Published:Updated:

உலகக் கோப்பையில் தொடங்கிய `பரமபத’ ஆட்டம் - பாகிஸ்தானைப் பதற வைத்த ஆப்கானிஸ்தான்

பிரேம் குமார் எஸ்.கே.
உலகக் கோப்பையில் தொடங்கிய `பரமபத’ ஆட்டம் - பாகிஸ்தானைப் பதற வைத்த ஆப்கானிஸ்தான்
உலகக் கோப்பையில் தொடங்கிய `பரமபத’ ஆட்டம் - பாகிஸ்தானைப் பதற வைத்த ஆப்கானிஸ்தான்

இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் தொடங்கிய `பரமபத’ ஆட்டம் - பாகிஸ்தானைப் பதற வைத்த ஆப்கானிஸ்தான்


இன்னும் 5 நாள்களில் இங்கிலாந்து மண்ணில் தொடங்க இருக்கிறது கிரிக்கெட் திருவிழா. உலகின் டாப் 10 அணிகள் மோதும் இந்த தொடருக்கு முன்னதாக தற்போது அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் நாங்களும் கெத்துதான் என நிரூபித்துள்ளது. 

பொதுவாக உலகக்கோப்பை தொடர்களில் ஏதாவது ஒரு கத்துக்குட்டி அணி பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளிக்கும். ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து எனப் பல சிறிய அணிகள் கோப்பை வெல்லும் எனக் கணிக்கப்பட்ட அணிகளைத் தொடர்களில் இருந்து வெளியேற்றிய கதைகள் பல உண்டு. இந்த முறை டாப் 10 அணிகள் மோதுவதால் அனைத்துப் போட்டிகளுமே  முக்கியம் தான். இதனை மீண்டும் ஒருமுறை உரக்க சொல்லியிருக்கிறது நேற்றைய பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம். 

உலகக் கோப்பையில் தொடங்கிய `பரமபத’ ஆட்டம் - பாகிஸ்தானைப் பதற வைத்த ஆப்கானிஸ்தான்

பிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் இமாம் உல் ஹக் 32 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 112 குவித்தார். அனுபவ வீரர் மாலில் 44 ரன்கள் எடுத்தார், இவரைத் தவிர நடுவரிசையில் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஒருகட்டத்தில் 4 விக்கெட்டுகளுக்கு 203 என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

உலகக் கோப்பையில் தொடங்கிய `பரமபத’ ஆட்டம் - பாகிஸ்தானைப் பதற வைத்த ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் நபி 3 விக்கெட்டுகளையும், ரஷித்கான் மற்றும் தவ்லத் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். குறிப்பாக ரஷித் கான் கட்டுக்கோப்பாகப் பந்து வீசி நெருக்கடி அளித்தார். அவர் 9 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதில் ஒரு மெய்டனும் அடக்கம்.  

பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான். அந்த அணியில் அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷேஷாத் 23, சாசாய் 49, ரஹ்மத் ஷா 34, ஷின்வாரி 22, நபி 34 என அனைவரும் தங்களின் பங்கை சிறப்பாக செய்தனர். ஹஸ்மத்துல்லா ஷாஹிடி நிலையாக நின்று ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்தார். இறுதி ஓவர் வரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் 49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். இதன் மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது ஆப்கானிஸ்தான். 

உலகக் கோப்பையில் தொடங்கிய `பரமபத’ ஆட்டம் - பாகிஸ்தானைப் பதற வைத்த ஆப்கானிஸ்தான்

தொடர்ச்சியாக இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தான் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியைச் சந்தித்திருப்பது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மற்ற அணிகள் ஆப்கானிஸ்தானை சாதாரண அணியாகக் கருத கூடாது என்பதற்கான எச்சரிக்கை மணியாக இது பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இந்த வெற்றி நிச்சயம் ஊக்கத்தை அளித்திருக்கும். மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது!     

Vikatan