வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (23/08/2017)

கடைசி தொடர்பு:13:25 (23/08/2017)

'உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் அல்ல'- வித்யாசாகர் ராவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் ராமதாஸ்

தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைமீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆளுநர் மும்பை பறந்துசென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இனியும் தாமதிக்காமல், தமிழக சட்டப்பேரவையை இந்த வாரத்துக்குள் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக அ.தி.மு.க-வின் தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ,தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கைமீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆளுநர் மும்பை பறந்துசென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு மாநிலத்தின் ஆளுநரிடம் ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு தரப்பினரும்  மனு அளிப்பதும், அந்த மனுக்கள்மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், ஓர் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெறுவதாக ஒரே ஒரு உறுப்பினர் மனு அளித்தாலும்கூட, அதனால் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது என்றால், உடனடியாக பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அரசுக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும். மற்ற மனுக்களைப் போன்று இந்த மனுவையும் ஆளுநர் கிடப்பில் போட முடியாது. ஏனெனில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர்களுக்கு உள்ள முதல் கடமையும், நடைமுறையிலுள்ள ஒற்றைக் கடமையும் தங்கள் நிர்வாகத்தில் உள்ள மாநிலத்தில், பெரும்பான்மை வலிமையுள்ள கட்சியை ஆட்சியில் அமர்த்துவதும், பெரும்பான்மை இழந்துவிட்டால் அந்த அரசை பதவி நீக்குவதும்தான். அந்தக் கடமையைக்கூட ஆளுநர் தட்டிக் கழிக்கக்கூடாது.

தினகரன் அணி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவை திரும்பப்பெற்றுவிட்ட நிலையில், பினாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. இத்தகைய சூழலில், பினாமி முதலமைச்சரை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆணையிடுவதுதான் ஆளுநர் செய்யவேண்டிய பணியாகும். இதற்காக எந்த சட்ட வல்லுநரிடமும் கருத்துக் கேட்கக்கூட தேவையில்லை. ஆனால், அதைச் செய்யாமல் தினகரன் அணியினரிடம் கடிதங்களை வாங்கியவுடன் அதைப் படித்துக்கூட பார்க்காமல், மராட்டியத்துக்கு ஆளுநர் புறப்பட்டுச் சென்றதன் பொருள் என்ன? பெரும்பான்மை வலிமை இல்லாத அரசு, எந்தக் கொள்கை முடிவும் எடுக்க இயலாத காபந்து அரசாக வேண்டுமானால் நீடிக்கலாமே தவிர, அனைத்து அதிகாரங்களும்கொண்ட அரசாக நீடிக்க இயலாது. அவ்வாறு நீடிக்க அனுமதிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயலாகும். இவையெல்லாம் இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பைக் கவனிக்கும் வித்யாசாகர் ராவுக்கு தெரியாத விஷயங்கள் அல்ல. கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சிறிய மாநிலங்களில், இத்தகைய சூழல்கள் பல முறை ஏற்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம், ஆதரவை திரும்பப் பெற்றதாகக் கடிதம் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ,ஆளுநர் மாளிகை வளாகத்தை விட்டு வெளியேறும் முன்பாகவே, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர்கள் ஆணையிட்டிருக்கின்றனர்.

அவ்வளவு ஏன்? காங்கிரஸ் ஆட்சியிலும் பாரதிய ஜனதா எதிர்க்கட்சி வரிசையிலும் உள்ள கர்நாடகம், இமாலயப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக ஒரு பிரிவு சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்தால், மாநில ஆளுநர்களின் அணுகுமுறை இப்படித்தான் இருக்குமா? அ.தி.மு.க-வின் எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணையுமா, இணையாதா? என்பது அந்த அணியில் இருப்பவர்களுக்கே உறுதியாகாத நிலையில், மராட்டியத்திலிருந்து பறந்து வந்த ஆளுநர், இரு அணித் தலைவர்களையும் கைக்கோக்க வைத்தும், பதவிப் பிரமாணம் செய்துவைத்தும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அந்த அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கொடுத்த கடிதம்மீது மட்டும் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துகிறார். இது நடுநிலையான, நேர்மையான, அரசியல் சட்டப்படி செயல்படும் ஆளுநருக்கான இலக்கணமல்ல.

இவ்விஷயத்தில் உரிய முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவது, குதிரை பேரத்துக்குத்தான் வழிவகுக்கும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஊழல் அரசு தொடர ஆளுநர் துணைபோகக்கூடாது. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக சட்டப்பேரவையை இந்த வாரத்துக்குள் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்தில் நடக்கும் அரசியல் நாடகத்தில் ஆளுநரையும் ஒரு பாத்திரமாகவே மக்கள் பார்ப்பார்கள்" என்று கூறியுள்ளார்.