2022-ம் ஆண்டின் சிறந்த வங்கிகள் கணக்கெடுப்பில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி `சிறந்த சிறிய வங்கி' என்ற விருதை பெற்றுள்ளது. இந்தக் கணக்கெடுப்பை பிசினஸ் டுடே - KPMG இணைந்து நடத்தியது.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விழாவில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி `சிறந்த சிறிய வங்கி' (Best Small Bank) என்ற விருதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு வழங்கினார். இந்த விருதை டி.எம்.பி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
பிசினஸ் டுடே - KPMG இணைந்து நடத்திய கணக்கெடுப்பில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகள் பிரிவில் இந்த விருதைப் பெற்றுள்ளது. டி.எம்.பி வங்கி 100 வருட பாரம்பர்யத்தைக் கொண்டது ஆகும். மேலும், இந்த வங்கியின் சிறப்பம்சமே சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கான நிதி சேவைகளை வழங்குவதுதான்.

இந்த விருதைப் பெற்றுக்கொண்ட டி.எம்.பி வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கிருஷ்ணன், ``இன்னும் இரட்டிப்பு முயற்சியுடன் இந்த விருதைத் தொடர்ந்து பெறும் பொறுப்பு எங்கள் வங்கிக்கு உள்ளது" என்று பேசினார். கடந்த 27 ஆண்டுகளாக, பிசினஸ் டுடே - KPMG இந்தக் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்தக் கணக்கெடுப்பில், வங்கிகளை சிறந்த வங்கிகளாகத் தேர்ந்தெடுப்பதற்கு 37 அளவுகோல்கள் வைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.