கோப்பையை வென்றது சென்னை சேப்பாக்கம் அணி! 

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2-வது சீசனின் இறுதிப் போட்டியில்,  ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக்கம் அணி வெற்றி பெற்றது. 

சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக்கம் அணி

கடந்த சில நாள்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற டூட்டி பேட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி டூட்டி பேட்ரியாட்ஸின் வெற்றிக் கூட்டணியான வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி ஜோடி களமிறங்கியது. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் எடுத்து சதீஷ் பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து அபினவ் முகுந்த் களமிறங்கினார். 5-வது ஓவரில் மூன்று பந்துகள் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 45 நிமிடங்கள் தாமதமானது.

பின்னர் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி கவுசிக் காந்தி 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 24 ரன்கள் எடுத்து அலெக்ஸாண்டர் பந்தில் வெளியேறினார். பிறகு கேப்டன் தினேஷ் கார்த்திக் களம் புகுந்தார். அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக் இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

14 ஓவர்களில் அணி டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 100 ரன்களைத் தொட்டது. ஆட்டத்தின் 15-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 17 ரன்களில் அருண் குமார் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஆனந்த் சுப்ரமணியன் ஒரு ரன்னில் சாய் கிஷோர் பந்தில், அலெக்ஸாண்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்திலேயே எஸ்.பி.நாதன் 16 ரன்கள் எடுத்து வெளியேற 17 ஓவர்களில் 125 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்கள் முடிவில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. சேப்பாக்கம் அணி தரப்பில் சாய் கிஷோர் மற்றும் அருண் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதன்பின் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக்கம் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எச்.கோபிநாத், தலைவன் சற்குணம் இருவரும் மிக நேர்த்தியாக விளையாடினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தனர்.

டி.என்.பி.எல் பைனல்

இந்நிலையில், தலைவன் சற்குணம் 31 பந்துகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதன்பிறகு டூட்டி பேட்ரியாட்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் அணி வீரர்களை சிறப்பான பந்துவீச்சு மூலம் கட்டுப்படுத்தினர். இதனால், சேப்பாக்கம் அணி 11 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே எடுத்தது.

12.3-வது ஓவரில் எஸ்.கார்த்திக் 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து அந்தோணி தாஸ் 4 ரன்களில் டேவிட்சன் பந்தில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் சிறப்பாக ஆடிய கோபிநாத் அரைச்சதம் விளாசினார். ஆனால், தொடர்ந்து நீடிக்காமல் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

18 ஓவர்கள் முடிவில் சேப்பாக்கம் அணி 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. இதனால், கடைசி இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், அந்த  ஓவரில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாச 19 ஓவர்கள் முடிவில் சேப்பாக்கம் அணி 145 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியில் அதிரடியாக ஆடிய சரவணன் 10 பந்துகளில் 23 ரன்களும், கேப்டன் சதீஷ் 16 பந்துகளில்  23 ரன்கள் குவித்து களத்தில் இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!