கட்டணம் வாங்காத டாக்டர்... கண்டுகொள்ளாத கலையுலகம்... அல்வா வாசுவுக்கு ஃபேஸ்புக்கில் ஆதரவுக்குரல்!

காமெடி நடிகர்களின் வாழ்க்கை, கடைசியில் கண்ணீரில்தான் முடிகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் அல்வா வாசு. `அமைதிப்படை' படத்தில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுப்பதுபோல நடித்ததால், பெயருக்கு முன்னால் `அல்வா' என்கிற அடைமொழி ஒட்டிக்கொண்டது. பல படங்களிலும் நடித்திருந்தாலும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருந்தாலும்  வடிவேலுவுடன் இணைந்து நடிக்கத் தொடங்கிய பிறகுதான் இவர் பிரபலமானார். 

மறைந்த நடிகர் அல்வா வாசு

வடிவேலுவுடன் `அல்வா' வாசு நடித்த ஒருசில காமெடிக் காட்சிகள் எவராலும் மறக்க முடியாதவை. நடிகர் வடிவேலு வக்கீல் வண்டுமுருகனாக நீதிமன்றத்தில் வாதாடும் காமெடிக் காட்சியில் நீதிபதி, குற்றவாளிகளுடன் சேர்த்து வடிவேலுவையும் சிறையில் அடைத்துவிடுவார். வடிவேலுவுக்கு ஜூனியராக வரும் `அல்வா' வாசு, ஜாமீன் வாங்கி வரச் சென்றிருப்பார். கடைசியில் `கடல்லயே ஜாமீன் இல்லையாம்' என்று கண்ணை சுளித்துக்கொண்டு கூறும் காட்சி, நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைத்தது. `ஒரு வாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்குநேர் சந்திக்கக்கூடிய போர்க்குணம்கொண்ட போர்வாள்', `பாஸ், நீங்க வில்லேஜ் விஞ்ஞானி' போன்ற காமெடி வசனங்களும் காலத்துக்கும் மறக்க முடியாதவையே. 

வடிவேலுவின் உடல்மொழிபோலவே, `அல்வா' வாசுவும் தனக்கென்ற தனி உடல் மொழியுடன் நடிக்கும் திறன் படைத்தவர். வடிவேலுவுடன் இணைந்து தொடர்ச்சியாக நடித்த இவர், தமிழக மக்களை மட்டுமல்லாமல், தென்னிந்திய ரசிகர்களையே சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார். இவர் உடல்நிலை சரியில்லாமல் ஆறு மாத காலமாகக் கஷ்டப்பட்டாலும், இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான், அவர் கவலைக்கிடமாக இருக்கும் தகவலே வெளியே வந்தது.

சுமார் 700-க்கும் மேற்பட்ட படங்களில் `அல்வா' வாசு நடித்திருந்தாலும், இவரைப் போன்ற காமெடி நடிகர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடைத்திருக்கவோ, சொத்து, சுகம் என வாழ்ந்திருக்கவோ வாய்ப்பில்லை. `அல்வா' வாசுவுடன் நடித்த துணை நடிகர்களும் அப்படித்தான். அந்த டீமில் நடிகர் வடிவேலு ஒருவர்தான் `அல்வா' வாசுவுக்கு உதவக்கூடிய நிலையில் இருப்பவர். ஆனால், அவர்கூட கடைசிக் கட்டத்தில் வாசுவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. `அல்வா' வாசு இறந்த பிறகு இறுதி அஞ்சலி செலுத்தக்கூட நடிகர் வடிவேலு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுத்துள்ளது. 

இதுகுறித்து படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது, `சுமார் 36 ஆண்டு காலம் கலை உலகில் பன்முகத் தோற்றங்களில் நடித்துள்ள `அல்வா' வாசுவின் இறுதி நாள்கள், எண்ணற்றத் துயரங்களைக்கொண்டவையாகவே அமைந்துள்ளன. இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு, மருத்துவம் பார்க்கப் போதிய நிதி இல்லாமல் நெருக்கடியில் இருந்தபோது, கோடிகளில் புரளும் எந்தக் கோமாளிகளும் முன்வரவில்லை. ஏன்... இறுதிச் சடங்குக்குக்கூட யாரும் போகவில்லை. காரணம், இவர்களின் அளவுக்கு இறந்தவரிடம் வசதி இல்லை என்பதுதான்.

இவரின் இறுதிநாளில் உடன் இருந்து தன்னால் இயன்ற உதவிகளைச் செய்த நடிகரும் இயக்குநருமான சரவணசக்தி, மேனேஜர் கண்ணன், மயில்சாமி, அண்ணன் சத்யராஜ் போன்ற சில நல்ல உள்ளங்களே உதவி செய்துள்ளனர். சகநடிகனின் கண்ணீரைத் துடைக்கவே எவருக்கும் துணிவில்லை. இதில் சில பேர் `சிஸ்டம் சரி இல்லை' என்கிறார்கள். பலர் `அரசியலுக்கு வருகிறேன்' என்கிறார்கள். காலக்கொடுமை! `அல்வா' வாசு, வடிவேலுவுடன் சேர்ந்து எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். அவர்கூட இவருக்கு உதவ முன்வரவில்லை. யார்... எவர் என்றே தெரியாமல் இவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தணிகாச்சலம், `கட்டணமே வேண்டாம்' என்று சென்றுள்ளார்.

 ஆரோக்கியமாக இருக்கும்போது சந்தா வாங்குவதோ, ஓட்டுக்காக வீடு வரை வந்து தாஜா பண்ணுவதோ முக்கியமல்ல; இறப்பின் பிடியிலிருக்கும்போது உதவுவதும், எங்கள் கலைக்குடும்பம் உங்களோடு உள்ளது என உடன் நிற்பதும்தான் சந்தா கட்டியதற்கான மரியாதை என்று நான் நினைக்கிறேன். சங்கங்கள், சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்' எனக் கூறியிருக்கிறார்.

மக்களைச்  சிரிக்கவைப்பவர்களின் வாழ்க்கை, கண்ணீர்த் துளிகளில் முடிவதற்குக் கடைசி உதாரணமாக `அல்வா' வாசு இருக்க வேண்டும் என்பதே நமது ஆசையும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!