’நான் உங்களிடம் பிச்சை எடுக்கவில்லை’- கொதிக்கும் ஸ்ரீசாந்த்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 


கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கிலிருந்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்தது. இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தனிநீதிபதி கொண்ட அமர்வு, ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய பிசிசிஐ தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்ரீசாந்த், ’நான் உங்களிடம் பிச்சையெடுக்கவில்லை. என்னுடைய வாழ்வை திரும்பக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன். அது என்னுடைய உரிமை. நீங்கள் கடவுளுக்கு மேலானவர்கள் இல்லை. நான் மீண்டும் விளையாடுவேன். குற்றமற்றவன் என்பதை ஒருமுறையல்ல, மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு எதிரான நீங்கள் செய்யும் மோசமான நடவடிக்கை இது. எதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள் என்று தெரியவில்லை’ என்று கொந்தளித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!