வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (23/08/2017)

கடைசி தொடர்பு:08:02 (23/08/2017)

நாளை தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு!

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. 


நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வை செப்டம்பர் 4-ம் தேதிக்குள்ளும், பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 10-ம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இதையடுத்து, கலந்தாய்வுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. இந்த படிப்புகளுக்கு 50,558 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில், மாணவர் தர வரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தர வரிசைப் பட்டியல் புதன்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதன் அடிப்படையில், நாளை (ஆகஸ்ட் 24) முதல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும். முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு, ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கும்’ என்று அவர் தெரிவித்தார்.