அஞ்சலகத்தில் விற்கப்படும் மாசு கலந்த கங்கை நீர்: பக்தர்கள் அதிர்ச்சி

அஞ்சலகத்தில் விற்கப்பட்ட கங்கை நீர் மாசு அடைந்த நிலையில் இருந்ததால் அதை வாங்கிய பக்தர் அதிர்ச்சியடைந்தார்.


நாட்டில் உள்ள இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசி-ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை செல்வதை தங்களின் லட்சியமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு காசி யாத்திரை செல்பவர்கள் ராமேஸ்வரம் வந்து இங்குள்ள ராமநாதசுவாமியை வழிபட்டு கடற்கரை மணலை எடுத்துக்கொண்டு செல்பவர். அந்த மணலை காசியில் ஓடும் கங்கையாற்றில் கரைத்து விட்டு அங்கிருந்து கங்கை நீரைத் தீர்த்தமாக எடுத்து வருவர். அவ்வாறு எடுத்து வரப்படும் கங்கை நீரை மீண்டும் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்து ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மாசு கலந்த கங்கை நீர்

அவ்வாறு காசிக்குச் செல்ல முடியாத நிலையில், உள்ளவர்களுக்கு ராமேஸ்வரம் கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்திய அஞ்சல் துறை குறைந்து வரும் தனது வருமானத்தை அதிகரிக்க பல்வேறு மாற்றுப் பணிகளில் ஈடுபட்டது. அரசு தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், கல்லூரி விண்ணப்பங்கள், அரசுப் பணிக்கான தேர்வுக் கட்டண வசூலிப்பு போன்ற சேவைகளைச் செய்வதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறது. இந்த வகையில் நாட்டில் உள்ள முக்கிய அஞ்சலகங்கள் மூலம் முக்கியக் கோயில்களின் பிரசாதம், தீர்த்தம் ஆகியனவற்றையும் விற்பனை செய்து வருகிறது. அதன்படி கங்கை நீரினையும் 'கங்கா ஜல்' என்ற பெயரில் நாட்டில் உள்ள முக்கிய அஞ்சலகங்களில் விற்பனை செய்து வருகிறது.


இவ்வாறு விற்பனை செய்யப்படும் கங்கை நீர் சுத்தமானதாக இல்லை என பக்தர்கள் மனம் வெதும்புகின்றனர். அஞ்சலகம் ஒன்றில் பக்தர் ஒருவர் வாங்கிய கங்கை நீர் பாட்டிலில் கழிவுகள் திரண்டு மிதந்துள்ளன இதைக் கண்ட அந்த பக்தர் அதிர்ச்சியடைந்தார். பொதுவாக கோயில்களுக்கு வாங்கப்படும் தேங்காய் உள்ளிட்ட பொருள்களில் குறை ஏதும் இருந்தால் அது அந்த பக்தரின் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கும். இந்நிலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக வாங்கப்பட்ட கங்கை தீர்த்தத்தில் சுத்தமின்றி கசடுகளுடன் காணப்பட்டது அந்த பக்தரை மிகுந்த வருத்தமடையச் செய்தது.


வருவாய் ஒன்றையே குறிக்கோளாகக் கருதும் அஞ்சல் துறையினர், இதுபோன்ற மத நம்பிக்கை சார்ந்த விசயங்களில் முழு கவனத்துடன் செயல்பட்டு சுத்தமான தீர்த்தத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாள் பட்ட தீர்த்தத்தினைப் பாட்டிலில் அடைத்து விற்பதன் மூலம் அவை சுத்தமற்ற தீர்த்தமாக இருப்பதுடன், தேவையற்ற மனக் குழப்பங்களையும் உண்டாக்குவதையும் தடுக்க முன் வர வேண்டும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!