ஒரே ஓவரில் 40 ரன்கள்! அதிர்ந்த கிரிக்கெட் போட்டி

ஒரே ஓவரில் 40 ரன்கள் அடித்த நிகழ்வு இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அரங்கேறியிருக்கிறது.


இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஸ்வின்ப்ரூக் அணிக்கெதிரான போட்டியில் டோர்செஸ்டர் ஆன் தேம்ஸ் கிரிக்கெட் கிளப் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. முதலில் பேட் செய்த ஸ்வின்ப்ரூக் அணி நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய டோர்செஸ்டர் அணி 44 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை மிஹாய் கியூகஸ் வீச, அதை 54 வயதான ஸ்டீவ் மெக்கம்ப் எதிர்கொண்டார்.

கடந்த 20 வருடங்களாக டோர்செஸ்டர் அணிக்காக விளையாடி வரும் ஸ்டீவ், நோபாலாக வீசப்பட்ட முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். மீண்டும் பந்து வீச அதையும்  அவர் சிக்ஸர் விளாச, மொத்தம் 13 ரன்கள் கிடைத்தது. இரண்டாவது பந்தை கியூகஸ் யார்க்கராக வீச, ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. மூன்றாவது பந்தை அவர் பவுண்டரிக்கு விரட்டினார். இதையடுத்து  நோபாலாக வீசப்பட்ட 4ஆவது பந்திலும் மெக்கம்ப், பவுண்டரி விளாசினார். இதன்மூலம் முதல் மூன்று பந்துகளில் 22 ரன்கள் கிடைத்தது. அடுத்த இரண்டு பந்துகளிலும் மெக்கம்ப் சிக்ஸர்கள் விளாச, இரு அணிகளின் ஸ்கோர் சமநிலையானது. இதையடுத்து, கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய சூழலில் அந்த பந்திலும் சிக்ஸர் விளாசி டோர்செஸ்டர் அணியை மெக்கம்ப் வெற்றிபெறச் செய்தார். கடைசி ஓவர் வெற்றி குறித்து பேசிய மெக்கம்ப், காலில் ஏற்பட்ட காயத்தால் பவுண்டரிகள் மூலம் ரன்குவிக்க திட்டமிட்டதாகக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!