வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (17/08/2017)

கடைசி தொடர்பு:12:35 (17/08/2017)

அய்யோ பாவம் பார்சிலோனா... ரியல் மாட்ரிட் சூப்பர் கப் சாம்பியன்! #RealMadridVsBarcelona

ஸ்பெயினின் சூப்பர்கோப்பைக்கான இரண்டாவது லெக் ஃபைனலில் 2-0 என்ற கோல் கணக்கில், தனது பரம எதிரியான பார்சிலோனாவை தோற்கடித்ததன்  மூலம், இந்த வருடத்தில் இரண்டாவது கோப்பையைக் கையில் ஏந்தியிருக்கிறது ரியல் மாட்ரிட். ‘இது பார்சிலோனா அணியே இல்லை’ என ரசிகர்கள் வருந்துமளவுக்கு சுமாரான ஆட்டத்தை பார்சிலோனா வெளிப்படுத்த, ஆர்ப்பாட்டமே இல்லாமல் கவுன்டர் அட்டாக்கில் ஜொலித்து, ‘நாங்கள் சாம்பியன்’  என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டது  ரியல் மாட்ரிட். 

Real Madrid Vs Barcelona

கடந்த வாரம் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அசென்சியோ ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் 3-1 என்று முன்னிலை பெற்றிருந்த ரியல் மாட்ரிட், இந்த போட்டியில் 2 கோல்கள் அடித்ததுடன் பார்சிலோனா அணியினரை கோல் எதும்  அடிக்கவிடாமல் முடக்கி,  முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போது பார்சிலோனா ஆட்டத்தை ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தனர். அணி நிர்வாகமும் வசைக்குத் தப்பவில்லை. ஆனால், மறுபுறம் ரியல் மாட்ரிட் ரசிகர்கள் பார்கா ரசிகர்களை ட்ரோல் செய்து, தங்கள் வெற்றியைக் கொண்டாடினர்.

காயத்தால் பார்சிலோனா கேப்டன் இனியஸ்டா ஆடவில்லை. அவருக்குப் பதிலாக மெஸ்சி கேப்டனாக செயல்பட்டார். ரியல் மாட்ரிட் தரப்பில் இஸ்கோ, கெராத் பேல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட, கடந்த போட்டியில் ஆடாத லுக்கா மோட்ரிச் அணிக்குத் திரும்பினார். சென்ற போட்டியில் தடை விதிக்கப்பட்ட ரொனால்டோவை மிஸ் செய்தாலும் ரியல் மாட்ரிட் அணியில் பிற வீரர்கள் போட்டியின் ஆரம்பம் முதலே பட்டையைக் கிளப்பினர்.

விசில் ஊதியதுதான் தாமதமென பந்தைப் பறித்ததும் பார்சிலோனா கோல் கம்பத்துக்குப் படையெடுத்தனர் ரியல் மாட்ரிட் வீரர்கள். ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே அதற்கு கைமேல் பலனாக  கிடைத்தது ஒரு கோல். பார்சிலோவின் டிஃபென்ஸ் ஓட்டையைப் பயன்படுத்தி 30 யார்ட்ஸ் தொலைவிலிருந்து 21 வயது இளம் வீரர்  அசென்சியோ இடது காலால் வெடி ஒன்றை பற்றவைக்க, அது கம்பத்திற்கு வராது என அசால்ட்டாக இருந்த பார்சிலோனா கீப்பர் டெர் ஸ்டேகனை ஏமாற்றிவிட்டு வலைக்குள் சென்று வெடித்தது. ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை.

Real Madrid Vs Barcelona

இத்தனை ஆண்டுளாக டிக்கி டாக்கா யுக்தியை வைத்து  எதிரணிகளை ஆட்டிப்படைத்த பார்சிலோனா, பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே அநியாயத்திற்கு சிரமப்பட்டது. சுவாரஸ் ஒருபுறம் திணறிக் கொண்டிருக்க, மெஸ்சி ஒருபுறம் திகைத்து நிற்க, அடை மழைபோல் பொழிந்தது ரியல் மாட்ரிட்டின் கவுன்டர் அட்டாக். முதல் பாதி முழுவதுமே மார்செலோ, அசென்சியோ, பென்சிமா, மோட்ரிச் என ரியல் மாட்ரிட் வீரர்கள் எல்லோரும் பார்சிலோனா எல்லையிலேயே குடியிருந்தனர். இரண்டொரு முறை மெஸ்சி, ரியல் மாட்ரிட் கோல் கம்பத்தை நெருங்கினார். ஆனால், கோல் கீப்பர் நவாஸ் தன் கடமையை சிறப்பாகச் செய்ததால் பார்சிலோனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஜெரார்டு பீக்கே, உம்டிடி என பார்சிலோனா டிஃபென்ஸ் வீரர்கள் பந்தைக் கிளியர் செய்து கிளியர் செய்தே டயர்டாகி விட்டனர்.  ஆட்டத்தின் 39-வது நிமிடம். பார்சிலோனா எல்லையில் மீண்டும் ஒரு பலத்த இடி. கவுன்டர் அட்டாக்கில் அசென்சியோ பாஸ் செய்த பந்தை மார்செலோ அருமையாக பாக்ஸிற்குள் கிராஸ் செய்ய, அதை முதல் டச்சில் கண்ட்ரோல் செய்து இரண்டாவது டச்சில் Volley ஷாட் மூலம் கோலாக்கினார் கரீம் பென்சிமா. பார்சிலோனா டிஃபென்ஸ் தகிடுதத்தம் போட, இரண்டாவது கோலால் மீண்டும் முன்னிலை பெற்றது ரியல் மாட்ரிட். மேற்கொண்டு கிடைத்த வாய்ப்புகளை இரு தரப்பும் வீணாக்க முதல் பாதி முடிந்தது. 

