந்தத் தோல்விகள் முடிந்த கையோடு உலகக் கோப்பையிலும் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் சாஷ்டாங்கமாக விழுந்தது தோனி தலைமையிலான இந்திய அணி. 

2015 ஜூனில் வங்கதேசத்துக்குச் சென்றது இந்தியா. ஒரே ஒரு போட்டிக் கொண்ட அந்த டெஸ்ட் தொடர் மழையால் டிரா ஆனது. அடுத்ததாக இலங்கை மண்ணில் கால் வைத்தது. அப்போது இலங்கை அணியில் சங்கக்காரா, சந்திமால், ஹெராத், மேத்யூஸ் என நல்ல வீரர்கள் இருந்தனர். இலங்கை மண்ணில் அந்த அணியை வெல்வது சிரமம் என்பதால் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள் இருப்பது போலத் தெரியவில்லை. இலங்கை அணியே தொடரை வெல்லும் எனப் பலரும் கணித்திருந்தார்கள். முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் 192 ரன்கள் முன்னிலையில் இருந்தது இந்திய அணி. 

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 95 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. மேட்ச் இந்தியாவுக்குத்தான். அதுவும் இன்னிங்ஸ் வெற்றி கூட சாத்தியமே எனும் நிலைமை நிலவியது. அப்போது அந்த மேட்சில் இலங்கை வெற்றி பெறும் என சொல்லியிருந்தால் சங்கக்காராவே நம்பியிருக்க மாட்டார். ஆனால் அந்த மேஜிக் நடந்தது. 

இரண்டாவது இன்னிங்சில் சந்திமால் அவரது கேரியரின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். கிட்டத்தட்ட லட்சுமணனின் 281ஐ போன்ற ஆட்டம் அது. இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி பெறும் அபாயத்திலிருந்து மீண்டு வந்ததோடு 82.2 ஓவர்களில் 367 ரன்களைக் குவித்தது. சந்திமால் 169 பந்தில் 162 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு வெற்றி இலக்கு வெறும் 176 ரன்களே. ஆனால் அந்த இன்னிங்சில் இஷாந்த் ஷர்மா எடுத்த பத்து ரன்களைக் கூட ரோகித் ஷர்மா, விராட் கோலி, ராகுல், சாகா, அஷ்வின் போன்றவர்களால் எடுக்க முடியவில்லை. ஹெராத் சுழல் வலையில் சிக்கி சின்னாப்பின்னமானது கோலியின் படை. 

63 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது. ஹெராத் இரண்டாவது இன்னிங்சில் ஏழு பேருக்கு டாட்டா சொன்னார். அந்த மேட்ச் முடிந்தப் பிறகு இந்தியா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 'இவங்க இனி தேறவே மாட்டாங்க' , 'வாஷ் அவுட் ஆகிட்டுத்தான் ஊருக்கு வருவாங்க' என நம்பிக்கையற்ற குரல்கள் கோடிக்கணக்கில் கேட்டன. ஆனால், கேப்டன் விராட் கோலி மட்டும் அணி சரியான பாதையில்தான் செல்கிறது என்றார். அவர் சொன்னபடியே நடந்தது. 

இரண்டாவது டெஸ்டில் 278 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி. மூன்றாவது டெஸ்டில் 117 ரன்கள் வித்தியாசத்தில் மேட்சையும் வென்று, கோப்பையையும் தூக்கினார் விராட் கோலி. இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா. 1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு இவ்வளவு ஆண்டுகள் தேவைப்பட்டது. இப்போது 22 ஆண்டுகள் என்ற இடைவெளி வெறும் 2 ஆண்டுகளாகியிருக்கிறது. இலங்கை மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்ற ஒரே சமர்த்துக் கேப்டன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் கோலி. 

விராட் கோலி

இந்தியா உள்நாட்டில் தானே டெஸ்ட் தொடர் ஆடி வென்றது. செத்த பாம்பை அடித்ததில் என்ன பெருமை என கேள்விகள் எழலாம். ஆனால் நிஜம் அதுவல்ல. 2015 இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் ஆடியது இந்தியா. அன்றைய தேதியில் தென் ஆப்பிரிக்க அணி ஒன்பது ஆண்டுகளாக அயல் மண்ணில் எந்தவொரு டெஸ்ட் தொடரையும் தோற்காமல் சாதனை படைத்திருந்தது. சொந்த மண்ணில் ஒன்பது ஆண்டுகள் தோற்காமல் இருந்தாலே மிகப்பெரிய சாதனைதான். ஆனால் அயல்மண்ணில் ஒன்பது ஆண்டுகளாக தோற்காமல் கிரிக்கெட் உலகில் பவனி வருவதெல்லாம் வேற லெவல் !

தோனி தலைமையிலான இந்திய அணியை டி20 தொடரிலும், ஒருநாள் தொடரிலும் நசுக்கியிருந்தது டி வில்லியர்ஸ் படை. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா நடுங்கக்கூடும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் கிரிக்கெட்டைத் தொடர்ச்சியாக கவனிப்பவர்கள். ஏனெனில் அப்போது தென் ஆப்பிரிக்காதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணி.  டு பிளசிஸ், ஆம்லா, டி வில்லியர்ஸ், ஸ்டெயின், தாகீர் என பயம் காட்டியது தென் ஆப்பிரிக்கப் படை. கோலி தலைமையிலான இந்திய அணி நம்பிக்கையோடு ஆடியது; ஆக்ரோஷமாக ஆடியது. முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் கோலி அணியிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போனது ஆம்லா அணிக்கு. கடைசி டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா ஆகச்சிறந்த பிளாக்கத்தான் இன்னிங்ஸ் ஆடியது. டி வில்லியர்ஸ் 297 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.. ஹாஷிம் ஆம்லா 244 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். 

டி வில்லியர்ஸ்

அந்த இருவருக்கும் அன்றைக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. இந்தியா வென்றது. தரவரிசையில் ஏணிப்படிகளில் 'மல'டா என ஏறியது. தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. அந்த டெஸ்ட் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்கா பெரும் சறுக்கல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அஷ்வின், சாகா சதமடித்தார்கள். எளிதாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா திரும்பியது கோலி அணி. நியூசிலாந்தை அசால்ட்டாக டீல் செய்தது. அலட்டிக் கொள்ளாமல் தோற்று வந்தசுவடு தெரியாமல் ஊருக்குப் போய்ச் சேர்ந்தது கிவி அணி. 

இங்கிலாந்து ஏற்கெனவே இந்திய அணியை இந்திய மண்ணில் வைத்துச் செய்திருந்தது. இப்போது இந்தியா 'டான்' ஆக  உருவெடுத்துக் கொண்டிருந்த காலகட்டம். வழக்கமாக இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் இளக்காரமாகவே கருதி அதிகப்படியாக விமர்சிக்கும் அயல்நாட்டு எழுத்தாளர்கள் அடக்கி வாசித்தார்கள். ஆனால் கங்குலி கொக்கரித்தார். இங்கிலாந்து வாஷ் அவுட் ஆகும் என்றார். ராஜ்கோட் முதல் சென்னை வரை நடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நான்கில் தோற்றது இங்கிலாந்து. சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்தை வென்ற பின்னர்  ''இதுதான் எனது கேப்டன்சியில் சிறந்த தொடர் வெற்றி'' என்றார் கோலி.

விராட் கோலி

ஆஸ்திரேலியா இங்கே வந்தபோது, ஸ்மித் அணி வலுவான அடி வாங்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களே கவலைப்பட்டார்கள். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே வென்று அதிர்ச்சி தந்தது ஆஸி. கோலி சுதாரித்தார்; ரஹானே முடித்து வைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 அணியாக கெத்தாக அமர்ந்து ஐசிசியின் பரிசைத் தட்டியது இந்தியா. இடையில் வங்கதேசம் வேறு வந்ததையும், கிளம்பு காத்து வரட்டும் என்ற ரேஞ்சில் அந்த அணியை இந்தியா வென்றதையும் இங்கே பதிவு செய்வதும் அவசியம். இப்போது இந்தியா இலங்கைக்குச் சென்றிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியா புயல் வேகத்தில் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது. இலங்கை அணியை வாஷ் அவுட் செய்யவில்லை என்றால் மட்டுமே நாம் வருத்தப்பட வேண்டும். நம் கவலை எல்லாம் புயல் வேகத்தில் செல்லும் கோலிக்குக் குறுக்கே லாரி போல தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, நியூசிலாந்து சுற்றுப்பயணங்கள் அமைந்துவிடக்கூடாது என்பதே. இந்த நான்கு அணிகளையும் கோலி அவர்களது மண்ணில் வீழ்த்தினால், சந்தேகமேயில்லை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன் அவர்தான்.


டிரெண்டிங் @ விகடன்