'என் சிறு வயதை நினைவுபடுத்துகிறார் சுரேஷ் ரெய்னா!' - நெகிழ்ந்த ஜான்டி ரோட்ஸ் | Suresh Raina reminds me of younger me, Jonty Rhodes

வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (09/08/2017)

கடைசி தொடர்பு:15:23 (09/08/2017)

'என் சிறு வயதை நினைவுபடுத்துகிறார் சுரேஷ் ரெய்னா!' - நெகிழ்ந்த ஜான்டி ரோட்ஸ்

சென்னை ஆலப்பாக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட்டின் 'ஃபீல்டிங் பிதாமகன்' என்று வர்ணிக்கப்படுபவருமான ஜான்டி ரோட்ஸ் வருகை தந்திருந்தார். அப்போது, விளையாட்டுத்துறையில் சாதித்த பள்ளி மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

ஜான்டி ரோட்ஸ்

கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டபோது, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போதுதான், ஜான்டியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாம் இன்னிங்ஸ் ஆரம்பித்தது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொர் ஆண்டும் நடக்கும்போது, கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஜான்டி இந்தியாவில் முகாமிட்டுவிடுவார். மும்பை இந்தியன்ஸ் அணி, ஐ.பி.எல் போட்டிகளில் தொடர்ச்சியாக சாதிக்க, அவர்களின் ஃபீல்டிங்கும் பெரும்பங்காற்றியது. இதனால், ஜான்டியின் புகழ் உச்சம் தொட்டது. ஆண்டின் பல மாதங்கள் இந்தியாவிலேயே தங்கிவிடும் சூழலால், இந்தியா மீது அவருக்குத் தீரா காதல் உருவாகியுள்ளது. இந்தக் காதல், அவரது மகளுக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டும் அளவுக்கு வளர்ந்தது. இப்போது, டி.என்.பி.எல் தொடரில் பங்குபெறும் திருச்சி அணியின் வழிகாட்டியாகவும், விளம்பரத் தூதராகவும் தமிழகத்தை ஒரு ரவுண்டு அடித்துக்கொண்டிருக்கிறார் ஜான்டி. படு உற்சாகமாக இருந்த ஜான்டியிடம், பள்ளி மாணவர்கள் சுட்டித்தனமான கேள்விகளை விடுத்தனர். தனக்கே உண்டான துடுக்கத்தனத்துடன் பதிலளித்தார் ஜான்டி.

எடுத்த எடுப்பில், 'இந்திய கிரிக்கெட் வீரர்களில் உங்களுக்குப் பிடித்த ஃபீல்டர் யார்' என்ற கேள்விக்கு, 'முகமது கய்ஃப், யுவராஜ் சிங் போன்றவர்கள் இந்திய கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்த்தியவர்கள். தற்போது இருக்கும் அணியில், நிறைய நல்ல ஃபீல்டர்கள் இருக்கின்றனர். விராட் கோலி ஃபீல்டிங் ஓ.கே. தான். ஆனால், சுரேஷ் ரெய்னாதான் இந்திய ஃபீல்டர்களில் 'தி பெஸ்ட்'. அவர், சிறு வயது ஜான்டியை எனக்கு நினைவுபடுத்துகிறார்' என்று நெத்தியடியாகச் சொன்னவரிடம்,

ஜான்டி ரோட்ஸ் முகமுடி அணிந்துள்ள பள்ளி குழந்தைகள்

'சச்சினின் சாதனைகளை கோலி உடைப்பாரா' என்று அடுத்த கேள்வி பாய்ந்தது, 'சச்சின், 16 வயதில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர், கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினார். ஆனால், கோலியால் அத்தனை ஆண்டுகள் விளையாட முடியுமா என்பது கேள்விக்குறியே. எனவே, சச்சினின் சாதனைகளை கோலி முறியடிப்பது கடினம் என்றுதான் நினைக்கிறேன்' என்றார்.

இறுதியாக, 'ஒரு செயலில் சிறப்புற, 'தொடர் பயிற்சி அவசியம்' என்று சொல்வார்கள். அதில் பாதி உண்மை இருக்கிறது. வெறும் பயிற்சி போதாது. சரியான பயிற்சியே சிறப்பாகச் செயல்பட உதவும். எந்தவித தோல்வி பயமும் இல்லாமல் வாழ்க்கையை அணுகுங்கள். வாழ்க்கை உங்கள் வசமாகும்' என்று பேச்சை முடித்து, மின்னல் வேகத்தில் புறப்பட்டார் ஜான்டி.