Published:Updated:

தூத்துக்குடி: `6 காவலர்கள்... 4 கைதிகள்’ - சிறைச்சாலையில் அதிகரித்த கொரோனா

தூத்துக்குடி மாவட்ட சிறை
தூத்துக்குடி மாவட்ட சிறை

சிறைச்சாலையில் உள்ள காவலர்கள், கைதிகள் என 10 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்த கைதிகள் பலரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவர முடியாத, முக்கிய வழக்குகளில் சிக்கியவர்கள் மட்டுமே சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 250 பேரை அடைக்கும் வசதி இருக்கிறது. ஆனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதால் 61 கைதிகள் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

`காஞ்சிபுரம் கைதிக்கு கொரோனா!’ - அதிர்ச்சியில் வேலூர் பெண்கள் சிறை

தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலையின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் ஜெயிலர், துணை ஜெயிலர், 3 முதன்மை தலைமை வார்டன்கள், ஒரு சிறைக் காவலர் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சிறையில் புதிதாக அடைக்கப்பட்ட நான்கு கைதிகளும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிகிறது.

`ஒரு மாதத்துக்குள்ளாகவே அடுத்த பாதிப்பு!' -தொடர் கொரோனா தொற்றால் திணறும் தேனி சிறைச்சாலை

மொத்தம் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஜெயிலர், துணை ஜெயிலர், சிறைக்காவலர் உள்ளிட்ட 6 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா நோய்க்காகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி சிறைச்சாலையில் கொரோனா பாதிப்புக்குள்ளான நான்கு கைதிகள் அங்குள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் சிறையில் இருக்கும் பிற கைதிகள் அச்சமடைந்துள்ளனர். சிறைக்குள் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியானதும், அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் கவலையில் உள்ளனர். 

சிறைச்சாலை
சிறைச்சாலை
representational image

பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் சிறைக் காவலர்கள் உள்ளிட்ட 40-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். அத்துடன், சிறையில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே இன்று சிறையில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக கைதிகள் மற்றும் சிறைத்துறை பணியாளர்கள் காத்திருப்பதால் அனைவர் முகத்திலும் கலக்கம் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு