ரன் அவுட் மிஸ், ஃப்ரீ ஹிட், கேட்ச் நழுவல்... கடைசி பந்தில் இத்தனை டிராமா! கோவை த்ரில் வெற்றி #TNPLUpdates

திருவள்ளூர் வீரன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்க்ஸ் அணிகள் மோதிய தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் (TNPL) 25 வது ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றி தேவை என்ற ஒரு நிலையில் ஒரு நொடியில் எதுவும் மாறலாம் என்பது போல் கடைசி நொடியில் கோவை அணி வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது. தோல்வியடைந்த திருவள்ளூர் அணி நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் கோவை அணி வெற்றி பெற்றுவிட்டால் திருவள்ளூர் அணி வெளியேற நேரிடும்.

TNPL

டாஸ் ஜெயித்த கோவை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. திருவள்ளூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சதுர்வேத் மற்றும் சித்தார்த் பவுண்டரிகளாக விரட்டி  நல்ல தொடக்கம் தந்தனர். ஆறு ஓவர்களுக்கு 43 ரன்கள் எடுத்த நிலையில் ஏழாவது ஓவரை வீசிய அஜித் ராம் இந்த ஜோடியை பிரித்தார். 18 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பிட் முறையில் சித்தார்த் வெளியேற அடுத்த ஓவரிலேயே சதுர்வேதும் 24 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா அபராஜித்தும் நிஷாந்தும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோடிற்கு பறக்கவிட்டனர். 

சிவக்குமார் வீசிய பத்தாவது ஓவரில் அபராஜித் இரண்டு பவுண்டரி விளாச, அடுத்த ஓவரில் நிஷாந்த் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் வந்தது. 12-வது ஓவரில் இருவரும் ஆளுக்கொரு பவுண்டரி அடிக்க, ரன்கள் சீராக ஏறியது. இந்நிலையில் 14 வது ஓவரில் நிஷாந்த் அடித்த பந்து கோவை கேப்டன் முரளி விஜயின் கைகளில் விழுந்தது. 27 ரன்களில் நிஷாந்த் வெளியேறினாலும், அடுத்த வந்த அபிஷேக் தன்வர், அபராஜித்துடன் சேர்ந்து அதிரடியில் மிரட்டினார். அபிஷேக் 15-வது ஓவரில் பேக் டூ பேக் பவுண்டரிகள் விரட்ட,  ரன்ரேட் வேகமெடுத்தது. அஜித் ராமின் 16-வது ஓவரில் தன்வர் ஒரு சிக்ஸர் அபராஜித் இரண்டு சிக்ஸர் என அதகளப்படுத்த, மற்ற பவுலர்களும் இவர்களிடமிருந்து தப்பிக்கவில்லை. 

TNPL

சிவக்குமார் வீசிய 18-வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்ட்ரெய்ட் சிக்ஸர் ஒன்றை விரட்டி 28 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார் அபராஜித். அடுத்த பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்த நிலையில் 5-வது பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார் அபராஜித். இருந்தாலும் அதிரடியைக் குறைக்காத தன்வர் 19 வது ஓவரில் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் அடித்து மெர்சல் காட்டி 19 பந்துகளில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார்.  கடைசி ஓவரில் அடுத்தடுத்து மலோலன் ரங்கராஜனும் சஞ்சய் யாதவும் வெளியேற கடைசி பந்தை சிக்ஸருக்கு அனுப்பி மாஸ் ஃபினிஷிங் செய்தார் கவின். முடிவில் திருவள்ளூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய கோவை அணிக்கு சூர்யபிரகாஷ் ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அனுபவ முரளி விஜய் தனது அதிரடியால் கைகொடுத்தார். ஒன் டவுன் இறங்கிய அனிருத் சீதாராம், விஜயுடன் ஜோடி சேர ரன்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வரத்தொடங்கியது. குறிப்பாக லட்சுமி நாரயணன் வீசிய 5 வது ஓவரின் ஐந்து பந்துகளை எதிர்கொண்ட விஜய் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் விளாச அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் வந்தது. இருவரும் சூப்பர் பார்ட்னர்ஷிப் மெயின்டன் செய்தனர். 9-வது ஓவரின் கடைசி பந்தில் சீதா ராம் சிக்ஸர் அடிக்க, மலோலன் வீசிய பத்தாவது ஓவரின் முதல் பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் பறக்கவிட்டு, தனது அரைசதத்தை எட்டினார் விஜய். அடுத்த பந்தையும் விஜய் சிக்ஸருக்கு அனுப்ப, கடைசி பந்தை சிக்ஸராக மாற்றி அமர்க்களப்படுத்தினார் சீதாராம். அடுத்து ஒரு பவுண்டரி விரட்டிய நிலையில் சஞ்சய் யாதவின் 13-வது ஓவரில் அபராஜித்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார் விஜய். 

