வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (21/08/2017)

கடைசி தொடர்பு:15:00 (21/08/2017)

வில்லன் வாஷிங்டன் சுந்தர்... ஃபினிஷர் சத்தியமூர்த்தி சரவணன்... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாம்பியன்! #TNPL

2017ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (TNPL) இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சேப்பாக் சூப்பர்கில்லீஸ் மற்றும் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற நடந்த இந்த பலப்பரீட்சையில் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் வசந்த் சரவணன் பேக் டூ பேக் சிக்ஸர்கள் விளாச, தூத்துக்குடி அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது சென்னை அணி. 

TNPL 2017: TUTI PATRIOTS VS CHEPAUK SUPER GILLIES

20,678 பேர் கண்டுகளித்த இந்த ஆட்டத்தில் குறைவான ரன்களே அடிக்கப்பட்டாலும் இரு அணி பவுலர்களும் கெத்து காட்ட, கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான தீனியாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. சென்ற முறை சாம்பியன் பட்டம் வென்ற தூத்துக்குடி அணி இந்த முறை போராடி பட்டத்தை சென்னை அணிக்கு நழுவ விட்டது. இந்த சீசன் முழுக்க நாயகனாக ஜொலித்த வாஷிங்டன் சுந்தர் ஃபைனலில், 19-வது ஓவரில் 23 ரன்களை விட்டுக்கொடுத்து வில்லனாக மாறி சொந்த அணியின் வெற்றிக்கே உலைவைத்தார்.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த, வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட தூத்துக்குடி அணிக்கு வாஷிங்டன் சுந்தர் மற்றும் கவுசிக் காந்தி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மட்டையைச் சுழற்றினார் வாஷிங்டன் சுந்தர். சாய் கிஷோர் வீசிய இரண்டாவது பந்தை லாங் ஆன் திசையில் வாஷிங்டன் சுந்தர் காற்றில் பறக்கவிட, அதைப் பிடிக்க முடியாமல் பவுண்டரிக்கு நழுவ விட்டார் ஆண்டனி தாஸ்.  நான்காவது பந்தையும் அதே லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு அனுப்பி மெர்சலாக்கி ரன்ரேட்டையும் ஏற்றினார் வாஷிங்டன் சுந்தர். அடுத்த இரு ஓவர்களில் கவுசிக் காந்தியும் இரண்டு பவுண்டரிகள் விரட்ட நல்ல தொடக்கம் அமைந்தது.

சென்னை கேப்டன் ராஜகோபால் சதீஷ், தான் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்திலேயே இந்த ஜோடியை பிரித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் எடுத்த நிலையில் மிட் ஆன் திசையில் சாய் கிஷோரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். சிறிது நேரம் மழையால் ஆட்டம் தடைபட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கிய பின் மேலும் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் கவுசிக் காந்தி, அலெக்சாண்டரின் சூப்பர் டெலிவரியில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆக 52 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது தூத்துக்குடி. 

TNPL 2017: TUTI PATRIOTS VS CHEPAUK SUPER GILLIES

ஒன் டவுன் இறங்கிய அபினவ் முகுந்துடன் ஜோடி சேர்ந்தார் தூத்துக்குடி கேப்டனான அனுபவ தினேஷ் கார்த்திக். எட்டாவது ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சென்னை கேப்டன் ராஜகோபால் சதீஷ் கட்டுக்கோப்பாக பந்துவீசி நெருக்கடி ஏற்படுத்த, அலெக்சாண்டர் வீசிய அடுத்த ஓவரிலேயே இரட்டை பவுண்டரி அடித்து கூலாக்கினார் அபினவ் முகுந்த். மெல்ல நிலைகொண்ட இந்த ஜோடி முதலில் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து பிறகு ஏதுவான பந்துகளை பவுண்டரி எல்லைக்கும் அவ்வப்போது அனுப்பியது. 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு  95 ரன்கள் என்று நல்ல நிலையிலிருந்தபோது 41 ரன்கள் எடுத்த நிலையில் லாங் ஆன் திசையில் கேட்ச் ஆனார் முகுந்த். 5-வது விக்கெட்டுக்கு இறங்கிய எஸ்.பி. நாதன் மட்டையை சுழற்றி  82 மீ. சிக்ஸர் அடித்தாலும் மறுமுனையில் தினேஷ் கார்த்திக் கட் ஷாட் அடிக்கிறேன் பேர்வழி என  பரிதாபமாக கவர் திசையில் கேட்ச் ஆகி 17 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சியளித்தார். 

ஆறாவது விக்கெட்டுக்கு இறங்கிய சுப்ரமணியம் ஆனந்த் மற்றும் நாதன் இருவரையுமே அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி 17 வது ஓவரில் தூத்துக்குடி அணிக்கு டபுள் செக் வைத்தார் இளம் சாய் கிஷோர். அவரின் ஹாட்ரிக் வாய்ப்பு நழுவிவிட, கடைசி பந்தில் தூத்துக்குடிக்கு ஒரு லக்கி பவுண்டரி கிடைக்க 17 ஓவர்களுக்கு 6விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது தூத்துக்குடி. முதலில் ஃபீல்டிங் சொதப்பினாலும் இறுதியில் எழுச்சி கண்டது சென்னை அணி. அடுத்து ஜோடி சேர்ந்த கணேஷ் மூர்த்தி ஆகாஷ் சும்ரா இருவருமே ஆறுதல் பவுண்டரிகள் அடித்தனர். அதிலும் அலெக்சாண்டர் வீசிய 19-வது ஓவரில் கணேஷ் மூர்த்தி  ஸ்டிரெயிட்டில் அடித்த ஒரு ஃப்ளாட் சிக்ஸர்  ஆசம். இறுதி ஓவரை வீசிய யோ மகேஷ் பந்தை பேட்டிலேயே பட விடாமல் பார்த்துக்கொள்ள முதல் பந்தில் ஆகாஷ் சும்ராவும் இறுதி பந்தில் ஆசிக் ஸ்ரீனிவாசும் ரன் அவுட்டாக இன்னிங்க்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது தூத்துக்குடி. தூத்துக்குடி சார்பில் அபினவ் முகுந்த் 41 ரன்கள் திரட்டினார். சென்னை சார்பில் சாய் கிஷோர், அருண் குமார் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

TNPL 2017: TUTI PATRIOTS VS CHEPAUK SUPER GILLIES

144 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறாங்கிய சென்னை அணிக்கு தொல்லை தந்தனர் தூத்துக்குடி பவுலர்கள். தலைவன் சற்குணம் அநியாயத்திற்கு பந்துகளை ஏப்பமிட மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கோபிநாத் ஆறுதலளித்தார். கணேஷ் மூர்த்தி வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை ஒரு நேர்த்தியான ஸ்லாக் ஸ்வீப் ஷாட் மூலம் ஃப்ளாட் சிக்ஸராக வெளியேற்றி அதகளப்படுத்திய கோபி, அடுத்த பந்தையும் கட் ஷாட் மூலம் பவுண்டரிக்கு அனுப்பினார். மெதுவாக ரன்கள் வந்த போதிலும் நிலையாக நின்றது இந்த தொடக்க ஜோடி. லட்சுமணன் வீசிய ஆறாவது ஓவரில் கோபிநாத், டிவில்லியர்ஸ் போல் பின்புறம் ஸ்கூப் செய்து ஒரு இமாலய சிக்ஸர் அடித்தார். அதே ஓவரில் சற்குணமும் ஒரு பவுண்டரி  அடிக்க சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓவருக்கு 41 ரன்கள் எடுத்தது. பிறகு ஆட்டம் தூத்துக்குடி பவுலர்கள் கைவசம் வந்தது.

தலைவன் சற்குணம் ஒரு புறம் தடுமாற இரண்டு மூன்று ஓவர்களில் ரன்வேகம் மட்டுப்பட்டது. பதற்றத்தில் விளையாடிய சற்குணம் 9-வது ஓவரில் மூன்றாவது பந்தை  இறங்கி அடிக்க அது டாப் எட்ஜாகி தேர்டு மேன் திசையில் நின்ற கவுசிக் காந்தியிடம் சிக்கியது. அற்புதமாக பந்து வீசி சென்னை அணியை பதற்றத்திலேயே வைத்திருந்தனர் தூத்துக்குடி வீரர்கள். ஒன் டவுன் இறங்கிய கார்த்திக், கோபிநாத்துடன்  சேர வெகு நேரத்திற்கு பிறகு 12-வது ஓவரில் தான் பவுண்டரிகள் கிடைத்தன. 13-வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் தன் மூன்றாவது பந்தில், முந்தைய ஓவரில் சிக்ஸர் விளாசிய கார்த்திக்கை வெளியேற்றி பார்ட்னர்சிப்பை காலி செய்தார்.  ஆனால் அடுத்த பந்தை ஸ்லாக் ஸ்வீப் மூலம் சிக்ஸராக்கி கோபிநாத் அசத்த சென்னை அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு இறங்கிய ஆண்டனி தாஸ் வெறும் நான்கு ரன்களில் வெளியேறினாலும் மறுமுனையில் நிதானமாக அரைசதமடித்து ஆறுதல் தந்தார் கோபிநாத்.

TNPL 2017: TUTI PATRIOTS VS CHEPAUK SUPER GILLIES

சென்னை அணி மலைபோல் நம்பிய கோபிநாத்  50 ரன்கள் எடுத்த நிலையில் அதிசயராஜ் பந்துவீச்சில் எல்லைக்கோட்டருகே கேட்ச் ஆனார். பின் களமிறங்கிய சென்னை கேப்டன் ராஜகோபால் சதீஷ் அதே 16-வது ஓவரில் இரண்டு ராக்கெட்டுகளை லெக்சைடில் பறக்கவிட சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களை எடுத்தது. 17 மற்றும் 18-வது ஓவர்களில் சிங்கிள்ஸ் மட்டுமே கிடைக்க சென்னையின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்டன. வாஷிங்டன் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் அதிர்ஷ்டவசமாக ஒரு பவுண்டரி கிடைக்க, 2-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் சதீஷ். மூன்றாவது பந்தில் ஒரு சிங்கிள் வர ஸ்டிரைக்கிற்கு வந்தார் 6-வது விக்கெட்டுக்கு இறங்கிய சத்தியமூர்த்தி சரவணன். வாஷிங்டன் சுந்தர் வீசிய 4-வது பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட சரவணன் அடுத்த பந்தையும் ஸ்லாக் ஸ்வீப் செய்து அதே டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அனுப்பி வைத்தார்.

வின்னிங் ஷாட்டாக கடைசி பந்தையும் வெறித்தனமாக பவுண்டரி விரட்ட, அபார வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர்கில்லீஸ் அணி. சென்னை சார்பில் கோபிநாத் அரைசதமடித்து அசத்தினார். தூத்துக்குடி சார்பில் அதிசயராஜ் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தூத்துக்குடி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சு வீணானது. ஒரு ஓவர் மீதமிருந்த நிலையிலேயே 144 ரன்களை சேஸ் செய்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ,சென்ற வருடம் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிவாங்கி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது சென்னை அணி. 10 பந்துகளில் 23 ரன்கள் விளாசி சென்னை வெற்றிக்கு உதவிய சத்தியமூர்த்தி சரவணன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருது வாஷிங்டன் சுந்தர் வசமானது.


டிரெண்டிங் @ விகடன்