Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மாக்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு! #CelebrateGovtSchools

ஆசிரியர்

மிகவும் தூய்மையான வளாகத்துடன் வரவேற்கிறது புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்த மேலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி. 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் 2007-ம் ஆண்டில் படித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 48 மட்டுமே. அப்போது, தலைமை ஆசிரியர் பதவிக்கு வந்த கிறிஸ்டி, அக்கறையையும் உழைப்பையும் முழுமையாகச் செலுத்தி, களத்தில் இறங்கினார். அதன் பலன், புதுக்கோட்டை மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக கடந்த ஆண்டு தேர்வாகி இருக்கிறது இந்தப் பள்ளி. 

''நான் முதன்முதலாக இந்தப் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் நுழைந்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தரை முழுவதும் ஓட்டை ஓட்டையாக இருந்தது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என அந்த நிமிடமே உறுதி எடுத்தேன். ஊர் மக்கள் கூட்டி ஒரு கூட்டம் போட்டுப் பேசினேன். மற்ற ஆசிரியர்களோடு சேர்ந்து வீடு வீடாகச் சென்று பிரசாரமும் செய்தேன். 'எந்த வசதியுமே இல்லாத பள்ளியில் பிள்ளைகளை எப்படிச் சேர்க்க முடியும்?’ என்று கேட்டனர். நியாயமான கேள்வியாக தோன்றியது. தரமான கல்வியுடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால்தான் பெற்றோரின் நம்பிக்கையைப் பெறமுடியும் எனப் புரிந்தது. பள்ளியின் தரத்தை மாற்றுவதற்கு முன்னர், மாணவர்களின் சீருடையை மாற்றினேன். தனியார் பள்ளிகளுக்கு இணையாக டை, பெல்ட், டைரி, ஐடி கார்டு, ஷூ, சாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுவந்தோம். இதனால், மாணவர்களிடம் இருந்த தாழ்வுமனப்பான்மை நீங்கி, உற்சாகம் அடைந்தனர். இதைப் பார்த்து ஊர் மக்கள் ஒவ்வொருவராக முன்வந்து, பள்ளியை மேம்படுத்துவதற்கான உதவிகளைச் செய்தனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுத்தமான கழிவறை, கணினி பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டுவந்தோம். கடந்த ஆண்டு மட்டும் 400 மரக்கன்றுகள் நட்டுள்ளோம். மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடக்கும். அதில், பெண்களுக்கு மட்டுமே அனுமதி'' என்று சிரிக்கிறார் கிறிஸ்டி. 

ஆசிரியர்

நாம் புரியாமல் பார்த்ததும் தொடர்கிறார், ''இந்த ஊரின் பெரும்பாலான ஆண்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். வருகிற ஓரிரு ஆண்களும் தங்கள் பிள்ளைகள் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால், அம்மாக்கள் நிறையப் பேசுகிறார்கள். நிறையக் கேள்விகளை கேட்கிறார்கள். இந்தப் பள்ளி முன்னேற வேண்டும், எங்கள் குறைகளை நாங்களே நன்குத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், இந்தக் கேள்விகள் அவசியம் என நினைத்தோம். அதனால்தான், பெண்கள் மட்டும் வரட்டும் எனச் சொல்லிவிட்டோம். எங்களுக்கு நாங்களே விதித்துக்கொண்ட இந்த நடைமுறைதான் பல செயல்களை வேகமாக செய்யவைத்தது. அதுதான் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே சிறந்த அரசுப் பள்ளிக்கான விருதைப் பெற்றுக்கொடுத்தது. கூடிய விரைவில் குளிர்சாதன வசதியையும் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். தற்போது, 106 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். எங்களுக்கு மேலும் ஒரு கட்டடம் இருந்தால் சிறப்பாக இருக்கும்'' என்கிறார். 

ஆசிரியர்

நடனம் உள்ளிட்ட பல கலைத்திறன் வகுப்புகளையும் நடத்துவதால், மாணவர்கள் புத்துணர்ச்சி குறையாமல் கற்கின்றனர். முகநூல், வாட்ஸ்அப் குரூப் வழியே பள்ளியின் செயல்பாடுகளை பெற்றோர் மற்றும் தன்னார்வளலர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் ஆலோசனை மற்றும் உதவிகளையும் பெற்று பதிவிடுகின்றனர். 

''முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நமக்குக் கிடைத்திருப்பது இவ்வளவுதான். இதிலேயே நம் கடமையை முடித்துவிட்டுப் போவோம் என்றில்லாமல், அக்கறையுடன் முயன்றால், மாணவர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை அளிக்க முடியும்'' என்று புன்னகைக்கிறார் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement