வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (20/08/2017)

கடைசி தொடர்பு:10:38 (21/08/2017)

'2019 உலகக் கோப்பைக்கு இது முக்கியம்' - கோலி தகவல்

இந்திய அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, இலங்கையை வொய்ட் வாஷ் செய்தது இந்தியா. இதையடுத்து, 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடுகிறது இந்திய அணி. 

கோலி


இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி, இலங்கையின் தம்புல்லாவில் இன்று நடக்கிறது. இந்நிலையில் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி, 'எந்த அணியுடன் விளையாடுகிறோம் என்பதை வைத்து வெற்றியை தீர்மானிக்க முடியாது. அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் அணியைத் தயார் செய்ய வேண்டும்.எந்தெந்த வீரர்களுக்கு எந்தெந்த பணி என்பதை, இப்போதே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இந்திய அணியைப் பொறுத்தவரை தவான் மற்றும் ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது. ரஹானே மூன்றாவது தொடக்க ஆட்டக்காரராக செயல்பட்டு வருகிறார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் மூலம் அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார்.


மிடில் ஆர்டரில்தான் கடினமானப் போட்டி நிலவுகிறது. கே.எல். ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவார். அதேநேரத்தில், மற்றொரு இடத்தைப் பிடிக்க ஜாதவ் மற்றும் மணிஷ் பாண்டே ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இருவருமே சிறந்த வீரர்கள்தான். ஆரோக்கியமான போட்டி எப்போதும் நல்லது. சர்வதேச தொடர்களில் ஒரு அணியாக எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கைதான் இறுதிப் போட்டிக்கு வரை அழைத்துச் செல்லும். இலங்கையுடனான முதல் ஒரு நாள் போட்டியில், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார்.