வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (10/08/2017)

கடைசி தொடர்பு:11:49 (10/08/2017)

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான பிராட் ஹாடின்!

ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார். 

பிராட் ஹாடின்

2019ம் ஆண்டு இறுதிவரை அவர் பதவி வகிப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் டேரன் லீமேனுடன் இணைந்து அவர் பணியாற்ற உள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2015-ல் ஹாடின் ஓய்வுபெற்றார். ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் கில்கிறிஸ்ட் இருந்ததால், தனது 30 வயது வரை விக்கெட் கீப்பராக அணியில் இணையக் காத்திருந்த ஹாடின், இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிராட் ஹாடின், இளம் அணியுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற பின்னர் ஆஸ்திரேலிய ஏ அணி மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்கும் இஸ்லாமாபாத் ஆகிய அணிகளின் பயிற்சியாளராக ஹாடின் இருந்து வந்தார். ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இதுவரை இருந்து வந்த க்ரேக் ப்ளீவெட்,  அந்நாட்டு ஜூனியர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கிறார். இதனால், ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து அந்த பதவிக்கு பிராட் ஹாடினை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.