ராகுல் சவுத்ரியா... நிதின் தோமரா... போரில் வென்றது யார்? #ProKabaddi | UP Yoddha beat Telugu Titans in Pro Kabaddi

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (13/08/2017)

கடைசி தொடர்பு:14:42 (13/08/2017)

ராகுல் சவுத்ரியா... நிதின் தோமரா... போரில் வென்றது யார்? #ProKabaddi

இரண்டு அணிகளுமே டிஃபென்சில் வீக். ரெய்டு தான் பலம்.  அப்படியானால் அது வலுவான ரெய்டர்களுக்கு இடையேயான போட்டியா? அப்படியும் சொல்லலாம். வலுவற்ற டிஃபென்சிவ் படைக்கு இடையேயான மேட்ச் என இன்னொரு விதமாகவும் சொல்லலாம். நேற்று நடந்த மேட்ச் அப்படிப்பட்டதே! 

Pro Kabaddi

புரோ கபடி (Pro Kabaddi) ஐந்தாவது சீசனின் லீக் சுற்றில் இருபத்தி நான்காவது போட்டி நேற்று அகமதாபாத் டிரான்ஸ்டடியா உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. ராகுல் சவுத்ரி தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் நிதின் தோமர் தலைமையிலான யு பி தோதா அணியும் நேற்று இரவு எட்டு மணிக்கு களத்தில் சந்தித்தன.

தோனி, சச்சின் போன்றவர்கள் ஐபிஎல்லில் எந்த டீமைச்  சேர்ந்தவர்களாக இருந்தாலும், அயல் மண்ணில் விளையாடும்போது பெரும் வரவேற்பு கிடைப்பதை பார்த்திருப்போம். அப்படியொரு செமத்தியான ஆரவாரத்துக்கு மத்தியில் அகமதாபாத் மண்ணில் ராகுல் சவுத்ரி களமிறங்கினார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. புள்ளிகள் இருவருக்கும் சரிக்கு சமமாக கிடைத்துக் கொண்டே இருந்தன. குறிப்பாக ராகுல் சவுத்ரி நேற்று நல்ல எனர்ஜியுடன் விளையாடினார். அவர் அசால்ட்டாக தொடு புள்ளிகளை (Touch Points) எடுத்துக் கொண்டிருந்தார். மறுமுனையில்  ரிஷான்க் மற்றும் நிதின் தோமர் கூட்டணியும் புள்ளிகளை அள்ளியது. 

5 -5 என புள்ளிகள் சம நிலையில் இருந்தபோது தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் விகாஸ், எதிரணி வீரரான ரிஷான்க் டூ ஆர் டை ரெய்டுக்கு வந்தபோது  டாஷ் அடித்து வெளியேற்றினார். அப்போது மேட்சில் தெலுங்கு டைட்டன்ஸ் கை ஓங்கியது. அந்த அணிக்கு யு பியை ஆல் அவுட் செய்யும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் நிதின் தோமர் அணிக்கு சுவராய் நின்றார். கடைசி ஆளாக அவர் ரெய்டுக்குச் சென்றிருந்தார். அப்போது விகாசை வெளியேற்றினார். மேட்ச்சில் மீண்டும் பரபரப்புத் தொற்றியது. ஒரு கட்டத்தில் 7 - 6 என யு பி யோதா ஒரு புள்ளி முன்னணியுடன் ஆடிக்கொண்டிருந்தது. அப்போது  புரோ கபடியின் 'தி பெஸ்ட் ரெய்டர் ' ராகுல் சவுத்ரி  யு பி யோதாவின் களத்துக்குள் வந்தார். அவர் மீண்டும் அவரது அணியின் எல்லைக்குச் சென்றபோது யு பி யோதா அணியில் இருந்து நான்கு பேர் களத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒரு ரெய்டில் நான்கு பேரை வீழ்த்திய மாஸ் ரெய்டுக்கு அரங்கமே அதிர்ந்தது. ராகுலின் அந்த அதிரடியான ரெய்டில் பாதிக்கபட்டவர்கள் பங்கஜ், சுரேந்தர் சிங், ராகேஷ் நர்வால், ஜீவா குமார் ஆகிய நான்கு பேரும்தான். 

Pro Kabaddi:  Telugu Titans – UP Yoddha

மீண்டும் யு பி யோதாவுக்கு சிரமமான நிலைமை. எனினும் தோமர் புண்ணியத்தால் ஆல் அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டிருந்தது யு பி யோதா. முதல் பாதி முடிவில் ஸ்கோர் 14 - 13 என யு பி யோதாவுக்கு சாதகமாகவே அமைந்தது. இரண்டாவது பாதி தொடங்கியதுமே ராகுல் ஒரு அற்புதமான டேக்கிளில் நிதின் தோமரை காலி செய்தார். அது ஒரு முக்கியமான திருப்புமுனை தருணம். அதற்கடுத்ததாக சில நிமிடங்களில் மிளகர்தனும் விகாசும் இணைந்து மீண்டும் நிதின் தோமரை வெளியேற்றினார்கள். ஆல் அவுட். தெலுங்கு டைட்டன்ஸ் இப்போது 24 -22  என இரண்டு புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. அதன் பின்னர் அதிரடியாக மேட்சை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது யு பி யோதா. குறிப்பாக கடைசி பத்து நிமிடங்களில் சமயோசிதமாக ஆடியது. ரெய்டுக்கு வந்த ராகுலை ரிஸ்க் எடுத்து டேக்கிள் செய்து பெஞ்சில் உட்கார வைத்தது. ராகுல் களத்தில் இல்லாத  சமயங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் எல்லைக்குள் புகுந்து வீரர்களை காலி செய்தனர் யு பி யோதா ரெய்டர்கள். கடைசி நிமிடங்களில் சுதாரிக்காமல் ஆடியதால் ஆட்ட நேர முடிவில் 32 - 39 என  தோல்வியைத் தழுவியது தெலுங்கு  டைட்டன்ஸ். 

நேற்றைய தினம் இரண்டு அணி கேப்டன்களும் அட்டகாசமாக ஆடினார்கள். இருவரும் சூப்பர் 10 புள்ளிகளை எடுத்தனர். இரண்டு வீரர்களும் அணிக்காக போராடினார்கள். ஒரு கட்டத்தில் தோமருக்கு அவரது அணி வீரர்கள் கை கொடுத்தனர். ஆகவே கடைசி நிமிடங்களில் அலட்டிக்கொள்ளாமல் ஜெயித்தது யு பி யோதா.


டிரெண்டிங் @ விகடன்