நெய்மரின் இடத்தை நிரப்பி, மெஸ்ஸியுடன் கைகோக்கும் அந்த வீரர் யார்? ஓர் அலசல்!

பிரேசில் டாப் ஸ்டார் நெய்மர் பார்சிலோனா அணியிலிருந்து பி.எஸ்.ஜி (P.S.G) அணிக்குச் சென்றது வரலாறாகி விட்டது. டாப் ரேட்டட் பிளேயர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவது விவாதிக்க வேண்டிய விஷயமே என்றாலும், கால்பந்து உலகின் டிரான்ஸ்ஃபர் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வீரர் அதிக தொகைக்கு வாங்கப்படுவது வாடிக்கைதான் எனும்போது, நெய்மர் 1,677 கோடி ரூபாய்க்கு (அதாவது 222 மில்லியன் யூரோக்கள்) பி.எஸ்.ஜி அணிக்கு மாறியது சரியா, தவறா என விவாதிப்பது வீண் வேலை. நெய்மரின் இடத்தை நிரப்புவதற்காக, அடுத்த வீரரைத் தேடும் பணியில் இறங்கிவிட்டது பார்சிலோனோ. நெய்மரின் இடத்தை நிரப்பப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் சில தினங்களில் விடை தெரிந்துவிடும். அதற்கு முன் எந்த வீரர்கள் நெய்மருக்கு மாற்றாக இருப்பார்கள் எனப் பார்த்து விடலாமே!

நெய்மர்

பிலிப்பே கோடின்யோ (Philippe Coutinho)

நெய்மரின் சக நாட்டு வீரரான பிலிப்பே கோடின்யோதான் பார்சிலோனா அணியின் முதல் டார்கெட். அட்டாக்கிங் மிட்ஃபீல்டரான இவர் தற்போது இங்கிலாந்து நாட்டு கிளப்பான லிவர்பூல் அணிக்காக விளையாடுகிறார்.

Philippe Coutinho

கடந்த 2016-17 சீஸனில் 31 ஆட்டங்களில் ஆடி 13 கோல்கள் மற்றும் 7 அசிஸ்ட்களைப் பதிவு செய்துள்ளார். நெய்மரைப் போலவே திறமை மிகுந்த 25 வயது இளம் வீரரான இவரை வாங்குவதில் பார்சிலோனா மும்முரம் காட்டுகிறது. முதலில் 76 மில்லியன் யூரோக்கள் தருவதாக இருந்தது பார்சிலோனா. ஆனால் லிவர்பூல் அதை நிராகரித்து விட்டது. இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட 100 மில்லியன் யூரோக்கள் தொகையும் லிவர்பூல் அணியால் நிராகரிக்கப்பட்ட போதும் முட்டி மோதியாவது இவரை வாங்கிவிட வேண்டும் என பார்சிலோனா காய் நகர்த்தி வருகிறது. ஏனெனில் அடுத்த நெய்மர் இவர்தான் எனக் கால்பந்து வல்லுநர்கள் இவரைத்தான் கை காட்டுகின்றனர்.

ஓசுமானே டெம்பெல்லே (Osumane Dembele)

Osumane Dembele

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த இளம்புயல்தான் பார்சிலோனாவின் அடுத்த இலக்கு. வெறும் இருபதே வயதான இவர் ஜெர்மனியின் புருஷியா டோர்ட்மண்ட் அணியின் நட்சத்திர ஸ்டிரைக்கர். டிரிபிளிங் செய்வதில் கெட்டிக்காரரான இவர் கடந்த 2016-17 சீஸனில் 49 போட்டிகளில் விளையாடி 10 கோல்கள் அடித்துள்ளார். கோல் அடிப்பதை விட சக வீரர்கள் அதிக கோல் அடிக்க உதவி (Assist) செய்துள்ளார். இவரை வாங்க பார்சிலோனா ஆர்வம் காட்ட காரணமும் இதுதான். பார்சிலோனாவின் முதல் தூண்டிலை டோர்ட்மண்ட் அணி  நிராகரித்து விட்டபோதும், இரண்டாவது முறையாக 120 மில்லியன் யூரோக்கள் என்ற பிரமாண்ட தொகையை அளிக்க முன்வந்துள்ளது பார்சிலோனா க்ளப். இவரின் பிளேமேக்கிங் ஸ்கில்ஸ் மற்றும் வேகம் இரண்டுமே இளமைத்துடிப்புடன் இருப்பதால் இவர்தான் நெய்மரின் இடத்தை நிரப்ப சரியான ஆள் என்ற எண்ணம் கால்பந்து ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஏங்கெல் டி மரியா ( Angel Di Maria)

Angel Di Maria

மெஸ்சியின் அர்ஜெண்டினா நாட்டு சக வீரர்தான் இந்த ஏங்கெல் டி மரியா. நெய்மரை வாங்கிய அதே PSG அணிக்காகத்தான் விளையாடி வருகிறார் இந்த மிட்ஃபீல்டர்.  29 வயதான டி மரியா, டிரிபிளிங் செய்வதுடன் ஃபினிஷிங்கிலும் கில்லி. கடந்த 2016-17 சீஸனில் 43 போட்டிகளில் விளையாடிய இவர் 14 கோல்கள் மற்றும் 15 அசிஸ்ட்களைப் பதிவு செய்துள்ளார். ஒருவேளை முதல் இரு டார்கெட்டுகளும் மிஸ் ஆனால் இவரை வாங்கியாவது காலியாக உள்ள நெய்மாரின் விங்கர் இடத்தை நிரப்ப வேண்டுமென்பதே பார்சிலோனாவின் நோக்கம். டிரான்ஸ்ஃபர் தொகை இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் மெஸ்சிக்கு பக்கபலமாக இருந்து அட்டாக்கிங் கூட்டணிக்கு வலுவேற்றுவார் என்பதால் இவரும் பார்சிலோனா அணியின் குட்புக்கில் இருக்கிறார்.

ஜெரார்டு டெலோஃப் (Gerard Deulofeu)

Gerard Deulofeu

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு ஏற்கெனவே பார்சிலோனா அணியில் இருந்தவர்தான். தேவைப்பட்டால் திரும்ப வாங்கிக்கொள்ளும் முறையில் இங்கிலாந்தின் எவர்டன் அணிக்கு பார்சிலோனாவால் அனுப்பப்பட்டவர். இந்த சீஸனில் நெய்மாரின் இடம் காலியாகும் முன்னரே பார்சிலோனா அணி மீண்டும் இவரை எவர்டன் அணியிலிருந்து மறுபடியும் வாங்கிக்கொண்டது. கடந்த 2016-17 சீஸனில் லோன் முறையில் இத்தாலியின் மிலன் அணிக்காக விளையாடிய ஜெரார்டு 14 ஆட்டங்களில் ஆடி 4 கோல்கள் மற்றும் 3 அசிஸ்ட்களைப் பதிவுசெய்துள்ளார். ஸ்பெயின் தேசிய அணிக்காகவும் ‛அண்டர்-  21’ சாம்பியன்ஷிப் தொடரிலும் சீரான ஃபார்மை வெளிப்படுத்த, மீண்டும் பார்சிலோனா அணியில் விளையாட இவருக்கு அடித்துள்ளது ஜாக்பாட். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எப்படியும் இந்த முறை தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து நெய்மரின் இடத்தையும் நிரப்புவார் என்பதே கால்பந்து உலகின் எதிர்பார்ப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!