சிந்தாமல் சிதறாமல் வெற்றியை அள்ளிய புனேரி பால்டான்! #ProKabaddi #PPvsBW

புரோ கபடி ஐந்தாவது சீசன் (Pro Kabaddi) அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறது. புரோ கபடியில் ஆடும் 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கடந்த மூன்று வாரமாக ‘அ’ மண்டலம் மற்றும் ‘ஆ’ மண்டலம் இரண்டு அணிகளும் தங்களது பிரிவுகளில் உள்ள அணிகளுடன் மோதிக்கொண்டிருந்தன. நேற்றைய தினம் ‘அ’ மண்டலம் மற்றும் ‘ஆ’ மண்டலம் ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிகள் தொடங்கியுள்ளன.

Pro Kabaddi: Bengal Warriors Vs Puneri Paltan

நேற்று இரவு எட்டு மணிக்கு நடந்த போட்டியில் ‘அ’ மண்டலத்தில் இடம்பெற்றிருக்கும் புனேரி பால்டான் அணியும், ‘ஆ’ மண்டலத்தில் இடம் பெற்றிருக்கும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. நேற்றைய தினம் இந்தியாவுக்குச் சுதந்திர தினம் என்பதால் அரங்கு முழுக்க ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நேற்றைய போட்டிக்கு வந்திருந்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கீதத்தோடு போட்டித் தொடங்கியது.

சுர்ஜீத் சிங் தலைமையிலான பெங்கால் வாரியர்ஸ் அணியில் ஜாங் குன் லீ, ரான் சிங், ஸ்ரீகாந்த், மனிந்தர் சிங், வினோத் குமார், ராகுல் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தீபக் ஹூடா தலைமையிலான புனேரி பால்டான் அணியில் ஜியாவுர் ரஹ்மான், சந்தீப் நர்வால், கிரிஷ் மாருதி எர்னாக், தர்மராஜ் சேரலாதன், ரோஹித் குமார் சவுதரி, மோரே ஆகியோர் பிளேயிங் செவனில் விளையாடினார்கள்.

மேட்ச் தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்தே இரண்டு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் போராடின. ஒரு கட்டத்தில் 5 -5 என்ற புள்ளிகள் கணக்கில் மேட்ச் இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்புள்ளதாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் புனேரி பால்டான் அணியில் சந்தீப் நர்வால் ரெய்டுகளில் அசத்தினார். சந்தீப் நர்வால் லெஃப்டில் இன்டிக்கேட்டர் போட்டு ரைட்டில் வண்டியை எடுப்பது போல எதிரணி வீரர்களைக் குழப்பியே புள்ளிகளை அள்ளினார். முதல் பாதியின் பதினான்காவது நிமிடத்தில் பெங்கால் அணியிலிருந்த இரண்டு பேரை ஒரே ரெய்டில் அவுட் ஆக்கினார். அப்போது பெங்கால் அணி ஆல் அவுட் ஆனதால் போனஸ் புள்ளிகளும் கிடைத்தன. இதையடுத்து புனே அணி விறுவிறுவென புள்ளிகளைப் பெற்று முன்னேறியது. முதல் பாதியின் கடைசி இரண்டு நிமிடங்களில் பெங்கால் சுதாரித்தது. எனினும் அதனால் பெரிய பலன்கள் இல்லை. முதல் பாதி முடிவில் 17 – 10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது புனேரி பால்டான். முதல் பாதியில் 9 ரெய்டு புள்ளிகளையும் நான்கு டேக்கிள் புள்ளிகளையும், இரண்டு ஆல் அவுட் புள்ளிகளையும் பெற்றிருந்தது புனேரி பால்டான் அணி.

Pro Kabaddi: Bengal Warriors Vs Puneri Paltan

இரண்டாவது பாதியிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தையே வெளிபடுத்தியது தீபக் ஹூடா அணி. பெங்கால்வீரர் ஜாங் குன் லீ ரெய்டுக்கு வந்தபோதெல்லாம் மிகுந்த கவனத்தோடு இழுத்துப் பிடித்து வெளியில் போட்டனர். பெங்கால் அணியிலிருந்து மனீந்தர் சிங் மட்டுமே போராடிக் கொண்டிருந்தார். எனினும் இரண்டாவது பாதி தொடங்கிய ஐந்தே நிமிடத்தில் பெங்கால் அணி மீண்டும் ஆல் அவுட் ஆனது. அப்போது 24-11 என்ற ஸ்கோருடன் கெத்தான நிலைமையில் இருந்தது புனேரி பால்டான்.

அடுத்த பத்து நிமிடங்கள் பெங்கால் வீரர்கள் ஆக்ரோஷமாகவும் புத்திசாலித்தனத்துடன் ஆடினார்கள். டிஃபென்சில் வலுவான புனே அணியை லேசாக அசைத்துப் பார்த்தார்கள். எனினும் ஸ்கோர்போர்டில் பெரிய மாற்றம் இல்லை. புனேரி பால்டான் அணி முன்னிலைப் புள்ளிகளை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்தியது. 35 நிமிடம் முடிவில் ஸ்கோர் 30 -15. புனேரி பால்டான் 15 புள்ளிகள் முன்னிலையுடன் வளைய வந்தது. 

  Pro Kabaddi: Bengal Warriors Vs Puneri Paltan

கடைசி நிமிடங்களில் புனே அணி இன்னும் ஆக்ரோஷம் கூட்டியது. பெங்கால் அணிக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போனது. ஆட்ட நேர முடிவில் 34 – 17 என்ற கணக்கில் வென்றது புனேரி பால்டான். சுமார் 17 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி என்பது நிச்சயம் சிறப்பு வாய்ந்தது. பெங்கால் அணி சிறந்த அணியே. மனீந்தர் சிங், சுர்ஜீத் சிங், ஜாங் குன் லீ என மூன்று நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் நேற்றைய நாள் அந்த அணிக்கு மோசமாகவே அமைந்தது.

ரெய்டிலும் சரி, டேக்கிளிலும் சரி புனே நேர்த்தியாக விளையாடியதே இந்தச் சிறப்பு மிக்க வெற்றிக்கு முக்கியக்  காரணம். புனேரி பால்டான் அணி சார்பில் சந்தீப் நர்வால் அதிகபட்சமாக ஏழு புள்ளிகளை எடுத்தார். எனினும் மோரே அதிரடியாக சில புள்ளிகளை வென்றதால் அவர் சிறந்த ரெய்டருக்கான விருதை வென்றார். புனே அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வென்று 16 புள்ளிகளுடன்  ‘அ’ மண்டல புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது நான்காவது போட்டியில் ஆடும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். பெங்கால் அணி ‘ஆ’ மண்டலப் பிரிவில் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!