வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (22/08/2017)

கடைசி தொடர்பு:08:02 (23/08/2017)

சசிகலாவைச் சந்திக்க நாளை பெங்களூரு பறக்கிறார் தினகரன்!

அ.தி.மு.க-வில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நிலவிய கூவத்தூர் அரசியல், மீண்டும் முளைத்துள்ளது. பதவிக்காக மல்லுக்கட்டி வந்த ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் இணைந்துள்ளனர். மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராகவும் வலம் வர, தனது முதல்வர் பதவியைத் தக்க வைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

தினகரன்


இந்தச் சம்பவங்களால் டி.டி.வி. தினகரன் அணி கடும் கோபத்தில் உள்ளது. இன்று ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், கூவத்தூர் பாணியில் எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைக்க திட்டமிட்டது. புதுச்சேரி-கடற்கரை சாலையில் அரியாங்குப்பத்தையடுத்து, கடற்கரை கிராமமான சின்ன வீராம்பட்டினத்திலுள்ள ‘விண்ட் ஃப்ளவர்’ என்ற தனியார் ரிசார்ட்ஸில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை தினகரன் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, நாளை தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலருடன் தினகரன் பெங்களூரு செல்கிறார். இந்தச் சந்திப்பின்போது, எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு மற்றும் அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு சசிகலாவிடம் அனுமதி பெறவிருப்பதாக தினகரன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடர்பாக, நாளை (23-ம் தேதி) செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று தினகரன் கூறியது குறிப்பிடத்தக்கது.