சிக்ஸர் மழையில் நனைந்தது நத்தம்... பாரத் சங்கர் சதம் வீண்... காரைக்குடி வெற்றி!

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 24-வது ஆட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்றது. கடந்த இரு போட்டிகளின்போது மைதானம் வான் மழையால் நனைய, நேற்று சிக்ஸர் மழையில் நனைந்தது. ‛அட... சேஸிங் என்றால் இதான்யா சேஸிங்!’ என ரசிகர்களை சந்தோசத்தில் திணற வைத்தது. இந்த ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி காரைக்குடி காளை அணி  சூப்பர் வெற்றி பெற்றது. பாரத் சங்கர் அடித்த சதம் வீணானது. 

பாரத் சங்கர் சதம் வீண்

டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பாரத் சங்கர் மற்றும் கேப்டன் பாபா இந்திரஜித் களமிறங்கினர். மூன்றாவது ஓவரில் இந்திரஜித் 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றினாலும் பாரத் சங்கர் நங்கூரமிட்டது போல நிலைத்து நின்று  நாலாபுறமும் பந்துகளைத் தெறிக்க விட்டார். முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி விரட்டிய பாரத், அடுத்த இரண்டு ஓவர்களிலும் தலா ஒரு பவுண்டரி அடித்தார். ஒன் டவுன் இறங்கிய ஆதித்யா கிரிதர், சந்தித்த முதல் இரு பந்துகளையுமே பவுண்டரிகளாக மாற்ற ரன் ரேட் எகிறத்தொடங்கியது.

கணபதியின் 5-வது ஓவரில் ஒரு பவுண்டரி மோகனின் ஆறாவது ஓவரில் ஒரு சிக்ஸர் என பாரத் கெத்து காட்ட, தன் பங்குக்கு சுனில் சாமின் ஓவரில் பவுண்டரி விளாசினார் கிரிதர். பத்தாவது ஓவரில் முதல் பந்தை ஃபிளாட்டாக சிக்ஸருக்கு அனுப்பிய பாரத், கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி,  தன் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இதனால், திருச்சி அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 76 ரன்கள் எடுத்தது.

ஷாஜகான் வீசிய 12-வது ஓவரில் கவர் திசையில் இருந்த பத்ரிநாத்திடம் கேட்ச் கொடுத்தார் கிரிதர். இனியாவது ஸ்கோர் மட்டுப்படும் என்று நினைத்த நிலையில் 4-வது விக்கெட்டுக்கு இறங்கிய அக்கில் ஸ்ரீநாத் அதை பொய்யாக்கினார். கடைசி வரை இந்த ஜோடியை காரைக்குடி பவுலர்களால் பிரிக்க முடியவில்லை.  அவரும் பாரத் சங்கரும் மீண்டும் விளாசத்தொடங்கினர். காரைக்குடி பவுலர்களை வெகுவாக தண்டித்த இருவரும் தொடர்ந்து பவுண்டரிகள் சிக்ஸர்களாக விளாச, ரன்ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

கணபதி,சுனில் சாம்,ராஜ்குமார் என அனைவரின் ஓவர்களிலுமே இருவரும் மாறிமாறி பந்துகளை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிட காரைக்குடி ஃபீல்டர்களுக்கு வேலையே இல்லை. குறிப்பாக ராஜ்குமாரின் 18-வது ஓவரில் பாரத் தலா ஒரு சிக்ஸர்,  பவுண்டரி அடிக்க அக்கில் ஒரு பவுண்டரி அடித்தார். 19-வது ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டிய பாரத் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார். கடைசி ஓவரிலும் ஒரு சிக்ஸர் வர, 20 ஓவர்களின் முடிவில் திருச்சி அணி 2 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்தது. பாரத் சங்கர் 112 ரன்களும் அக்கில் ஸ்ரீநாத் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தனர். இந்த ஜோடி மட்டுமே 105 ரன்கள் திரட்டியது.

சவாலான இலக்கை துரத்திய காரைக்குடி அணிக்கு அனிருதா ஸ்ரீகாந்த்,  விஷால் வைத்யா ஜோடி அபார தொடக்கம் தந்தது. முதல் ஒவரிலேயே ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி என அனிருதா விளாச, விஷாலும் இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். விக்னேஷ் வீசிய மூன்றாவது ஓவரை முழுமையாக குத்தகைக்கு எடுத்த விஷால், மூன்று அற்புதமான சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

இந்நிலையில் திருச்சியின் கவுசிக் ஜோடி டபுள் செக் வைத்தது. 5-வது ஓவரை வீசிய ஜெகனாதன் கவுசிக், விஷால் வைத்யாவை காலி செய்ய ஒன் டவுன் இறங்கி இரண்டு பவுண்டரிகள் அடித்த பத்ரிநாத்தை வெளியேற்றினார் ஜெகதீசன் கவுசிக். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் நான்காவது விக்கெட்டுக்கு இறங்கிய ஆதித்யா, அனிருதா உடன் சேர மீண்டும் பந்து எல்லைக்கோட்டிற்கு அடிக்கடி சென்றது.

7-வது ஓவரில் அனிருதா ஒரு சிக்ஸர் அடித்தார் எனில் ஆதித்யா அடுத்த ஓவரில் தன் பங்குக்கு இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். மூர்த்தி பிரபுவின் 10 வது ஓவரின் முதல் பந்தில் அனிருதா சிக்ஸர் அடிக்க, கடைசி பந்தில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் கொடுத்து ஆதித்யா ஆட்டமிழந்தார்.  அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஷாஜகான் அனிருதாவுடன் சேர , இருவரும் அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றனர்.

இறங்கியதில் இருந்தே பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசிய அனிருதா, 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். அடுத்தடுத்த ஓவர்களிலும் பவுண்டரிகள் வர, பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை எட்டியது. 60 ரன்கள் எடுத்த நிலையில் அனிருதா, போல்டாக அடுத்ததாக வந்த கணபதி ஷாஜகான் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வழக்கம்போல பந்துகளை நொறுக்கியது. 18-வது ஓவரில் ஆளுக்கொரு சிக்ஸர் விளாச ஆட்டம் காரைக்குடி வசமானது.  வெற்றிக்கான பவுண்டரியை அடித்து சுபம் போட்டார் கணபதி. 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது காரைக்குடி அணி. இந்த வெற்றியின் மூலம் காரைக்குடி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 

காரைக்குடி சார்பில் அனிருதா 60 ரன்களும் விஷால் வைத்யா 40 ரன்களும் எடுத்தனர். ஆல் ரவுண்டர் ஷாஜகான் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடி சதமடித்த திருச்சியின் பாரத் சங்கர் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!