வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (18/08/2017)

கடைசி தொடர்பு:14:37 (18/08/2017)

அஜய் தாகூரின் ‘தவளை யுக்தி’ வீண்... டெல்லியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்! #ProKabaddi

சில நேரங்களில் உடல் வலிமையை நம்புவதை விட புத்திக் கூர்மையை நம்ப வேண்டியது அவசியம். அப்படி நம்பாததால் மிக மோசமான ஒரு தவறைச் செய்து மீண்டும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தேமேவென உட்கார்ந்திருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி.  

Pro kabaddi: Dabang Delhi KC Vs Tamil Thalaivas

புரோ கபடி லீக் இந்த சீசனின் 32-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் தபாங் டெல்லி அணியும் மோதின. நேற்றைய தினம் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் பிளேயிங் செவனில் அஜய் தாகூர், அமித் ஹூடா, அருண், வினீத் குமார், பிரபஞ்சன், தர்ஷன், பிரதாப் ஆகிய வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்தது. அஜய் தாகூர் தலைமை தாங்கினார். டெல்லி அணிக்கு மீராஜ் ஷேய்க் தலைமையேற்றார். அவரது தலைமையிலான டெல்லி தபாங் அணியில் நிலேஷ் ஷிண்டே, ரவி தலால், பாஜிராவ் ஹோடேஜ், சுனில், ரோஹித் பலியான், விராஜ் விஷ்ணு ஆகியோர் களமிறங்கினார்கள். 

Pro Kabaddi logo

தமிழ் தலைவாஸ் அணி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளில் முதலில் வில்லனிடம் நான்கு அடி வாங்கிவிட்டு திருப்பி அடிப்பது போல முதல் பாதியை ஆடியது. டெல்லி அணியின் கேப்டன் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ரெய்டுக்கு வந்து சூறாவளியாய் சுழன்று புள்ளிகளை அள்ளினார். தமிழ் தலைவாஸ் அணி சுதாரிப்பதற்குள் டெல்லி  அணிக்கு ஐந்து புள்ளிகள் சென்றிருந்தன. 5 - 2 என கெத்தாக முன்னிலையில் இருந்தது டெல்லி. தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆகிவிடக் கூடும் என்ற பதற்றம் ரசிகர்களிடம் தெரிந்தது. அப்போது மீராஜ் ஷேய்க் ரெய்டு வந்தார். அவரை சூப்பர் டேக்கிள் செய்தது தமிழ் தலைவாஸ். இப்போது இரண்டு புள்ளிகள் கிடைத்தால் ஸ்கோர் 4 ஆக உயர்ந்தது.

Pro kabaddi: Dabang Delhi KC Vs Tamil Thalaivas

பத்து நிமிடங்கள் முடிவில் ஸ்கோர் 6 - 6 என சமநிலையில் இருந்தது. முதல் பாதியின் கடைசி இரண்டு நிமிடங்களில் 12 - 9 என முன்னிலையில் இருந்தது தமிழ் தலைவாஸ். அப்போது ரெய்டுக்கு வந்த மீரஜை அட்டகாசமாக டேக்கில் செய்தார் பிரதாப். முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் செய்த அந்த மேஜிக் டேக்கிளால் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளை சமன் செய்தது. 

இரண்டு அணிகளுமே இந்த சீசனில் வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அணி என்பதால் இரண்டாம் பாதியும் பரபரப்பாகவே தொடங்கியது. தமிழ் தலைவாஸ் போட்டி முழுவதுமே ஆதிக்கம் செலுத்தியது. பயிற்சியாளர் பாஸ்கரன் நேரத்துக்குத் தகுந்தாற்போல வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்கினார். அஜய் தாகூர் முதல் முறையாக இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய தினம் தமிழக வீரர் பிரபஞ்சன் சொதப்பலாக விளையாட அணிக்கு கை கொடுத்தது அஜய்தான். ஒவ்வொரு முறை ரெய்டுக்குச் செல்லும்போதும் புள்ளிகளை எடுப்பதில் கவனமாகவும், டேக்கிள் செய்யப்பட்டு விடக் கூடாது என்பதில் அதி கவனமாகவும் விளையாடினார்.  எதிரணியினர் பிடியில் சிக்கும்போதெல்லாம் தவளை போல துள்ளித் தாவி தப்பித்தார். 

Pro kabaddi: Dabang Delhi KC Vs Tamil Thalaivas

ஒரு கட்டத்தில் டெல்லி ஆல் அவுட் ஆனது. அப்போது ஸ்கோர் 25 -22 . டூ ஆர் டை ரெய்டு சென்ற அஜய் தாகூர் இரண்டு புள்ளிகளை எடுத்தார். இப்போது ஸ்கோர் 27 - 23. தமிழ் தலைவாஸ் கொஞ்சம் கவனமாக விளையாடினால் வெற்றி நிச்சயம் என்ற சூழ்நிலையே நிலவியது. கடைசி மூன்று நிமிடத்திற்கு முன்பாக ஸ்கோர் 28 - 25. கடைசி நிமிடத்துக்கு முன்பாக ஸ்கோர் 28 - 27. ஒரு புள்ளி முன்னணியில் இருந்தது தமிழ் தலைவாஸ். 

Pro Kabaddi

இந்தச் சூழ்நிலையில் ரெய்டுக்குச் சென்றார் டெல்லி கேப்டன் மீரஜ் ஷேய்க். களத்தில் நான்கு தமிழ் தலைவாஸ் வீரர்கள்தான் இருந்தனர். முப்பது நொடியை ஓட்டினால் தமிழ் தலைவாஸ் கையில் மேட்ச். ஆனால், பேராசைப்பட்டு மீரஜ ஷேய்க்கை பிடிக்க மூன்று பேர் பாய்ந்தார்கள். அசால்ட்டாக கோட்டைத் தொட்டார் மீரஜ். மேட்ச் காலி. ஒருவர் பிடிக்க முயன்று தோல்வி அடைந்திருந்தால் கூட அப்போது மேட்ச் சமனில்தான் இருந்திருக்கும். விவேகமற்ற செயலால் புள்ளிகளை இழந்தது தமிழ் தலைவாஸ்.ஸ்கோர் 30 - 28. கடைசி 30 நொடியில் ரெய்டுக்குச் சென்ற அஜய் ஒரு புள்ளி எடுத்தார். கடைசி 12  நொடிகளை ரெய்டுக்குச் சென்று வெட்டியாகக் கடத்தினார் மீரஜ். டெல்லி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வென்றது. 

Pro kabaddi: Dabang Delhi KC Vs Tamil Thalaivas

இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் வெற்றிக்கு அருகில் வந்து கடைசி நிமிடத்தில் மேட்ச்சை கோட்டை விடுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு போட்டிகளில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. ஒரு மேட்ச்சை டிரா செய்திருக்கிறது. அந்தக் கவனமின்மையால் இப்போது புள்ளிப் பட்டியலில் பரிதாப நிலையில் இருக்கிறது தமிழ் தலைவாஸ். அஜய் தாகூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு மெள்ள மெள்ள மங்கத்தொடங்கியிருக்கிறது. மேட்ச்சைப் போல தொடரையும் அசால்ட்டாக எடுத்துக் கொண்டு கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தால் பிளே ஆஃப் வாய்ப்பு கனவுதான்.


டிரெண்டிங் @ விகடன்