‘Watta Come Back’ பெங்களூரு காளைகளை அடக்கியது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ்! #ProKabaddi | Gujarat Fortunegiants secured their fourth consecutive win

வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (16/08/2017)

கடைசி தொடர்பு:13:59 (16/08/2017)

‘Watta Come Back’ பெங்களூரு காளைகளை அடக்கியது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ்! #ProKabaddi

புரோ கபடி (Pro Kabaddi) ஐந்தாவது சீசனில் குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்ற தெம்புடன் ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு களமிறங்கியது. தொடர் போட்டிகள் காரணமாகவோ என்னவோ நேற்றைய தினம் குஜராத் அணியிடம் சற்றே உற்சாகம் குறைந்திருந்தது. சுகேஷ் ஹெக்டே தலைமையிலான குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியில் ஃபாசெல் அட்ரச்செல்லி, அபோசர் மொஹாஜர்மிகனி, சச்சின், பர்வேஷ் பெயின்ஸ்வால், சுனில் குமார் மற்றும் ரோஹித் குலியா ஆகியோர் நேற்று களமிறங்கினர்.

Pro Kabaddi: Gujarat Fortunegiants Vs Bengaluru Bulls

பெங்களூரு புல்ஸ் அணி இந்தப் போட்டிக்கு முன்பாக ஏழு போட்டிகளில் மூன்றில் வெற்றி, மூன்றில் தோல்வியடைந்து, ஒரு போட்டியை டிரா செய்து 20 புள்ளிகளுடன் குரூப் ‛பி’  பிரிவில் முதல் இடத்திலிருந்தது. குரூப் ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் குஜராத் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளும் சம வலிமை பொருந்திய அணிகள் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. பெங்களூரு புல்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் குமார், ஆஷிஷ் குமார், ரவீந்தர் பஹல், குல்தீப் சிங்,ப்ரீத்தம் சில்லர், மகேந்தர் சிங், அஜய் ஆகியோர்  பிளேயிங் செவனில் விளையாடினார்கள்.

Pro Kabaddi logo

முதல் பாதியின் முதல் ஐந்து நிமிடங்களில் இரண்டு அணிகளும் சரிக்குச் சமமாக மல்லுக்கட்டின. பெங்களூரு அணி ஒரு புள்ளி மட்டுமே முன்னணியில் இருந்தது. ஸ்கோர் 3-2. அடுத்தடுத்த நிமிடங்களில் ரெய்டுகளில் சொதப்பியது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி. குறிப்பாக சுகேஷ் ஹெக்டே ரெய்டில் புள்ளிகள் எடுக்கத் திணறினார். குஜராத் கேப்டன் சுமாராக ஆடிக்கொண்டிருக்க பெங்களூரு கேப்டன் ரோஹித் குமார் பட்டையைக் கிளப்பினார். ரெய்டுக்குச் செல்லும் போதெல்லாம் பெரும்பாலும் எதிரணியில் ஒருவரையாவது பெஞ்சில் உட்காரவைத்தார்.

பத்தாவது நிமிடத்தின் முடிவில் ஸ்கோர் 8-3. முதல் பாதியின் இறுதியில் பெங்களூரு அணியை முடக்க குஜராத்துக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. சச்சின் அந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ரெய்டுக்கு வந்த சச்சினை சூப்பர் டேக்கிள் செய்ததன் மூலம் பெங்களூரு புல்ஸ் கூடுதல் புள்ளிகளைப் பெற்றது. முதல் பாதி முடிவில் ஸ்கோர் 14 -9. ஐந்து புள்ளிகள் முன்னிலையோடு இரண்டாவது பாதியில் ஆட ரெடியானது ரோஹித் குமார் அணி.

Pro Kabaddi: Gujarat Fortunegiants Vs Bengaluru Bulls

இரண்டாவது பாதி தொடங்கியதுமே விறுவிறுவென புள்ளிகளை எடுத்தது பெங்களூரு. ஒரு கட்டத்தில் ஸ்கோர் 19 -10 என இருந்தது. மேட்ச் குஜராத் கையில் இருந்து முற்றிலும் நழுவிவிட்டது என்றே தோன்றியது. ஆனால், கபடியில்தான் எந்த நிமிடத்திலும் மேட்ச் மாறும் அல்லவா! குஜராத் ஆக்ரோஷத்துடன் மீதி ஆட்டத்தை எதிர்கொண்டது. குறிப்பாக டேக்கிளில் அபாரமாக செயல்பட்டது. குஜராத் அணியின் இடது முனையில் இருந்த ஈரான் வீரர் அபோசரும் சரி, வலது முனையில் இருந்த ஃபாசல் அட்ரசெல்லியும் சரி பெங்களூரு வீரர்களை மடக்கிப் பிடித்தார்கள். ரோஹித் குமார், ஆஷிஷ் குமார் இருவரும் குஜராத் அணியால் சூப்பர் டேக்கிள் செய்யப்பட்டனர். இவை மேட்ச்சின் திருப்புமுனையாக அமைந்தன.

