வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (23/08/2017)

கடைசி தொடர்பு:14:20 (23/08/2017)

'அ.தி.மு.க-வை பிளவுப்படுத்த காங்கிரஸ் நினைக்கிறது' - ஓ.பி.எஸ் அணி குற்றச்சாட்டு

'தினகரனிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் தங்கியிருக்கின்றனர்' என்று ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார்.

ஓபிஎஸ் அணி

அ.தி.மு.க-வில் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இணைந்ததையடுத்து, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் பாணியில் புதுச்சேரி தனியார் பீச் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், இன்று ஓ.பி.ஸ் அணியைச் சேர்ந்தவரும் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஓம்சக்தி சேகர், எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரிசார்ட்டின் முன்பு டி.டி.வி தினகரனின் உருவ பொம்மையை எரித்து, தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ஓம்சக்தி சேகர், ’டி.டி.வி தினகரன், சசிகலாவுடன் சென்றால் சிறை நிச்சயம். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை நிரந்தர பொதுச் செயலாளர் என்றுமே ஜெயலலிதாதான். எம்.எல்.ஏ-க்கள் அதை நினைத்துத் திரும்பி வர வேண்டும். பணம் கொடுத்துதான் எம்.எல்.ஏ-க்களை தினகரன் அழைத்துவந்து இங்கே அடைத்துவைத்திருக்கிறார். அதேபோல, பணம் வாங்கிக்கொண்டுதான் எம்.எல்.ஏ-க்களும் இந்த ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். ஆனால், அந்தப் பணத்தை எந்த வகையில் பெற்றார்கள் என்று தெரியாது. எம்.எல்.ஏ-க்கள் விலை போகக்கூடாது. அடைத்துவைத்திருக்கும் எம்.எல்.ஏ-க்களிடம் பேசினேன்.

விரைவில் எங்கள் பக்கம் வருவதாக என்னிடம் தெரிவித்திருக்கின்றனர். அ.தி.மு.க-வை பிளவுப்படுத்த புதுச்சேரி காங்கிரஸ் அரசு நினைக்கிறது. அதனால்தான் இந்த விவகாரத்தில் மௌனம் காத்துவருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள், புதுச்சேரி விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஐ.ஜி ஆகியோரிடம் மனு அளிக்க இருக்கின்றேன்’ என்று தெரிவித்தார். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க