வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (14/08/2017)

கடைசி தொடர்பு:14:43 (14/08/2017)

சுகேஷ் சொதப்பல், சச்சின் அபாரம்... குஜராத்துக்கு ஹாட்ரிக் வெற்றி! #ProKabaddi

குரூப் ‛ஏ’ பிரிவில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியும் ஜெயிப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் நேற்றைய தினம் நடந்த ஆட்டத்தில் மோதின. புரோ கபடி (Pro Kabaddi) ஐந்தாவது சீசனில் இது 27-வது ஆட்டமாகும். சுகேஷ் ஹெக்டே தலைமையிலான குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியில் அபோசர் மொஹாஜெர்மிகனி, ஃபாசெல் அட்ரேச்செல்லி, சச்சின், பர்வேஷ் பைன்ஸ்வால், சுனில் குமார், ரோஹித் குலியா ஆகியோர் களமிறங்கினர். 

Pro Kabaddi

மன்ஜீத் சில்லர் தலைமையிலான ஜெய்ப்பூர் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வமணி காயத்தால் பிளேயிங் செவனில் இடம்பெறவில்லை. ஜஸ்விர் சிங், சோம்விர் சேகர், பவன் குமார், துஷார் பட்டில், சாந்தபனசெல்வம், நிதின் ராவல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். குஜராத் அணி ஏற்கெனவே ஐந்து போட்டிகளில் மூன்றில் வென்றிருந்தது. இந்தப் போட்டியில் வென்றால் இப்போதைக்கு எந்த அணியும் அசைக்க முடியாதபடி புள்ளிப்பட்டியலில் ஒய்யாரமாக முதலிடத்தில்  இருக்கமுடியும் எனும் திட்டத்தோடு ரசிகர்களின் ஆராவாரத்துக்கு மத்தியில் களமிறங்கியது. 

Pro Kabaddi season 5 logo

ஜெய்ப்பூர் அணி ஏற்கெனவே குரூப் ‛ஏ’ பிரிவில் கடைசி இடத்தில் இருந்தது. அந்த அணி முந்தைய இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் ஐந்து புள்ளிகளைப் பெற்றிருந்தது. திறமையான வீரர் செல்வமணி இல்லாததால் குஜராத் அணி நேற்று தடுமாறியது. மேட்ச் தொடங்கியதில் இருந்தே இரண்டு அணிகளும் டிஃபென்சில் கூடுதல் கவனம் செலுத்தின. இதனால் இரண்டு அணிகளிலும் ரெய்டுக்குச் சென்றவர்கள் திண்டாடினார்கள். விடாக்கண்டன், கொடாக்கண்டனாக இரு அணிகளும் மல்லுக்கட்டியதால் ஸ்கோர்போர்டு ஆமை வேகத்தில் செயல்பட்டது. லோ ஸ்கோரிங் மேட்ச் போல நேற்றைய தினம் முதல் பாதி முழுக்க கடுமையான போட்டி நிலவியது. முதல் ஐந்து நிமிடத்தின் முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தன. முதல் பாதி முடியும்போது ஸ்கோர் 10 -10. 

Pro Kabaddi

முதல் 20 நிமிடங்களில் இரண்டு அணியும் கடுமையாகப் போராடியதால் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனச் சொல்லவே முடியவில்லை. குஜராத் அணியைப் போலவே பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ப்பூர் அணிக்கும் ரசிகர்கள் அதிகமாகவே இருந்தனர். அகமதாபாத் டிரான்ஸ்டடியா ஸ்டேடியத்தில் நேற்று இரண்டு அணிகளுக்கும் சியர்ஸ் சொல்லியது பார்வையாளர் கூட்டம். இரண்டாவது பாதியிலும் முதல் பத்து நிமிடங்களில் ஸ்கோர்போர்டு மந்தமாகவே செயல்பட்டது. ஒரு கட்டத்தில் ஜெய்ப்பூர் ஆல் அவுட் ஆனது. அந்தப்புள்ளியில் இருந்து விறுவிறுவென முன்னிலைப் பெற்றது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். ஆட்டநேர இறுதியில் 27 - 20 என அட்டகாசமாக வென்றது குஜராத் அணி. இது அந்த அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாகும். 

Pro Kabaddi

இந்த சீசனில் தமிழ் தலைவாஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யு பி யோதா, குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் என நான்கு புதிய அணிகள் களமிறங்கியுள்ளன. இதில் குஜராத் அணி பலரையும் கவர்ந்துள்ளது. அந்த அணியின் டிஃபென்ஸ் வலுவாக இருக்கிறது. ஈரான் வீரர்கள் ஃபாசெல் அட்ரசெல்லி மற்றும் அபோசர் டிஃபென்சில் அசத்துகிறார்கள். சச்சினும் கேப்டன் சுகேஷும் ரெய்டுகளில் மிரட்டுகிறார்கள். நேற்றைய தினம் சுகேஷுக்கு நல்ல நாளாக அமையவில்லை. அவர்  ரெய்டுக்குச் சென்று புள்ளிகள் எடுக்காமலேயே திரும்பி வந்தார். சச்சின் நேற்றும் சிறப்பாக ஆடினார்.  அவரே நேற்று சிறந்த  ரெய்டருக்கான விருதையும் பெற்றார். குஜராத் அணி  இப்போதைய நிலைமையில் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 23 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 11 புள்ளிகளுடன் புனேரி பால்டான் அணி  உள்ளது. நாளை முதல் குரூப் ஏ மற்றும் பி பிரிவில் உள்ள அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்கவுள்ளதால் லீக் இன்னும் சூடுபிடிக்கும்.

புரோ கபடி ஐந்தாவது சீசனின் முந்தைய போட்டிகளின் ரிசல்ட் இங்கே...

 


டிரெண்டிங் @ விகடன்