Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நடப்பது பிரதமர் மோடியின் நாடகம்’- தகிக்கும் திருநாவுக்கரசர்

அ.தி.மு.க அரசு, தமிழக நலன்களைத் தாரைவார்த்துவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். 

திருநாவுக்கரசர்


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து தோல்வி மேல் தோல்வியடைந்து வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நேற்று கூறிவிட்ட நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பட்டியல் வெளியிடுவதன்மூலம் 4 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு, 500 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் அவல நிலை இன்று ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தின் அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரையோடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை வளர்க்கப்பட்ட நிலையில், இடிபோல தாக்குகிற வகையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறியிருக்கிறார். நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் சதிசெய்து, தமிழக அரசை நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கின்றனர். இது, தமிழகத்துக்கு நரேந்திர மோடி அரசு செய்த மிகப்பெரிய பச்சைத் துரோகம். 

மடியில் கனம் இருப்பதால், எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து நரேந்திர மோடியிடம் அ.தி.மு.க-வை அடகுவைத்து, இணைப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். இதற்கு விலையாக, தமிழக நலன்களைத் தாரைவார்த்திருக்கிறார்கள். கடந்த 90 ஆண்டுகளாக, தமிழகம் பின்பற்றி வந்த சமூக நீதிக் கொள்கை, அ.தி.மு.க. அரசின் ஒத்துழைப்போடு மத்திய பா.ஜ.க. அரசால் பகிரங்கமாக குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொடிய பாவத்தைச் செய்த மத்திய, மாநில அரசுகளை 7 கோடி தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். இதற்குரிய கடுமையான விலையைக் கொடுக்காமல் எவரும் தப்ப முடியாது. 

நீட் மோசடியால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை படுபாதாளத்தில் தள்ளி, சமூக நீதிக் கொள்கையை குழிதோண்டிப் புதைத்த மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்த அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணி அளவில் சென்னையில் நடைபெற உள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் காலம்காலமாக காப்பாற்றப்பட்டு, பின்பற்றப்பட்டுவருகின்ற சமூக நீதிக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து நமது உரிமைகளை மீட்போம். 

இந்த நிலையில், நரேந்திர மோடி அரங்கேற்றிய இணைப்பு நாடகம் ஒரு பக்கம் நடக்கும்போது, இன்னொரு பக்கம் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதன்மூலம், அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆளுநர் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சட்டமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ராமசாமி ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை வலியுறுத்தியுள்ளனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement