வெளியிடப்பட்ட நேரம்: 07:21 (23/08/2017)

கடைசி தொடர்பு:07:34 (23/08/2017)

சசிகலா மனு மீது இன்று உத்தரவு?

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மறுசீராய்வு மனு மீதான உத்தரவு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உறுதிசெய்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா மரணமடைந்துவிடவே, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்பாக நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு வாதங்களை முன்வைக்க வேண்டி இருப்பதால், நீதிபதி அறையில் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்படி இல்லையென்றால், தற்போது சமர்ப்பிக்கப்படும் எழுத்துபூர்வமான வாதங்களைப் பரிசீலிக்க வேண்டும்’ என்றும் அவர் முறையிட்டார். இது தொடர்பான உத்தரவு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.