'சச்சின்' அபாரம்... சொந்த மண்ணில் யு மும்பாவை ஊதித்தள்ளியது குஜராத்! #ProKabaddi

விறுவிறுப்பு இல்லாமல்  முடிந்திருக்கிறது நேற்றைய மேட்ச்.  புரோ கபடி (Pro kabaddi) ஐந்தாவது சீசனில் 23-வது  மேட்ச் நேற்றைய தினம் அகமதாபாத்தில் நடந்தது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஊரில் போட்டிகள் நடக்கும். நேற்றைய தினம் அகமதாபாத்தில்  தேசிய கீதத்தோடு மேட்ச் ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் குஜராத் ஃபார்ச்சூன்  ஜெயன்ட்ஸ் அணியும்  யு மும்பா அணியும் மோதின. 

Pro kabaddi Gujarat Fortunegiants Vs U Mumba

சுகேஷ் ஹெக்டே தலைமையிலான குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியில் ஃபாசெல் அட்ரசெல்லி, அபோஜர் மொஹாஜெர்மிகனி, சச்சின், அமித் ஓம் பிரகாஷ் ரதி, சுனில் குமார், ரோஹித் குலியா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அனுப் குமார் தலைமையிலான யு மும்பா அணியில் குல்தீப் சிங், நிதின் மடனே, ஷபீர் பாப்பு, சுரேஷ் குமார், ரெஞ்சித், சுரிந்தர் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றனர். 

முதல் ரெய்டே அனுப் குமார் தான். ஆனால் அது வெற்று ரெய்டாக அமைந்தது. குஜராத் அணி ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. சுகேஷ் ஹெக்டே, சச்சின், ரோஹித் குல்லா என மூவருமே ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளினார்கள். ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே மும்பை அணி ஆல் அவுட் ஆனது. 9 - 1 என முன்னிலையில் இருந்தது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். மும்பை அணியின் கேப்டன் அனுப் குமார் நேற்று ரெய்டுகளில் எதிரணி வீரர்களை அவுட் ஆக்க மிகுந்த சிரமப்பட்டார். அவர் தனது முதல் ஐந்து ரெய்டுகளில் வெறும்  ஒரு புள்ளியை மட்டுமே எடுத்தார். மும்பை அணி டேக்கிளில் நேற்று கோட்டை விட்டது. ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் தான் ஒருவழியாக குஜராத் வீரரை இழுத்துப்பிடித்து மடக்கிப்போட்டது. முதல் பத்து நிமிடங்கள் முடிவில் ஸ்கோர் 11 - 3.

அடுத்த பத்து நிமிடங்களுக்குள் மீண்டும் ஒரு முறை ஆல் அவுட் ஆனது யு மும்பா அணி. முதல் பாதி முடிவில் ஸ்கோர் 20 - 6. பதினான்கு புள்ளிகள் முன்னிலையில் இருந்ததால் இரண்டாவது பாதியில் கவனமாக வெற்றியைக் கோட்டை விட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் ஆடியது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ்.  யு மும்பா அணி இரண்டாவது பாதியில் கொஞ்சம் சுறுசுறுப்பாக விளையாடியது. இரண்டாவது பாதியில் முதல் பத்து நிமிடங்கள் முடிவில் ஸ்கோர் 27 -  14.

Pro kabaddi Gujarat Fortunegiants Vs U Mumba

ஆட்டநேர முடிவில்  39 - 21 என அபார வெற்றி பெற்றது குஜராத். இரண்டாவது பாதியிலும் ஒரு முறை ஆல் அவுட் ஆகியிருந்தது குஜராத் அணி. அதே சமயம் அந்த அணி ஒரு அற்புதமான சூப்பர் டேக்கிளையும் செய்தது. மும்பை அணியை பொறுத்தவரையில் குல்தீப் சிங் நிறைய தவறுகளை செய்தார். அவருக்கு நேற்றைய நாள் மோசமான நாளானது. குஜராத்  தரப்பில் சச்சின் அருமையாக ஆடினார். அவர் எட்டு புள்ளிகளை எடுத்தார். மற்றொரு குஜராத் வீரர் ரோகித் குல்லாவும் சிறப்பாக ஆடினார். அவருக்கு 9 புள்ளிகள் கிடைத்தது. இளம் வீரர்கள் இருவரும் பொறுப்போடு ஆடியதால் நேற்று ரிலாக்ஸாக விளையாடினார் கேப்டன் சுகேஷ் ஹெக்டே.  குஜராத் அணியில் டிஃபென்சில் அபோஜரும் ஃபாசெல் அட்ரசெல்லியும் அவர்களது இடத்தில் ரெய்டுக்கு வரும் வீரர்களை மடக்கினார்கள். 

மும்பை அணியின் டிஃபென்ஸ் சுமாராகவே இருக்கிறது. அந்த அணி ரெய்டுகளை நம்பியே காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஃபாசெல், அபோஜர் மாதிரியான வலுவான டிஃபென்டர்கள் இருந்தால் ரெய்டுகளிலிலும் சொதப்புவோம் என நிரூபித்திருக்கிறது மும்பை. நேற்றைய தினம்  ரெய்டு, டேக்கிள், டி ஃபென்ஸ் என எல்லா ஏரியாவிலும் மாஸ் காட்டியது குஜராத். மும்பை அணி நேற்று எடுத்த 21 புள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு அதாவது ஏழு புள்ளிகள் போனஸ் புள்ளிகள் மூலம் வந்தவை. இது கவலை தரும் அம்சம்.

இந்த சீசனில் இரண்டாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறது யு மும்பா. அதே சமயம் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் இரண்டாவது வெற்றியைச் சுவைத்திருக்கிறது. இன்றைய தினம் டெல்லியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வென்றால்  'அ'  மண்டலப் பிரிவின் புள்ளிப்பட்டியலில்  கெத்தாக முதலிடத்தில் தொடரும் குஜராத் அணி. டெல்லிக்கு இது ஐந்தாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணி இதுவரை நான்கில் ஒரு போட்டியை மட்டுமே  ஜெயித்திருக்கிறது. எனவே இன்று அதிரடியாக ஆடும் என எதிர்பார்க்கலாம். இன்றைய தினம் நடக்கவுள்ள மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் யு பி யோதா அணியும் மோதவுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!