வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (16/08/2017)

கடைசி தொடர்பு:18:48 (16/08/2017)

குறிப்பறிந்து உதவும் பழக்கம் இந்த அரசுகளுக்கு எப்போது வரும்?

களிர் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய வீராங்கனை ராஜேஷ்வரி கெயிக்வாட் அபாரத் திறமையை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜேஸ்வரி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதுதான் ராஜேஸ்வரியின் முதல் உலகக் கோப்பை போட்டியும்கூட.

இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்த ராஜேஸ்வரியின் பந்துவீச்சும் ஒரு காரணம். கர்நாடகாவின் விஜயபுரா பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி கெய்க்வாட் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை ஆசிரியராக இருந்தவர்... இறந்தும் போய்விட்டார். இப்போது , ராஜேஸ்வரிக்குத் தாய் சவிதாதான் எல்லாம். வசிக்க சொந்தமாக வீடுகூட இல்லை.

கிரிக்கெட் வீராங்கனை

ராஜேஸ்வரியைk கௌரவிக்கும் வகையில் கர்நாடக அரசு சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீல் சுதந்திர தினத்தன்று நடந்த விழாவில், ராஜேஸ்வரிக்கு கார்ச் சாவியை வழங்கினார். ஆனால், காரை வாங்க மறுத்த ராஜேஸ்வரி அதே மேடையில் பேசியதாவது, 

''சார்... எனக்கு கார் அளித்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. அதே வேளையில், நானும் என் குடும்பத்தினரும் வசிக்க ஒரு வீடு ஏற்பாடு செய்து தந்தால் மிகுந்த உதவியாக இருக்கும். நானும் என் தாயும் சகோதர - சகோதரிகளும் வசிக்க வீடு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்'' என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சர் எம்.பி பாட்டீல், ராஜேஸ்வரியின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ராஜேஸ்வரிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட, அதை அவர் ஏற்றுக்கொண்டார். 

 ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கம்ராகருக்கு பி.எம்.டபிள்யூ கார் வழங்கி, பின்னர் காரை திருப்பியளித்ததும் வரலாறு. வசிக்கவே வீடு இல்லாதவர்க்கு கார் வழங்கி என்ன பயன்?. குறிப்பறிந்து உதவும் பழக்கம் என்றுதான் நம் அரசுகளுக்கு வருமோ தெரியவில்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க