Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆண்டனி தாஸ் மிரட்டல்... திருச்சியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்! #TNPLUpdate

மழையால் 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (TNPL) 22-வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ருபி திருச்சி வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்த இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் அதிரடிக்கு பஞ்சமில்லை. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

TNPL - ஆண்டனி தாஸ்

திருச்சி அணிக்கு பாபா இந்திரஜித் மற்றும் பரத் சங்கர் ஜோடி நல்ல தொடக்கம் தந்தது. இருவரும் நாலாபுறமும் பவுண்டரிகளாக விளாசினர். பரத் சங்கர் ஐந்து பவுண்டரிகளும் இந்திரஜித் நான்கு பவுண்டரிகளும் விளாச 5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 43 ரன்கள் திரட்டியது. ஆறாவது ஓவரை வீசிய அலெக்சாண்டர் தன் இரண்டாவது பந்தில் பரத் சங்கரை வெளியேற்ற 8 வது ஓவர் வரை பவுண்டரியே இல்லை. 

ஒன் டவுன் இறங்கிய அகில் ஸ்ரீநாத் இந்திரஜித்துடன் இணைந்து  மட்டையைச் சுழற்ற ரன்ரேட் ஏறத் தொடங்கியது. எட்டாவது ஓவரில் ஸ்ரீநாத் ஒரு சிக்ஸர் விளாச, தன் பங்குக்குக் கடைசி இரு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் இந்திரஜித். ஒன்பதாவது ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர் விளாசிய ஸ்ரீநாத், அடுத்த ஓவரிலேயே யோ மகேஷ் பந்துவீச்சில் சாய் கிஷோரிடம் கேட்ச்  கொடுத்து வெளியேறினார். 34 ரன்கள் எடுத்த நிலையில் இந்திரஜித்தும் அவுட்டாக, சென்னை அணியின் கை ஓங்கத்தொடங்கியது. 

ரன் விகிதத்தை வெகுவாக குறைத்தனர் சென்னை பெளலர்கள். நான்காவது விக்கெட்டுக்கு இறங்கிய கெளசிக்கும் 13 ரன்களில் வெளியேற 15 அது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது திருச்சி  அணி. அடுத்து இறங்கிய ஆதித்யா கிரிதர், சாய் கிஷோரின் 16 வது ஓவரில் பேக் டு பேக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அதே ஓவரிலேயே வெளியேறினார். கடைசி ஓவரை வீசிய யோ மகேஷ் மூன்றாவது பந்தில் நிலேஷ் சுப்ரமணியத்தையும் கடைசி பந்தில் மூர்த்தி பிரபுவையும் வெளியேற்ற இன்னிங்க்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது திருச்சி அணி. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபா இந்திரஜித் 34 ரன்கள் எடுத்தார். சென்னை சார்பில் யோ மகேஷ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

133 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு கோபிநாத் மற்றும் தலைவன் சற்குணம் ஜோடி சூப்பர் தொடக்கம் அளித்தது. கோபிநாத் பவுண்டரிகளாக விளாச தலைவன் சற்குணம் சிக்ஸர்களாக பறக்க விட்டார். இருவரின் ஆட்டமும் அருமையாக இருக்க, சென்னை அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது.

ஒரு வழியாக திருச்சி அணியின் கெளசிக் ஜோடி திருப்பத்தை ஏற்படுத்தியது. ஜெகதீசன் கெளசிக்கின் 9 வது ஓவரில் தலைவன் சற்குணம் கேட்ச் ஆகி வெளியேற, ஜெகநாதன் கெளசிக்கின் 10-வது ஓவரில் கோபிநாத் போல்டாகி வெளியேறினார். ஒன் டவுன் இறங்கிய சரவணன் ரன்கள் எடுக்காமலேயே ரன் அவுட் ஆக 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்தது. நான்காவது விக்கெட்டுக்கு இறங்கிய ஆண்டணி தாஸ் சிக்சர் மழை பொழிய ஆட்டம் சென்னையின் கைகளில் விழத்தொடங்கியது. 

மூர்த்தி பிரபுவின் 11 வது ஓவரில் ஆண்டனி தாஸ் பேக் டு பேக் சிக்ஸர்கள் அடிக்க மறுமுனையில் இருந்த சசிதேவும்  நல்ல கம்பெனி கொடுத்தார். ஆண்டனி தாஸ் மேற்கொண்டு இரண்டு பவுண்டரி  ஒரு சிக்ஸர் விளாச, தன் பங்குக்கு ஜேசுதாஸின் 15 வது ஓவரில் டபுள் சிக்ஸர் அடித்தார் சசிதேவ். 12 பந்துகளுக்கு 5 ரன்களே தேவைப்பட்ட நிலையில் விக்னேஷின் 16-வது ஓவரின் இரண்டாவது பந்தில் சசிதேவ் கேட்ச் கொடுக்க, நான்காவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பி ஆட்டத்தை கூலாக முடித்துவைத்தார் ஆண்டனி தாஸ். சென்னை அணி சார்பில் ஆல் ரவுண்டர் ஆண்டனி தாஸ் 39 ரன்களும் தலைவன் சற்குணம் 42 ரன்களும் விளாசினர். ஆட்டத்தை ஃபினிஷிங் செய்த ஆண்டனிதாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement