வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (18/08/2017)

கடைசி தொடர்பு:21:42 (18/08/2017)

'இதே நாள், இதே மைதானம்... இதே நாற்காலி!' - நெகிழ்ந்த கோலி

இந்திய கிரிக்கெட்டின் புதிய மந்திரம் கோலி. டெஸ்ட்  தொடர்களில் தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் கோலி சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான தினம் இன்று (18.8.2008).


இதே ஆகஸ்ட் 18, 2008-ம் ஆண்டு விராட் கோலி சர்வதேசப் போட்டியில் முதன்முதலாக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அந்தப் போட்டியில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு, நடந்தது எல்லாம் வரலாறுதான். இன்றைக்கும் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ள ஒரே வீரர் கோலி என்று கூறலாம். 

தற்போதும் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரைச் சாதனையுடன் கைப்பற்றிய இந்திய அணி தற்போது ஒரு நாள் தொடருக்காகத் தயாராகி வருகிறது. இந்நிலையில், இன்று கேப்டன் கோலி தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும்படியான படம் அது. அந்தப் படத்தோடு, "இதே நாளில், இதே மைதானத்தில், இதே நாற்காலியில்தான் இந்திய அணியுடனான எனது பயணம் தொடங்கியது" என்று நெகிழ்ச்சியாக நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். இந்திய - இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.