குஜராத் அணி அக்ரசிவ்வாக ஆடத்தொடங்கியது. ஒரு புள்ளியைக் கூட விட்டுக்கொடுக்காமல் ஆடத் தொடங்கியது. அந்த அணியில் கேப்டன் சுகேஷ் ஹெக்டே சொதப்பிக் கொண்டிருந்ததால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை களமிறக்கினார் அந்த அணியின் பயிற்சியாளர் ரந்திர் சிங்.

மாற்று வீரராக உள்ளே வந்த மகேந்திர சிங்  ரெய்டுக்குச் சென்று இரண்டு புள்ளிகளை அள்ளினார். இது மேட்ச்சின் மற்றுமொரு திருப்புமுனை ஆகும். அடுத்த நிமிடத்தில் பெங்களூரு புல்ஸ் ஆல் அவுட் ஆனது. ஆட்டம் முடிய ஏழு நிமிடங்களே இருக்கும் வேளையில் ஸ்கோர் 21 -21. குஜராத் அணியின் கம்பேக் ஆட்டத்தால் அரங்கமே அதிர்ந்தது. ரசிகர்கள் உற்சாகக் கூக்குரலிட்டார்கள். பெங்களூரு அணிக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மேலும் மேலும் புள்ளிகளை அள்ளியது குஜராத் அணி. மிக புத்திசாலித்தனமாக பெங்களூரு கேப்டன் ரோஹித் குமாரை வீழ்த்தியது குஜராத். அந்த அணி வீரர் ரோஹித் குலியா ரெய்டுக்கு வந்த ரோஹித்தின் கணுக்காலைக் கைப்பற்றி டேக்கிள் செய்தார். அடுத்த மூன்று நிமிடங்களில் மேட்ச் மாறியது. இப்போது ஸ்கோர் 24 -21. குஜராத் மூன்று புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. இன்னும் நான்கு நிமிட ஆட்டமே மீதமிருக்கும் நிலையில் அரங்கில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களும் மொபைலைக் கூட நோண்டாமல் ஆட்டத்தின் மீது கவனம் வைத்தனர். இப்போது பெங்களூரு சுதாரித்தது. விளைவு கடைசி இரண்டு நிமிடங்களே இருக்கும் சூழ்நிலையில் ஸ்கோர் 24-24.

Pro Kabaddi: Gujarat Fortunegiants Vs Bengaluru Bulls

இப்போது குஜராத் வீரர் மகேந்திர கணேஷ்  ரெய்டுக்குச் சென்றார். அவர் ரோஹித் குமாரை வெளியேற்றினார். அதன் பின்னர் பெங்களூரு வீரர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. முடிவில் 27 – 24 என வென்றது. சுதந்திர தினத்தில் பணம் கொடுத்து மேட்ச் பார்க்க வந்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் செம திரில் மேட்ச் பார்த்ததில் அப்படியொரு மனநிறைவு. போட்டி முடிந்து அடுத்த பத்து நிமிடங்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர் குஜராத் ரசிகர்கள். 19 -10 எனப் பின்தங்கியிருந்து 27 - 24 என்ற கணக்கில் வென்ற மேட்ச் இந்த சீஸனின் சிறந்த மேட்ச்களில் ஒன்று.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக நான்காவது வெற்றிப் பெற்றிருக்கிறது குஜராத் அணி. டிஃபென்ஸ், ரெய்டுகள் என இரண்டிலும் செம வலுவாக இருக்கும் குஜராத் அணி பிளே ஆஃபுக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பல மடங்கு கூட்டியிருக்கிறது. வெற்றிக் களிப்பில் வளைய வரும் குஜராத்தை வீழ்த்தப் போகும் அணி எதுவென பொறுத்திருந்து பார்ப்போம்.


டிரெண்டிங் @ விகடன்