வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (18/08/2017)

கடைசி தொடர்பு:08:06 (18/08/2017)

இந்தியாவுக்கு எதிராக ஆல் ரவுண்டராகக் களம் இறங்கப்போகும் ஏஞ்சலோ மேத்யூஸ்!

வரும் 20-ம் தேதி, இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடப்போகும் ஒருநாள் போட்டியில், ஏஞ்சலோ மேத்யூஸ் ஆல்-ரவுண்டராகக் களம் இறங்க உள்ளார். 

ஏஞ்சலோ மேத்யூஸ்

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடர் சில நாள்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதில் இலங்கை அணி, இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது. இதையடுத்து, ஒருநாள் போட்டியிலாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு இலங்கை அணி உள்ளது. இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், ஒரு நாள் தொடரில் ஆல்-ரவுண்டராகக் களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பல மாதங்கள் அணியில் பேட்ஸ்மேனாக மட்டுமே மேத்யூஸ் செயல்பட்டுவந்தார். இதுகுறித்து இலங்கை அணியின்  தேர்வு வாரியத் தலைவரான சனத் ஜெயசூரியா, 'மேத்யூஸ், இலங்கை அணிக்காக திரும்பவும் பௌலிங் செய்யலாம் என்ற செய்தியே பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரால் 10 ஓவர்களையும் வீச முடியாத நிலைதான் இன்னும் உள்ளது. ஆனால், 5 அல்லது 6 ஓவர்கள் வீசும் உடல் தகுதி தற்போது அவருக்கு இருக்கிறது. இதனால், அணியில் சமநிலையைக் கொண்டுவர முடியும்' என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணி தோல்வியடைந்த பிறகு, தனது கேப்டன் பதவியை மேத்யூஸ் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.