‘தோனியுடன் ஒப்பிடுவதில் எனக்கு மகிழ்ச்சியே!’- இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் #VikatanExclusive | Kabaddi Player Anup Kumar Interview

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (17/08/2017)

கடைசி தொடர்பு:15:15 (17/08/2017)

‘தோனியுடன் ஒப்பிடுவதில் எனக்கு மகிழ்ச்சியே!’- இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் #VikatanExclusive

இந்திய அணிக்காக கபடி உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன் அனுப் குமார்.  சிறந்த ரெய்டர், சிறந்த கேப்டன் எனப் பெயரெடுத்த அனுப்,  புரோ கபடியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் தலைமையில் ஏற்கெனவே யு மும்பா அணி ஒரு முறை சாம்பியனாகி இருக்கிறது. மூன்று முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. 33 வயது அனுப் குமார் இந்திய அணியின் கேப்டன் மட்டுமல்ல ஹரியானாவின் காவல்துறையில் உயர் பதவியில் இருப்பவர். மகேந்திர சிங் தோனிக்கும் இவருக்கும் அடிமட்ட நிலையிலிருந்து இந்தியா போற்றும் வீரனாக உயர்ந்ததில் சில ஒற்றுமைகள் உண்டு. 

Anup Kumar

அனுப் குமாரும் 21 வயதில் சாதாரணமாக கான்ஸ்டபிள் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்தான். ஆனால் இன்று கபடி உலகின் மோஸ்ட் வான்ட்டட் பிளேயர். புரோ கபடி வரலாற்றில் அதிக ரெய்டு புள்ளிகளை எடுத்தவர்களில் இரண்டாமிடம் இவருக்குத்தான். அகமதாபாத்தில் ஒரு மதிய வேளையில் பயிற்சி முடித்து களைப்பாக இருந்தவரிடம் பேசினேன். 

கபடியில் எப்படி ஆர்வம் வந்தது ?
ஹரியானாவில் இருக்கிற கூர்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான்.  அங்கே 'பால்ரா'னு ஒரு கிராமம் உண்டு. நான் அந்த கிராமவாசி தான். எங்க ஊரில் சிறு வயதில் இருந்தே உணவோடு சேர்த்து விளையாட்டையும் ஊட்டி வளர்ப்பாங்க. பசங்க எல்லோரும் விளையாடுவோம். எங்க ஊரில் கபடி ரொம்பவே ஃபேமஸ். சின்ன வயசுல நிறைய கபடிப் போட்டிப் பார்க்கப் போவேன். ஒரு கட்டத்தில் எனக்கும் கபடி மீது காதல் வந்தது. களத்தில் இறங்க ஆரம்பித்தேன். என்னால எத்தனை வயசு எந்த தினத்துல கபடி விளையாட ஆரம்பிச்சேன்னு எல்லாம் சொல்ல முடியாது. ஏன்னா... எனக்கே அது நினைவு இல்லை. மற்ற ஊர்கள்ல கிரிக்கெட் விளையாடுற மாதிரி எங்க ஊர்ல கபடி விளையாடுவோம். அதனால் கபடி மீது ஆர்வம் வரலைன்னாதான் ஆச்சர்யம். 

சின்ன வயசுல என்னவாக ஆகணும்னு ஆசைப்பட்டீங்க ?
கபடி விளையாடினா நாளைக்கு இந்திய அணிக்கு ஆடலாம், நிறைய பணம் சம்பாதிக்கலாம்னு பிளான் பண்ணி எல்லாம் கபடி விளையாட ஆரம்பிக்கல. அதான் உண்மை. சின்ன வயசுல எனக்கு எந்தக் கனவும் கிடையாது. ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலிதான் எங்களுடையது. கல்லூரி போற வரைக்கும் நான் எதையும் முடிவு பண்ணல. எங்க வீட்டிலையும் சரி, பள்ளியிலும் சரி அந்தக் காலகட்டங்களில் எதையும் என் மீது திணிக்கல. கட்டாயப்படுத்தல. பள்ளிக்குப் போவேன்; படிப்பேன்;  கபடி விளையாடுவேன். அவ்வளவுதான். 

அனுப் குமார்

கான்ஸ்டபிளாக வாழ்க்கையைத் தொடங்கியபோது ஒரு நாள் இந்திய அணிக்கு கேப்டன் ஆகப் போகிறீர்கள் என்பது குறித்த கனவு இருந்ததா? 
அப்பா ஆர்மியில் இருந்தார். வீட்ல எனக்கு ஒரு அண்ணன், இரண்டு தங்கச்சி, அன்பான அம்மா இருக்காங்க. கல்லூரி படிக்கிறப்பதான் அரசாங்கத்துல ஒரு வேலை வாங்கணும்னு முடிவு பண்ணேன். அதுக்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். 21 வயசுல கான்ஸ்டபிளா  மிகச் சாதாரணமான ஒரு வாழ்க்கையைத் தொடங்கினேன். அங்கே கபடி விளையாடுவதற்கான சூழ்நிலை இருந்தது. நம்ம கேம் தானே; கலக்குவோம்னு இறங்கினேன். அப்போது கூட இந்திய அணிக்கு விளையாடுவேன்னோ, இல்லை ஒரு நாள் கேப்டன் ஆகப்போறேன்னோ ஒரு நிமிஷம் கூட நினைச்சதில்ல.

போலீஸாகப் பணியாற்றிய போது மறக்கமுடியாத அனுபவம் என்ன ?
நான் 22 -23 வயசுலேயே முழுமையாகக் கபடி விளையாட ஆரம்பிச்சிட்டேன். எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தால் எங்க டிப்பார்ட்மென்ட்லையும் என்னைக் கபடி விளையாட அனுமதிச்சாங்க. கடந்த பத்து வருசமா கபடியில்தான் முழு கவனம் செலுத்தியிருக்கிறேன். போலீஸா பணியாற்றிய போது மறக்கமுடியாத அனுபவம்னோ, சாதனைனோ ஒன்னும் இல்லை. இனி வரும் காலங்களில்தான் அங்கே சாதிக்கணும். 

Anup Kumar

உலகக் கோப்பையை வென்ற தருணம் எப்படி இருந்தது?
என் வாழ்க்கையில் நிறைய ஆச்சர்யங்கள் நடந்தன. கபடி திடீரென இந்தியாவில் பாப்புலர் ஆனது. கோடிக்கணக்கான ரசிகர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள். எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்ததும், கேப்டன் ஆனதும், உலகக் கோப்பைக்கு இந்த தேசத்துக்கு தலைமையேற்க வாய்ப்பு கிடைத்ததும், மிகப்பெரிய அளவில் நடந்த உலகக் கோப்பையில் இந்தியா வென்றதும் என் வாழ்வின் பொன்னான தருணங்கள். அந்தத் தருணத்தில் இருந்த ஆனந்தமான மனநிலையை எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை.

புரோ கபடிக்கு முன், புரோ கபடிக்கு பின் ... உங்கள்  லைஃப் ஸ்டைல் பற்றி... 
நிறைய மாறுதல் இருக்கிறது. கபடிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் நாடு முழுவதும் உருவாகியிருக்கிறது. முன்பெல்லாம் கபடி பிளேயர்கள் பற்றி யாருக்கும் தெரியாது. மீடியாக்கள் கூட கபடியைப் பற்றி எழுத மாட்டார்கள், பேச மாட்டார்கள். இந்த லீக் வந்த பிறகு எங்களின் வாழ்க்கை மாறியிருக்கிறது. கபடி விளையாடுவதால் பொருளாதாரப் பலன்கள் கிடைத்திருக்கின்றன. மக்கள் எங்களை களத்துக்கு வெளியே அடையாளம் காண்கிறார்கள். வீரர்களுக்குத் தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது கபடி என்கிற விளையாட்டு காப்பாற்றப்பட்டதும், கபடியை கரியராக எடுக்கத் துணியும் ஆயிரக்கணக்கான பிளேயர்களுக்கு வாழ்வில் ஒரு ஒளிக்கீற்று தெரிய ஆரம்பித்திருப்பதுமே பெரிய விஷயம். 

Anup Kumar

 

யு மும்பா இந்த சீசனில் கோப்பையை ஜெயிக்குமா ?
நிச்சயமாக. அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? நாங்கள் மூன்று சீசனில் இறுதிப்போட்டி வரை வந்திருக்கிறோம். ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறோம். இந்த சீசனில் எங்களது முதல் இலக்கு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதே, நிச்சயம் எல்லாம் நல்லபடியாக நடக்கும். 

கேப்டன் 'கூல்' என உங்களை ரசிகர்கள் அழைக்கிறார்கள். உங்களுக்குக் கோபம் வராதா? எப்படிக் கட்டுப்படுத்துகிறீர்கள்? 
எனக்கு கோபம் பயங்கரமாக வரும். ஆனால், எதன் மீதும் என் கோபத்தை காண்பிக்க மாட்டேன். என்னுடை இயல்பே அதுதான். களத்தில் மட்டும் 'கூல்' அல்ல. வாழ்க்கையிலுமே. 

யு மும்பா இந்த சீசனில் சற்றே தேங்கியிருக்கிறதே ?
நான்கு மேட்ச் நடந்திருக்கிறது. இரண்டில் வென்றோம். கடைசி மேட்ச் சரியாக விளையாடவில்லை. விளையாட்டைப் பொறுத்தவரையில் ஒரு நாள் மேலே இருப்போம் இன்னொரு நாள் கீழே செல்வோம். இது இயல்பானதே. புரோ கபடி மிகப்பெரியத் தொடர். வெறும் நான்கு போட்டிகளை வைத்து ஒரு அணியை எடை போடாதீர்கள். இனி வரும் காலங்களில் மிகச்சிறப்பாக செயல்படுவோம் என நம்பிக்கை இருக்கிறது.

