வெளியிடப்பட்ட நேரம்: 05:55 (16/08/2017)

கடைசி தொடர்பு:07:46 (16/08/2017)

'இந்தியாவிடம் அப்படி தோல்வியடைந்திருக்கக்கூடாது..!' - வேதனைப்படும் ஜெயசூரியா

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி, இலங்கையை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து, மாபெரும் சாதனையைப் புரிந்தது. இதையடுத்து, அந்நாட்டின் தேர்வு வாரியத்தின் தலைவரும் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூரியா, 'இந்தியாவிடம் இலங்கை தோல்வியடைந்தது மிகவும் வேதனைக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.

ஜெயசூரியா

அவர் இதுகுறித்து, ''தாய் மண்ணில் விளையாடும் ஒரு தொடரில் தோல்வியடைவது என்பது எப்போதும் வேதனைக்குரிய விஷயம்தான். அதுவும் இதைப் போன்று 3-0 என்ற ஒயிட் வாஷ் ஆவது என்பது இன்னும் வருத்தத்துக்குரியது. நாங்கள் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் விளையாடும்போது, மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளோம். இப்போது, படுதோல்விக்குப் பின்னர் இலங்கை அணி வீரர்கள் மிகவும் சோர்வாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள்தான் இப்போது இருக்கும் சூழ்நிலைகுறித்த விடையோடு வர வேண்டும். தற்போது, இலங்கை அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் இல்லை. எனவே, அந்தப் பதவியில் சரியான நபரை நியமிப்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்துவருகின்றது' என்று கூறியுள்ளார்.