Published:Updated:

கொரோனா அச்சம்… 10,000 தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம்? - தேனி கலெக்டர் ஆலோசனை

வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில், எல்லையில் உள்ள தேனி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

தேனி மாவட்டத்தையும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தையும் இணைக்கும் கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு ஆகிய இடங்களில் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில், மருத்துவ முகாம் அமைத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள்.

சாலையில் குளோரின் பவுடர் போடப்பட்டது.
சாலையில் குளோரின் பவுடர் போடப்பட்டது.

எல்லையைக் கடந்து தேனிக்குள் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

`இடுக்கியில் கொரோனா கண்காணிப்பில் 54 பேர்..!' - அச்சத்தில் தேனி மக்கள் #corona

இடுக்கி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள ஏலத்தோட்டங்களில், தேனியைச் சேர்ந்த சுமார் 10,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தினமும், இரு மாநில எல்லையைக் கடந்து வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருப்பதால், அவர்களுக்கு கொரோனா அச்சம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். இது ஒருபுறம் என்றால், கொரோனா அச்சம் காரணமாக, ஏலக்காய் மின்னணு ஏலத்தினை நறுமணப் பொருள்கள் வாரியம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் ஏலத்தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி கலெக்டர்
தேனி கலெக்டர்

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் பத்திரிகையாளர்கள் பேசிய போது, சில தகவல்களை அவர் தெரிவித்தார். ``ஏலத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக, அவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை கொடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். நாளை நடைபெற இருக்கும் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் பாதுகாப்பான முறையில் நடைபெறும். மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலாத்தளங்களும் நாளை முதல் மூடப்படும். மாவட்டம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் இன்று மாலை முதல் மூடப்பட உள்ளன. மேலும், வருகின்ற 23ம் தேதி தேனி பல்லவராயன்பட்டியின் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி, ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது” என்றார்.

போராட்டத்தைக் கைவிடச் சொன்ன ஓ.பி.எஸ்! - பதில் கொடுத்த தேனி இஸ்லாமிய அமைப்பினர் #CAA

முன்னதாக, கம்பம் அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்த யாசின் பேகம் என்பருக்குத் தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால், நேற்று இரவு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு