Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஐ.டி. வேலை வேண்டாம்னு டீக்கடை ஆரம்பிச்சார் கணவர்... சந்தோஷமா சம்மதிச்சேன்!”

ல்லூரிப் பருவத்தில் தியேட்டர், பார்க் என்று நண்பர்களோடு சுற்றிக்கொண்டிருந்தால், “நீயெல்லாம் படிச்சு உருப்படியான வேலைக்குப் போகப் போறதில்லே, பெட்டிக் கடையிலோ, டீ கடையிலோ எடுபிடியா இருக்கப்போறே” என்று பெற்றோரிடமிருந்து பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படும். ஆனால், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முடித்து, ஐ.டியில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், அதை உதறிவிட்டு பெற்றோர் மற்றும் காதல் மனைவியின் உதவியோடு டீ கடை நடத்திவருகிறார் என்று சொன்னால் நம்புவீர்களா? 

ஐ.டி இளைஞர் சுரேஷ்

சென்னை, விருகம்பாக்கத்தில் இருக்கும் சாய் கிங் டீ ஷாப்பில், சாரல் விழும் மாலை நேரத்தில், சூடான டீயைக் கொடுத்துவிட்டுப் பேசுகிறார் சுரேஷ் ராதாகிருஷ்ணன். “பிரதர், என் சொந்த ஊர், பொள்ளாச்சி. பிறந்தது வளர்ந்தது அங்கேதான். அப்பா அம்மா ரெண்டுப் பேருமே படிக்காதவங்க. ஆனால், என் படிப்பில் ரொம்ப அக்கறை எடுத்து எல்லாம் செஞ்சாங்க. நான் 2006-ம் வருஷம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் முடிச்சுட்டு சென்னையிலுள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல சம்பளம்தானாலும், மனசுக்குள்ளே ஏதோ ஒரு குறை உறுத்திட்டே இருந்துச்சு. அதனால் வேலையை விட்டுட்டு நண்பரோடு சேர்ந்து ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சேன். அது அஞ்சு வருஷம் நடந்துச்சு. பிறகு, தனியா ஏதாவது செய்யலாமேன்னு யோசிச்சு இந்த டீ ஷாப் வெச்சேன்” என்கிறார். 

ஒரு வருடத்துக்குள் விருகம்பாக்கம், ஓ.எம்.ஆர் மற்றும் முகப்பேர் என மூன்று இடங்களில் டீ ஷாப் வைத்து உற்சாகமாகச் சுழன்று வருகிறார். ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார்’ என்பார்கள். சுரேஷின் வெற்றிக்குப் பின்னால், அம்மா வசந்தி மற்றும் மனைவி சங்கீதா இருக்கிறார்கள். 

“என் பையன் சின்ன வயசிலிருந்தே அவன் அப்பாவின் சொந்த பிசினஸில் உதவியா இருந்திருக்கான். அதனால், சொந்த வேலை செய்யும் ஆசை எப்பவும் இருந்திருக்கு. ஆனால், டீ கடை வைக்கப்போறேன்னு சொன்னதும், சொந்தக்காரங்களை நினைச்சுத்தான் பயந்தேன். 'உங்க பையன் ஐ.டி வேலையை விட்டுட்டு பிஸினஸ்னு போனான். இப்போ, அதையும் விட்டுட்டு என்ன செய்யறான்?'னு கேட்டால், டீ கடை வைக்கப்போறான்னு எப்படிச் சொல்றதுன்னு ஒரே தவிப்பா இருந்துச்சு. அந்தச் சமயத்தில் என்கிட்டே பேசி நம்பிக்கை கொடுத்தது என் மருமகள்தான். ‘லட்சம் லட்சமா சம்பாதிச்சு என்ன பிரயோஜனம் அத்தை? மனசுக்குப் பிடிச்ச வேலையைச் செஞ்சுட்டு சந்தோஷமா வீட்டுக்கு வர்றதுதானே முக்கியம்’னு சொல்லிப் புரியவைச்சா. அப்புறம், நானும் அவனை ஊக்கப்படுத்தி டீ கடை வைக்க உதவி செஞ்சேன். ஐ.டி. வேலையில் கை நிறையச் சம்பளத்தோடு இருந்ததைவிட, இப்போ ஆக்ட்டிவ்வா இருக்கான். பிள்ளையின் சிரிச்ச முகத்தைப் பார்க்கிறதைவிட ஒரு தாய்க்கு பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கு?” என்று நெகிழ்கிறார் வசந்தி. 

சுரேஷ் ராதாகிருஷ்ணன்-சங்கீதா

சுரேஷின் காதல் மனைவி சங்கீதா, “நாங்க ரெண்டு பேரும் காலேஜ் படிக்கிறப்பலேருந்து நல்ல ஃப்ரெண்ட்ஸ். அந்த நட்பு காதலாச்சு. எந்த ஒரு விஷயத்தை செய்யறதுக்கு முன்னாடியும் ரெண்டுப் பேரும் மனசுவிட்டுப் பேசுவோம். அப்படித்தான், 'வேலையை விடப் போறேன்'னு அவர் என்கிட்ட சொன்னப்ப, அங்கே நான் ஒரு மனைவியா யோசிக்காம. ஒரு தோழியா யோசிச்சேன். 'இதுதான் உங்களுக்குச் சந்தோஷத்தையும் எனர்ஜியையும் கொடுக்கும். தாராளமா செய்யலாம்'னு சொன்னேன். கடையை ஆரம்பிச்சதும், ஆர்டர் கொடுத்திருக்கிற கம்பெனிகளுக்கு பிளாஸ்கில் டீ எடுத்துக்கிட்டு வேகவேகமா கிளம்புவார். அதைப் பார்த்தபோது, ஆரம்பத்தில் ஒரு மனைவியா கண் கலங்கினேன். ஆனால், எனக்குள் இருக்கும் தோழி, அவரை ஊக்கப்படுத்தணும்னு சொல்லிச்சு. ஆரம்பத்தில், 'டீ ஷாப் ஓனரே'னு கிண்டலடிச்ச சிலர், இப்போ இவரின் வளர்ச்சியைப் பார்த்து வாயடைச்சு நிற்கிறாங்க. ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் கப் டீ வியாபாரம் ஆகுது. சென்னையில் இருக்கும் பல கம்பெனிகளுக்கு எங்க ஷாப்பில் இருந்து டீ சப்ளை ஆகுது. இப்பவும் 'என்னடி உன் வீட்டுக்காரர் டீ ஷாப் வெச்சிருக்காராமே?'னு தோழிகள் யாராவது கேட்டால், 'ஆமாம்! சிங்கத்துக்கு வாலா இருக்குறதவிட பூனைக்குத் தலையா இருக்கிறதை நாங்க பெருமையா நினைக்கிறோம்'னு கம்பீரமா சொல்வேன்” எனப் புன்னகைக்கிறார் சங்கீதா. 

இவர்களின் இரண்டரை வயது பெண் குழந்தையான மகிழினி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இன்னொரு பூஸ்ட்டாக இருக்கிறார். கணவரைப் புரிந்த மனைவியும், நந்தவனமாகக் குழந்தையும் இருக்கும்போது எல்லோரும் தொழிலதிபர்களே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement