வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (23/08/2017)

கடைசி தொடர்பு:12:53 (23/08/2017)

“ஏற்கெனவே சறுக்கின அனுபவம்தான், இப்ப வெற்றியைப் பரிசளிச்சிருக்கு!” - ஸ்டெல்லாவின் தன்னம்பிக்கை

ஸ்டெல்லா

வாழ்வின் தேவைகள்தான் நம்மை வெளிச்சத்தை நோக்கி நகரவைக்குது. அதுதான் ரெண்டுக் குழந்தைகளோடு தனித்து நின்னப்போ என்னைச் சுயமுன்னேற்றத்தை நோக்கி ஓடவெச்சது. உழைப்பும் உறுதியும் கைகொடுக்க, வெற்றிகரமான சுயதொழில் முனைவோராக நிமிர வெச்சிருக்கு!” - கம்பீரமான வார்த்தைகளால் வரவேற்கிறார் ஸ்டெல்லா. 

‘பேப்பர் ஃபைல்’ பிஸினஸ்மூலம் மாதம் முப்பதாயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் சாதனைப் பெண் ஸ்டெல்லாவின் கடந்த கால பக்கங்கள், துயரமும் தோல்வியும் நிறைந்தவை. சென்னை, ராயபுரம், காசிமேடு பகுதியில், 'விடிவெள்ளி’ என்கிற பெயரில் கடையை நடத்திவருகிறார். 

''தஞ்சாவூர்தான் நான் பிறந்த மண். அப்பா, அம்மா ரெண்டுப் பேருமே ஆசிரியர்கள். ஸ்கூலில் நல்லாப் படிக்கும் பெண் என்கிற பெயரை எப்பவும் தக்கவெச்சிருந்தேன். ஓவியம், டைப்ரைட்டிங் என எப்பவும் எதையாச்சும் கத்துக்கிட்டே இருப்பேன். அப்பா, அம்மாவின் டிரான்ஸ்பர் காரணமாகச் சென்னைக்கு வந்தோம். கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் பி.காம். முடிச்சதும், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், ஸ்கூல் பசங்களுக்கு டியூஷன் எடுத்தேன். அந்த வருமானத்தை சேமிச்சுவெச்சு என் கல்யாணத்துக்காக 15 பவுன் சேர்த்தேன். 'கெட்டிக்காரப் பொண்ணு. பிழைச்சுக்குவா’னு எல்லாரும் பாராட்டினாங்க. ஆனா, விதி என்னை வாழ்க்கையோடு போராடவைக்கும்னு நினைக்கவே இல்லை'' என கூறியபோது, ஸ்டெல்லா குரல் மாறுகிறது.

“திருமணம் முடிஞ்சு ஆண், பெண் என ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. இந்த நிலையில் மனஸ்தாபத்தால் நானும் கணவரும் பிரிஞ்சுட்டோம். பையனையும் பொண்ணையும் படிக்கவைக்கும் பொறுப்பு என் முதுகில் வந்து விழுந்துச்சு. கிண்டியில் இருக்கிற சுயதொழில் வேலைவாய்ப்பு நிலையத்தில் மூணு மாசம் தையல் பயிற்சி முடிச்சேன். அங்கே இங்கேனு தேடி அலைஞ்சு ஆண்களுக்கு ஷர்ட்ஸ் தைச்சுகொடுக்கும் ஆர்டரைப் பிடிச்சேன். அம்மா வீட்டில் கொடுத்தது, நான் கஷ்டப்பட்டு சேர்த்துவெச்சிருந்த நகைகள் என அடகுவெச்சு, அஞ்சு தையல் மெஷின்களை வாங்கி, ஆள்களையும் வேலைக்குச் சேர்த்தேன். முதலாளி இருக்கையில் உட்காராமல் நானும் ஒரு தொழிலாளியாக ராத்திரி பகலா உழைக்க ஆரம்பிச்சேன். 

நல்லாப் போயிட்டிருந்த பிஸினஸ், வேலை ஆள்கள் வராமல் சறுக்கிடுச்சு. எங்கிட்ட வேலை பார்த்தவங்க கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரேசமயத்தில் விலகி, நான் ஆர்டர் வாங்கின நிறுவனங்களிலேயே சேர்ந்துட்டாங்க. அது தீபாவளி நேரம். நிலைமையைச் சமாளிக்க முடியாமல், அத்தனை தையல் மெஷின்களையும் வித்துட்டேன். அந்தத் தோல்வி எனக்கு நிறைய பாடங்களைக் கத்துக்கொடுத்துச்சு. சோர்ந்து உட்கார்ந்துடாமல், 'அடுத்து என்ன?'னு யோசிச்சேன். மறுபடியும் சுயதொழில் வேலைவாய்ப்பு நிலையத்தை அணுகினேன். ஃபைல்கள் செய்ய கத்துக்கொடுத்து, மூணு லட்ச ரூபாய் லோனும் கொடுத்தாங்க. தேவையான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருள்கள் வாங்கி, ஒரு கடையையும் வாடகைக்குப் பிடிச்சேன்'' என்கிற ஸ்டெல்லா, தனது இரண்டாவது இன்னிங்ஸ் கலம் பற்றி தொடர்கிறார். 

ஸ்டெல்லா

“ஆரம்பத்தில் பிளாஸ்டிக் ஃபைல்களையும், பர்ஸ்களையும்தான் செய்துட்டிருந்தேன். அப்புறம், பழவேற்காட்டில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேஸ்ட் பொருள்களை மறுசுழற்சி மூலமா பேப்பர் அட்டைகளா செய்யறதைக் கேள்விப்பட்டு, அவங்ககிட்ட ஹோல்சேல் ரேட்டில் அட்டைகளை வாங்கினேன்.  அதை வைச்சு நோட் பேட், ஃபைல், டைரி, டேபிள்மேட், பென் ஸ்டாண்ட் எனத் தயாரிச்சேன். சென்னை, தீவுத் திடல் கண்காட்சியில் முதல்முறையா ஸ்டால் போட்டேன். அத்தனை பொருள்களும் விற்றுத் தீர்ந்ததோடு ஆர்டர்களும் குவிந்தன. ஒற்றை ஆளின் உழைப்பு பத்தாதுங்குற அளவுக்கு விற்பனை விரிஞ்சது. மறுபடியும் ஆறு பெண்களை வேலைக்குச் சேர்த்து தொழிலை விரிவுபடுத்தினேன். 

சென்னையின் டபுள்யூ.சி.சி, எம்.ஓ.பி என மகளிர் கல்லூரி விழாக்களில் ஸ்டால் போட்டேன். என் பொருள்கள் தரமாகவும், திருப்திகரமாகவும் இருந்ததால் அவர்கள் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்துட்டு வராங்க. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஹேண்ட்பேக், செல்போன் பவுச், கிஃப்ட் அயிட்டம் என இளம்பெண்களுக்கு விருப்பமான பொருள்களை செஞ்சு விற்க ஆரம்பிச்சேன். பெரிய நிறுவனங்களின் ஹெச்.ஆர் அதிகாரிகளைச் சந்திச்சும் ஆர்டர்கள் வாங்கறேன். ஏற்கெனவே தொழிலில் அடிவாங்கிய அனுபவத்தால், ஒவ்வொரு அடியையும் நிதானமா வைக்கிறேன். ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் ஆர்டர் எடுக்கிறேன். மாசம் சுமார் முப்பதாயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைக்குது. என் பிள்ளைங்களுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தைக் கொடுக்கமுடியும் என்கிற நம்பிக்கை 200 சதவிகிதம் வந்திருக்கு'' எனப் புன்னகைக்கும் ஸ்டெல்லா இறுதியாகச் சொன்னது... 

“இந்தத் தொழிலுக்கு எதிர்கால உத்தரவாதம் இருக்கு. ஏதாச்சும் பிடி கிடைக்காதானு தேடும் பெண்கள், இதை தைரியமா எடுத்துச் செய்யலாம். கொஞ்சம் பணம், சரியான பயிற்சி, தளராத முயற்சி, தன்னம்பிக்கை ஆகிய மூலதனங்களைப் போட்டு வெற்றிப்படிகளில் ஏறலாம்!”

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்