பர்தீப் நர்வாலுக்கு 50 புள்ளிகள்... ‘டை’யில் முடிந்த த்ரில் போட்டி! #ProKabaddi

புரோ கபடி லீக் (Pro Kabaddi) இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியிருக்கிறது பாட்னா பைரேட்ஸ். நான்கே போட்டிகளில் 50 புள்ளிகள் எடுத்து கபடி உலகை மிரட்சியடைய வைத்திருக்கிறார் பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் பர்தீப் நர்வால்.  ஞாயிறு இரவு எட்டு மணிக்கு நடந்த போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும் யு பி யோதா அணியும் மோதின.

Pro Kabaddi

அகமதாபாத் டிரான்ஸ்டடியா ஸ்டேடியத்தில் நடந்த இந்த மேட்ச்சில் இரண்டு அணிகளும் வெறித்தனமாக வெற்றிக்காக போராடின. நிதின் தோமர் தலைமையிலான யு பி யோதா அணி சனிக்கிழமை நடந்த மேட்ச்சில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்றிருந்தது. அந்த உற்சாகத்துடன் நேற்று களமிறங்கியது. பாட்னா அணியில் விஷால் மானே, சச்சின் ஷிங்கடே, மோனு கோயத், ஜெய்தீப், சதீஷ், வினோத் குமார், பர்தீப் நர்வால்  ஆகியோர் பிளேயிங் செவனில் இடம்பெற்றிருந்தனர்.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே தன் அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார் பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் பர்தீப் நர்வால். பதிலடியாக நிதின்  தோமரும் உடனடியாக ரெய்டுக்கு வந்து ஒரு புள்ளி எடுத்தார். அங்கிருந்தே ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. நான்கு நிமிடங்கள் முடிவில் ஸ்கோர் 3- 3 என சமநிலையில் இருந்தது. அடுத்த மூன்று நிமிடங்களில் யு பி யோதாவின் கை ஓங்கியது. ஏழு நிமிடங்கள் முடிவில் ஸ்கோர் 5 - 3. யு பி யோதா இரண்டு புள்ளிகள் முன்னிலையோடு இருந்தது. பாட்னா அணி  ஆல் அவுட் ஆகுமோ என்ற எண்ணம் தோன்றிய உடனே அதைத் தவிடு பொடியாக்கியது அந்த அணி. 10 நிமிடங்கள் முடிவில் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியிருந்தது பாட்னா.

Pro Kabaddi

முதல் பாதி முழுக்கவே யு பி யோதா அணி ஒரு பக்கம் முன்னிலை பெறத் துடிப்பதும், மறுப்பக்கம் பாட்னா அணி மேட்ச்சை இழுத்துப் பிடிப்பதுமாகவே இருந்தது. முதல் பாதியில் ஸ்கோர் 13 - 10. இரண்டாவது பாதி தொடங்கியதும் பர்தீப் ஒரு புள்ளி எடுத்தார். ஆனாலும் யு பி யோதாவும் புள்ளிகள் இடைவெளியைக் குறைக்க விடாமல் கவனமாக ஆடியது. பர்தீப் நர்வால் அவுட் ஆகி பெஞ்சில் உட்கார்ந்திருந்த சமயங்களில் எல்லாம் மோனு கோயத் அணியைக் காப்பாற்றினார். யு பி யோதா அணியில் கேப்டன் நிதின் தோமருக்கு பக்கபலமாக ஆடினார் ரிஷாங்க் தேவடிகா. 

ஆட்டத்தின் 27 வது நிமிடத்தின் முடிவில் ஸ்கோர் 18 - 15. மூன்று புள்ளிகள் முன்னிலையில் இருந்தது யு பி. அடுத்த சில நிமிடங்கள் ஆட்டம் முழுமையாக யு பி யோதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.  இரண்டாவது பாதி முழுவதுமே பாட்னா அணியின் டிஃபென்ஸ் சுமாராகவே இருந்தது. நிதின் தோமரை அந்த அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. 34 வது நிமிடத்தில் ஸ்கோர் 25 - 17. எட்டு புள்ளிகள் முன்னிலையுடன் இருந்த யு பி.,  இன்னும்  ஆறு நிமிடங்கள் சுதாரிப்பாக  ஆடினால் புள்ளிப்பட்டியலில் விறுவிறுவென முன்னேறிவிட முடியும் என நம்பிக்கையோடு இருந்தது. ஆனால் பர்தீப் களத்துக்குள் இருக்கும்போது  மேட்ச் எப்படி மொக்கையாகும்?

பாட்னா அணி மீண்டும் கம்பேக் ஆட்டம் ஆடியது. குறிப்பாக பர்தீப் ஒரே நிமிடத்தில் அடுத்தடுத்து மூன்று புள்ளிகளை அள்ளினார். ஆட்டம் முடிய இரண்டே நிமிடம் இருக்கும் சூழ்நிலையில் ஸ்கோர் 26 - 23. கடைசி ஒரு நிமிடத்துக்கு முன்பாக இரண்டு புள்ளிகள் மட்டுமே பின்தங்கியிருந்தது பாட்னா பைரேட்ஸ். கடைசி  ரெய்டாக பர்தீப் சென்றார். அவர் ஒரு தொடு புள்ளியை எடுத்தார். பத்து நொடிகள் மட்டுமே இருந்த நிலையில் நிதின் தோமர் இப்போது ரெய்டுக்கு வந்தார். அவரைக் களத்தின் பாதி வரை கூட வரவிடாமல் பூச்சாண்டி காட்டியது பர்தீப் அணி. ஆட்டநேர முடிவில் ஒரு டெக்கினிக்கல் பாயின்ட் பர்தீப் அணிக்கு கிடைத்தது. மேட்ச்  27 - 27 என்ற ஸ்கோருடன் சமநிலையில் முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!