அடுத்து வந்த  அக்ஷய் ஸ்ரீனிவாசன் நல்ல கம்பெனி கொடுக்க நாலா புறமும் வெடிகளை வெடித்தார் சீதா ராம். 16-வது ஓவரில் சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் சீதா ராம். அக்ஷயும் சீதா ராமும் சேர்ந்து ராஹில் ஷா, அபிஷேக் தன்வர், சிலம்பரசன் ஆகியோரின் ஓவர்களில்  பவுண்டரிகளாக விளாச, கடைசி ஓவரில் கோவை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான கடைசி ஓவரை வீசிய அபிஷேக் தன்வரின் முதல் இரு பந்துகளில் மூன்று ரன்கள் எடுக்கப்பட, மூன்றாவது பந்தில் அக்ஷய் கேட்ச் ஆனதும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அடுத்த இரு பந்துகளில் 3 ரன்கள் கிடைக்க, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி பந்தை எதிர்கொண்ட சீதா ராம் அதை மிஸ் செய்ததால் வெறுப்பில் தலையைத் தொங்கப்போட்டார்.  ஆனால் எதிர்முனையில் இருந்த ஹரிஷ், சீதா ராமை கட்டாயப்படுத்தி ஓட வைக்க பவுலர் ரன் அவுட்டுக்காக ஸ்டம்பை நோக்கி எறிய அதுவும் மிஸ் ஆக லெக் பை முறையில் இரண்டு ரன்கள் கிடைத்தன. க்ளைமாக்ஸ் ட்விஸ்டாக அம்பயரும் கடைசி பந்தை நோ பாலாக அறிவிக்க ஆட்டம் வேறு டிராக்கிற்கு மாறியது.

அதிர்ஷ்டத்தால் 3 ரன்கள் கிடைக்க போனஸாக ஃப்ரீ ஹிட் வேறு. மீண்டும் கடைசி பந்தை எதிர்கொண்ட சீதா ராம் ஸ்ட்ரெய்ட் திசையில் தூக்கி அடிக்க, அதை பதற்றத்தில் தவற விட்டார் திருவள்ளூர் கேப்டன் அபராஜித். இதை சாதகமாகப் பயன்படுத்திய சீதா ராம் மற்றும் ஹரிஷ் ஜோடி வெற்றிக்கு தேவையான இரண்டு ரன்களை ஓடி எடுத்து, எதிர்பாரா வெற்றியை தங்களது அணிக்கு பரிசளித்தது. திருவள்ளூர் வீரர்கள் தாங்கள் தோற்றதையே சில நிமிடங்கள் கழித்தே உணருமளவிற்கு அனைத்தும் கணப்பொழுதில் மாறிவிட்டது. கோவை அணி சார்பில் முரளி விஜய் மற்றும் சீதா ராம் இருவரும் 69 ரன்கள் எடுத்தனர்.

பவுலர்கள் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டபோதும் கடைசி ஓவர்களில் ஃபீல்டிங்கில் சொதப்பியதால் கோவையிடம் வீழ்ந்தது திருவள்ளூர் அணி. இந்த வெற்றியை கோவை அணி வீரர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது தான் ஆச்சர்யம்.  அடுத்த போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு கோவை அணி முன்னேற முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!