Real Madrid Vs Barcelona


இரண்டாம் பாதியில் பார்சிலோனா அணிக்கு தூ(து)க்கம் கலைய, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மெஸ்சியும் சுவாரஸும் ரியல் மாட்ரிட் பாக்சிற்குள் அடிக்கடி நுழைந்தனர். ஆனாலும் பந்தை எடுத்து நான்கு டிபெண்டர்களை டிரிபிளிங் செய்து மடித்து பந்தை பாக்சிற்குள் கடத்த நெய்மர் போன்ற ஆள் இல்லாததால், காயமுற்ற குதிரை போல நிற்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் தடுமாறவே செய்தது பார்சிலோனா. 53-வது நிமிடத்தில் மெஸ்சி, ரியல் மாட்ரிட் டிஃபெண்டர்களை ஏமாற்றி கீப்பர் நவாஸின் கைகளில் சிக்காதவாறு பந்தை வலைக்குள் அனுப்ப அது பாரில் பட்டு, கோல் எல்லைக்கு வேளியே பிட்ச்சாகி ஏமாற்றியது. 71-வது நிமிடத்தில் பாக்சிற்கு வெளியிலிருந்து மெஸ்சி அடித்த ஷாட்டை கீப்பர் நவாஸ் தடுக்க ,லோவாக ரிஃப்ளெக்சான பந்தை சுவாரஸ் ஹெடர் செய்ய ,வலைக்குள் செல்ல வழி இருந்தபோதிலும் அதுவும் கம்பியில் பட்டு வெளியேறியது.

சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மெஸ்சி என்னதான் முயற்சி செய்த போதிலும் தோல்வி நிலையிலிருந்து பார்சிலோனாவைக் காப்பாற்ற முடியலவில்லை. ஆக, பாவம் மெஸ்சியின் மேஜிக்கிற்கும் பார்சிலோனாவிற்கும் கடைசிவரையில் அதிர்ஷ்டம் அடிக்கவேயில்லை. இரண்டாவது பாதியில் நிதானத்தை கடைபிடித்த ரியல் மாட்ரிட், சீராக பாஸ் செய்ததுடன் தேவைப்பட்ட நேரத்தில் இலக்கை நோக்கி ஷாட்களை அடிக்கவும் தவறவில்லை.  ஆனாலும் லூகஸ், பென்சிமா, அசென்சியோ ஆகியோரின் ஷாட்டுகள் கோலாக மாறவில்லை. மெஸ்சி, மாற்று வீரராகக் களமிறங்கிய நெல்சன் செமடு ஆகியோரைத் தவிர பார்சிலோனா அணியில் வேறு யாரும் ஜொலிக்கவில்லை. இரண்டாம் பாதியில் பாக்ஸ் டூ பாக்ஸ் (இரண்டு கோல் பாக்சிற்கும்) பந்து சென்றாலும் கோல் ஏதும் விழவில்லை. விரக்தியுடன் பார்சிலோனா வீரர்கள் செயல்பட கடைசி கட்டத்திலும் அட்டாக்கிங்கை தொடர்ந்த ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோவை வீழ்த்தியது.

Real Madrid Vs Barcelona

முதல் லெக் போட்டியில் 3-1 என்று வெற்றி கண்டிருந்த ரியல் மாட்ரிட் அணி இறுதியாக 5-1 என்ற என்ற கோல் கணக்கில் சாம்பியன் ஆனது. எல் கிளாசிகோவின் இலக்கணமான... அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு, ரத்தம் தெறிக்கும் மோதல்கள், பழிவாங்கல்கள் என எந்த வரைமுறைக்குள்ளும் அடங்காமல் இருந்தது இந்த ஆட்டம். ஆனாலும், பரம எதிரிகள் மோதிய இந்த ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு சரியான விருந்துதான்.


டிரெண்டிங் @ விகடன்