இளம் வீரர்கள் யார் யார் உங்களைக் கவர்ந்திருக்கிறார்கள்? 
யு மும்பா அணியைப் பொறுத்தவரை சுரேந்தர், ரெஞ்சித், ஜோகீந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடுகிறார்கள். இன்னும் ஸ்ரீகாந்த், சிவம் என இரண்டு பேர் பெஞ்சில் இருக்கிறார்கள். அவர்களும் நல்ல பிளேயர்கள். விரைவில் பிளேயிங் செவனில் அவர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். சுபாஷ் , மோகன், தீபக் என மற்ற இளைஞர்களும் நன்றாக ட்ரெயின் ஆகி வந்துகொண்டிருக்கிறார்கள். 

Anup Kumar

உங்களுக்கு எது சவாலான டீம்? 
எந்தவொரு டீமையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. எல்லாமே சவாலான டீம்கள். எந்த அணியும் எந்த எதிரணியையும் தோற்கடிக்கும் வலிமை கொண்டதாகவே இருக்கிறது. எந்த அணி புத்திசாலித்தனமாகவும் கடைசி வரை தொடர்ச்சியாக நல்ல ஃபார்மிலும்  விளையாடுகிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும். 

இந்த சீசனில் புதிதாகக் களமிறங்கியிருக்கும் நான்கு டீம்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்களா?
யு பி யோதா, ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ், தமிழ் தலைவாஸ் ஆகிய நான்கு டீம்களும் சிறப்பாகவே விளையாடுகின்றன. தமிழ் தலைவாஸ் அணியைத் தவிர மற்ற அணிகளில் பெரிய பிளேயர்கள்,  நிறைய பேருக்கு அறிமுகமான பிளேயர்கள் இருக்கின்றனர். தமிழ் தலைவாஸ் அணியைப் பொறுத்தவரை அஜய் தாகூர், அமித் ஹூடா, பிரபஞ்சன் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் பெரிய அறிமுகம் இல்லாதவர்கள். தமிழ் தலைவாஸ் அணியில் இளைஞர்கள் மட்டுமே இருக்கிறார்கள். சின்னப் பசங்களா இருந்தாலும் ஏழெட்டு பேர் நன்றாகவே ஆடுகிறார்கள். முதலில் தமிழ் தலைவாஸ் லேசாகத் தடுமாறினாலும் இப்போது அவர்களின் ஆட்டம் மெருகேறியிருக்கிறது. 

Anup Kumar

அஜய் தாகூர் மற்றும் பயிற்சியாளர் பாஸ்கரனுடன் பணிபுரிந்த அனுபவம்? 
அஜய் தாகூர் அருமையான பிளேயர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் இரண்டாவது பாதியில் அவரது மாஸ் பெர்ஃபார்மென்ஸ்தான் இந்தியா கோப்பையை ஜெயிக்க முக்கியக் காரணம். நல்ல பிளேயர் மட்டுமல்ல நல்ல நண்பரும் கூட. அவர் முழு உடற்தகுதியுடன் முழு ஃபார்மில் ஆடி, அணியை நல்ல படியாகத் தலைமையேற்று நடத்தினால் அந்த அணி நிச்சயமாக இந்த சீசனில் பல உயரங்களைத் தொடும். பாஸ்கரன் சார் நல்ல பயிற்சியாளர். அவர் நல்ல பிளேயரும் கூட. இந்தியாவுக்காகப் பல போட்டிகள் தலைமை தாங்கியிருக்கிறார். கடந்த உலகக் கோப்பையில் அவர்தான் எங்களுக்குப் பயிற்சியாளர். அவருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்புக் கிடைத்தது. எதையும் அன்பாகச் சொல்லும் பழக்கமுடையவர். டிஃபென்ஸ், அஃபென்ஸ் இரண்டிலும் அவர் கில்லாடி. இரண்டிலும் எங்களுக்குப் பயிற்சியளிப்பார். கோபம் இல்லாத அவருடைய அணுகுமுறை எனக்கு ரொம்பவே பிடிக்கும். 

இந்திய அணிக்கு சர்வதேச போட்டிகளில் எது சவாலான அணி? 
நிச்சயம் ஈரான்தான். புரோ கபடி விளையாடிய அனுபவம் அவர்களுக்கு நிறையவே கைகொடுக்கிறது. இனி வரும் காலங்களில் இந்தியா - ஈரான் இடையேயான போட்டிகள் கடும் சவால் மிக்கதாகவே இருக்கும் என நினைக்கிறேன். 

உங்களை கபடியின் மகேந்திர சிங் தோனி என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்களே? கவனித்தீர்களா
பார்த்தேன். ரசித்தேன். ரொம்பவே நல்லா இருந்தது. மகிழ்ச்சி.


டிரெண்டிங் @ விகடன்