வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (19/08/2017)

கடைசி தொடர்பு:10:49 (19/08/2017)

ரஷ்யாவுக்காகக் களமிறங்கும் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் வீரர்

லண்டன் ஒலிம்பிக்கின் சைக்கிள் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் ஷேன் பெர்கின்ஸுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டது. 

ஷேன் பெர்கின்ஸ்


இதற்கான உத்தரவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டார். இதையடுத்து வரும் 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா சார்பில் ஷேன் பங்கேற்கவிருக்கிறார். ஷேன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி, கடந்த 2016-ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தொடரின் ஆஸ்திரேலிய சைக்கிள் பந்தய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்த ஷேன், கடந்த பிப்ரவரியில் ரஷ்ய குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம், தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஷேன் பெர்கின்ஸ், இரண்டு முறை சைக்கிளிங் உலக சாம்பியன்ஷிப்பிலும் பட்டம் வென்றிருக்கிறார். இதுகுறித்து பேசிய ஷேன், ‘குடியுரிமை வழங்கிய ரஷ்ய அதிபர் புதினுக்கு, எனது பயிற்சியாளர் விளாடிமிர் கோசோவுக்கும் எனது அணியினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்காகக் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று கூறினார்.