கேப்டனையே பெஞ்சில் உட்காரவைத்த தமிழ் தலைவாஸ்... 'டை' ஆன போட்டி! #ProKabaddi

கடைசி ஓவர் கடைசி பந்தில் கிரிக்கெட்  மேட்ச் முடிவதைப் போன்ற த்ரில்லர்கள் புரோ கபடியிலும் (Pro Kabaddi)  தொடருகின்றன. தமிழ் தலைவாஸ் மேட்ச் ஆடினாலே த்ரில்லிங் மேட்ச்சாக அமைந்து விடுகிறது. நேற்று நடந்த மேட்சும் அப்படித்தான் நிறைவடைந்தது. 

புரோ கபடி ஐந்தாவது சீசனின் முப்பதாவது போட்டி நேற்று அகமதாபாத்  டிரான்ஸ்டடியா ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு எட்டு மணிக்கு நடந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் தமிழ் தலைவாஸ் அணியும் மோதின.  இந்தப் போட்டிக்கு முன்பாக மூன்று போட்டிகளில் விளையாடியிருந்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஒரு வெற்றி ஒரு தோல்வி ஒரு டிராவுடன்  9 புள்ளிகளைப் பெற்றிருந்தது. 'அ'  மண்டலப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஹரியானா நான்காவது இடத்தில் இருந்தது. தமிழ் தலைவாஸ் அணி 'ஆ' மண்டலத்தில் கடைசி இடத்தில் இருந்தது. தமிழ் தலைவாஸ் அணி முந்தைய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வி, ஒன்றில் வெற்றி என ஏழு புள்ளிகள் எடுத்திருந்தது.

Pro Kabaddi: Haryana Steelers – Tamil Thalaivas

அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணியில் அமித் ஹூடா, சி. அருண், வினீத் குமார், பிரபஞ்சன், தர்ஷன், பிரதாப் ஆகியோருக்கு பிளேயிங் செவனில் இடம் கிடைத்தது. சுரேந்தர் தலைமையிலான ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு மோஹித் சில்லர், வாசிர் சிங், ராகேஷ் சிங் குமார், விகாஷ் கன்டோலா, நீரஜ் குமார், சுர்ஜீத் சிங் ஆகியோர் விளையாடினார்கள். தமிழ் தலைவாஸ் அணியில் நேற்று அதிரடி மாற்றங்கள் செய்யபட்டிருந்தன. டான்ஜியோன் லீ மாற்று வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தார். 

Pro Kabaddi Logo

டிஃபென்சில் வலுவாக இருக்கும் ஹரியானா ஸ்டீலர்சை தமிழ் தலைவாஸ் எப்படிச் சமாளிக்கப் போகிறது எனக் கேள்வி எழுந்தது. ஆனால், தமிழ் தலைவாஸ் நேற்று நன்றாகவே ஆடியது.முதல் பத்து நிமிடங்களில் இரு அணிகளுக்கும் இடையே பலத்தப் போட்டி இருந்தது. மாறி மாறி புள்ளிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 10 – 13 எனப் பின்தங்கியிருந்தது. அஜய் தாகூர் நேற்று களத்தில் பத்து நிமிடம் கூட விளையாடவில்லை. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அஜய் தாகூரை திடீரென பெஞ்சில் உட்கார வைத்தார் பயிற்சியாளர் பாஸ்கரன். அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களமிறங்கினார். அஜய் பெரிதாக தவறுகள் எதையும் செய்யவில்லை, அவர்தான் தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரரும் கூட. அவர் நேற்று நல்ல ஃபார்மில் விளையாடத் தொடங்கியிருந்தார். அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவும் இல்லை. இப்படியொரு சூழ்நிலையில் அவர் ஏன் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

Pro Kabaddi: Haryana Steelers – Tamil Thalaivas

அஜய் தாகூர் வெளியில் சென்றதும் தமிழ் தலைவாஸ் அணி சோர்ந்துவிட வில்லை. பிரபஞ்சனும் அமித் ஹூடாவும் அணியைக் காப்பாற்றினார்கள். இந்த இரண்டு வீரர்களும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் அருமையாக ஆடினார்கள். இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களில் ஹரியானா அணியை ஆல் அவுட் செய்து அதிர்ச்சி வைத்தியம் தந்தது தமிழ் தலைவாஸ். அதன் பின்னர் பிரபஞ்சன் ஒரு அட்டகாசமான ரெய்டு சென்று ஓர் அற்புதமான ரிவ்யூ மூலம் இரண்டு புள்ளிகளைப் பெற்றார். அந்த நொடியிலிருந்து ஆட்டத்தில் தமிழ் தலைவாஸின் கை ஓங்கியது.

19 – 16 என ஒரு கட்டத்தில் பிந்தங்கியிருந்த ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆட்டத்தின் கடைசிப் பத்து நிமிடங்களில் அதிரடியாகப் புள்ளிகளைக் குவித்தது. ஆட்டம் முடிய மூன்றை நிமிடங்களே இருந்த சூழ்நிலையில் ஸ்கோர் 22 – 22 . கடைசி 210 நொடியில் அந்த அணி ஜெயிக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள மைதானம் அமைதி காத்தது. அப்போதைய சூழ்நிலையில் தேவையில்லாமல் மைதானத்தில் தாமதமாக நுழைந்ததால் ஒரு புள்ளியை இழந்தது தமிழ் தலைவாஸ். எனினும் கடைசி நிமிடத்தில் டான் ஜியோன் லீயின் புத்திசாலித்தனமான ரெய்டால் மேட்ச் சமநிலையில் முடிந்தது.

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி ஒரு போட்டியில் வெற்றியும், இரண்டில் தோல்வியும், ஒன்றில் ‘டை’யையும் சந்தித்திருக்கிறது. தோல்வியடைந்த இரண்டு போட்டிகளிலும் கூட முறையே ஐந்து மற்றும் ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டி சமநிலையில் முடிந்ததால் மூன்று புள்ளிகள் கிடைத்தன. எனினும் அதனால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணியால் முன்னேற முடியவில்லை. மேட்ச் முடிந்த பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரனிடம்  அஜய் தாகூர் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மைதானத்தில் அவர் ஓவர் கான்ஃபிடன்சோடு ஆடினார். அதனால்தான் அவரை வெளியில் உட்கார வைத்தோம் என்றார் பாஸ்கரன். இன்று நடக்கும் போட்டியிலாவது அஜய் தாகூர் களமிறங்குவாரா... தமிழ் தலைவாஸ் ஜெயிக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!