Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘முதல்வரை மாற்றுவதுதான் என் வேலையா?!’ - கொதி கொதித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் #VikatanExclusive

ஆளுநர் வித்யாசாகர் ராவ்

மீண்டும் ஓர் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ‘முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்' என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அளித்த கடிதத்துக்கு இன்னமும் ஆளுநர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை. ‘என்னை தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்காதீர்கள். முதல்வரை தேர்வு செய்வது என் வேலையா?' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 

சென்னை, வானகரம் பொதுக் குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, கட்சி எம்.எல்.ஏ-க்களால் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தோடு கிண்டி ராஜ்பவனுக்கு விரைந்த சசிகலாவுக்கு, பதவிப் பிரமாணம் செய்துவைக்காமல் காலம் தாழ்த்தினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் கடிதம் கொடுத்தும் சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்காதது ஏன் என்ற கேள்விகளும் அரசியல் மட்டத்தில் எழுந்தது. இதற்குப் பிறிதொரு நாளில் பதில் அளித்த வித்யாசாகர் ராவ், ‘சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எந்தநேரமும் வெளியாகலாம் என்ற காரணத்தால்தான் காலம் தாழ்த்தினேன்' என மனம் திறந்தார். இந்நிலையில், நேற்று ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு நேர்ந்த சம்பவம் குறித்தும் அதில் விளக்கியிருந்தனர். 

அந்தக் கடிதத்தில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவையால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த நான்கு மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அரசியல் சாசனம் அளித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட முடியாது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையைத் தமிழக மக்களும் இழந்துவிட்டனர். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை நான் திரும்பப் பெறுகிறேன். இதுபோன்றதொரு சூழல் கர்நாடகாவின் முதலமைச்சராக எடியூரப்பா இருந்தபோது, கடந்த 2011-ல் ஏற்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரான நான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் கடிதம் அதிர்வலையை உருவாக்கிய அதேநேரம், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், ஆளுநர்

அரசியல் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், நேற்று காலை 11.30 மணிக்கு மும்பை கிளம்பிவிட்டார் ஆளுநர். நவம்பர் மாதம் கூட இருக்கும் சட்டமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஆட்சிக்கு எதிரான சவால்களைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநரின் மௌனத்தை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் தினகரன் தரப்பினர். ஆளுநர் பதில் அளிக்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்து வருகின்றன. “மீண்டும் அரசியல் சர்ச்சைக்குள் ஆளுநர் மாளிகையின் பெயர் அடிபடுபவதை வித்யாசாகர் ராவ் ரசிக்கவில்லை” என விளக்கிய கிண்டி ராஜ்பவன் அலுவலக நிர்வாக அதிகாரி ஒருவர், “அரசியலமைப்புச் சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ஆளுநர் செய்துவருகிறார். இதைத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் அரசியலாக்குகின்றன. இதைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் அ.தி.மு.க எம்.பி ஒருவரிடமும் நேரடியாகவே பேசினார் ஆளுநர்.

அப்போது, ‘கர்நாடகாவில் பா.ஜ.க அரசுக்கு எதிராகத் திட்டமிட்டு சதி செய்தார் அப்போதைய ஆளுநர் பரத்வாஜ். இதனால், எடியூரப்பா அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது. கர்நாடகா ஆளுநர் செய்ததை நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய அலுவலகத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். பரத்வாஜின் முன்னுதாரணத்தை நான் ஏன் கடைபிடிக்க வேண்டும்? உங்களுக்கு அரசியல் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வாருங்கள். சபாநாயகரிடம் அரசுக்கு எதிராக மனு கொடுங்கள். என்னை ஏன் தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்கிறீர்கள்? முதல்வரை மாற்றுவதுதான் என் வேலையா? கட்சியின் வளர்ச்சியைக் கவனியுங்கள்' எனக் கொதிப்போடு பேசினார். இந்தத் தகவல் தினகரன் தரப்பினருக்கும் கொண்டு செல்லப்பட்டது” என்றார் விரிவாக. 

எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் ஆகியோரது கைகளை இணைத்து ஆளுநர் காட்டிய புன்முறுவல் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 'தமிழகத்தில் மத்திய அரசின் நேரடி நடவடிக்கைகளின் மையப்புள்ளிதான் அந்த இணைப்பு’ என்ற விமர்சனமும் அரசியல் மட்டத்திலிருந்து எழுந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement