வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (19/08/2017)

கடைசி தொடர்பு:12:48 (21/08/2017)

'மாரியப்பன்தான் எங்கள் ரோல் மாடல்'- சாதனைப்படைத்த வீரர்கள் பெருமிதம்

கனடாவில் குள்ளமான நபர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தங்கப் பதக்கங்களை அள்ளி நாடு திரும்பியுள்ளனர்.

பாராலிம்பிக்

குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 7வது முறையாக கனடாவில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 17 பேர் தேர்வாயினர். இதில் தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ்,  மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் மற்றும் மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த மனோஜ் மூவரும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஈட்டி எரிதலில் தங்கமும் வட்டு எரிதல் மற்றும் குண்டு எரிதலில் வெள்ளியும் வென்ற வீரர் மனோஜ் கூறியபோது, ''கடந்த மாதம் ராஜஸ்தானில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் குண்டு எரிதலில் 8.24 மீட்டர் என்ற அளவில் வெற்றி பெற்றேன். அதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் தங்கம் வென்றுள்ளேன். நாட்டுக்காக தங்கம் ஜெயிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்பா பேங்க் செக்கரட்ரி, அம்மா ஹவுஸ் ஒய்ப்னு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் நான் .பதினேழு வயசுல இருந்து பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். என்னைப் போன்ற வீரர்களுக்கு உதவுற வகைல அரசாங்கம் ஊக்கத்தொகை வழங்கி அங்கீகரிக்கணும். இது எங்களுக்கான உத்வேகமா அமையும். தங்க மகன் மாரியப்பன் என் ரோல் மாடல்" என்றார்.

தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் தடகளப் பயிற்சியாளர்கள் ரஞ்சித் மற்றும் சுந்தர் கூறுகையில்," கடந்த மூன்று ஆண்டுகள் மேற்கொண்ட கடும் பயிற்சிக்கான வெற்றிதான் இது. தமிழகத்திலிருந்து முதல்முறையாக குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. அடுத்ததாக நடக்கவுள்ள ஏசியன் கேம்ஸில் இவர்களைப் போன்ற வீரர்கள் பதக்கங்களை அள்ள அரசாங்கம் ஊக்குவிக்கணும். பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் இந்தக் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வைத்துள்ளோம். மற்ற மாநிலங்களைப்போல அரசாங்கம் ஒத்துழைச்சா தமிழகத்தின் இதுபோன்ற திறமைமிக்க வீரர்களை மேலும் உருவாக்க முடியும்” என்றார்.

தங்கம் வென்ற செல்வராஜ் கூறுகையில், "மாற்றுத்திறனாளியாகப் பிறந்தவங்களுக்கு, அந்தக் குறை ஒரு தடையில்ல. மாரியப்பன், லக்ஷ்மணன்னு அவங்கள உதாரணமாக்கி நாங்க ஜெயிச்சதப்போல , எங்கள பின்தொடர்ந்து பல வீரர்கள் சாதிக்கணும். என்னோட வாழ்நாளில் மறக்க முடியாத வெற்றி இது. எங்க கோச் சுந்தர், ரஞ்சித் மற்றும் பன்னீர் அண்ணா இல்லாம இந்த வெற்றி சாத்தியமில்ல. 2020ல் டோக்கியோவில் நடக்கவிருக்குற ஏசியன் கேம்ஸ்ல தங்கம் வாங்கணுங்றது தான் என்னோட ஆசை. அரசு இதுக்கு ஒத்துழைக்கணும்" என்றார். 

கிளாஸ் ஒன் பிரிவில் தங்கம்  வென்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த வீரர் கணேஷ், "கிளாஸ் ஒன் பிரிவில் ஈட்டி எரிதலில் தங்கம் வென்றுள்ளேன். இந்தியாவுக்காக  ஜெயிச்சதுல பெருமையா இருக்கு. திறமைகள அடையாளப்படுத்தணும். தமிழக வீரர் மாரியப்பனைப் போல பரிசுகளும் அங்கீகாரமும் வழங்க வேண்டும்"என்றார்.